0 1 min 3 mths

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள். நீதிமொழிகள்: 1.7

நவீன காலத்தில் அறிவைச் சம்பாதிக்க மனிதன் நேரம் பார்க்காமல் ஓடுகிறான். புதுபுது கண்டுபிடிப்புகள், செய்திகள், எண்ணங்கள், யோசனைகள் என்று பல காரியங்களின் மூலம் தனது ஞானத்தை பெருக்கிக் கொள்ள பிரயாசப்படுகிறான். ஆனால் எவ்வளவு தான் நாம் கற்றுக் கொண்டாலும், கல்விக்கு முடிவோ, கற்க வயதோ இல்லை என்று உலகமே ஒப்புக் கொள்கிறது.

இந்நிலையில் கர்த்தரை நம்பி, அவருக்கு பயந்து வாழும் போது, அதுவே நம் வாழ்க்கையில் ஞானத்தின் ஆரம்பமாக இருக்கும் என்று நீதிமொழிகளில் ஞானி சாலொமோன் குறிப்பிட்டுள்ளார். தேவனிடம் இருந்து ஞானத்தைக் கேட்டு, பெற்றுக் கொண்ட சாலொமோன் பூமியில் உள்ள பல காரியங்களைக் குறித்து ஆராய்ந்தார்.

அதன் முடிவுகளை வரும் தலைமுறைக்கு பயன்படும் வகையில், நீதிமொழிகளாக எழுதி வைத்துள்ளார். அந்த வரிசையில், பூமியில் ஞானமுள்ளவைகளாக நான்கு உயிரினங்கள் (நீதிமொழிகள்:30.24) இருப்பதாக, சாலொமோன் குறிப்பிடுகிறார்.

இந்தப் பூமியில் ஞானமுள்ளவர்களாக மாற விரும்புகிறவர்கள், அவை செயல்படும் முறைகளைக் கற்று கொண்டு பின்பற்றினாலே போதுமானது. எனவே போட்டி மிகுந்த இந்த உலகில், இரட்சிக்கப்பட்டு கர்த்தருக்கு பயந்து வாழ்வதன் மூலம் அந்த ஞானத்தின் ஆரம்பத்தைப் பெற்றுள்ளோம்.

ஆனால் அதே நிலையில் தொடர்ந்து வாழ முடியாது. அதில் ஒரு வளர்ச்சி நமக்கு தேவைப்படுகிறது. இந்த வேதப்பாடத்தின் தியான வசனத்தில், மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள் என்று வாசிக்கிறோம். எனவே நாம் பெற்றுக் கொண்ட ஞானத்தை அசட்டைச் செய்யாமல், ஞானத்தின் வளர்ச்சிக்கு எதுவாக சாலொமோன் காட்டியுள்ள உயிரினங்களைக் குறித்து அறிந்து கொள்வது நல்லது.

எனவே ஞானி சாலொமோன் குறிப்பிட்டுள்ள உயிரினங்களின் சிறப்புகளையும், செயல்பாடுகளையும் குறித்து இந்த வேதப்பாடத்தில் தொடர்ந்து காண்போம்.

1. எறும்பு:

பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு. என்று நீதிமொழிகள்.30.24ல் வாசிக்கிறோம். இந்த நான்கில் முதலில் வருவது எறும்பு. உலகில் பல வகையான எறும்புகள் இருக்கின்றன. ஆனால் அவற்றின் பெரும்பாலான பழக்கங்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.

கூட்டத்தோடு வாழும் தன்மைக் கொண்ட எறும்புகளைக் குறித்து, அடுத்த வசனத்தில் (நீதிமொழிகள்.30.25) அற்பமான ஜெந்து என்று வாசிக்கிறோம். அதாவது மனிதனுடைய பார்வையில் அவை அற்பமாக தெரிகின்றன. ஆனால் தேவனுடைய பார்வையில் அவை மகா ஞானமுள்ளவைகளாக படைக்கப்பட்டுள்ளன.

அதை நிரூபிக்கும் வகையில், நீதிமொழிகள்.6.6ல் எறும்பிடம் கற்று கொள் என்று வாசிக்கிறோம். எனவே எறும்புகளிடம் உள்ள நல்ல பண்புகளை நாம் அறிந்து கொண்டால், அது நம்மையும் ஞானமுள்ளவர்களாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

எறும்புகள் எப்போதும் கூட்டமாக வாழக் கூடியவை. தேவனால் பல்வேறு மொழி, இனம், ஜாதி, மதங்களில் இருந்த நாம் இன்று தேவ சமூகத்தில் ஒரே தகப்பனின் பிள்ளைகளாக அழைக்கப்பட்டு இருக்கிறோம். மேலும் நமக்கு ஒரே இரட்சகர், ஒரே வேதம் என்று வாழ்கிறோம்.

இந்நிலையில் தன் கூட்டத்தோடு எந்த சண்டையும் சச்சரவும் இல்லாமல் எறும்புகள் இருப்பது போல, நாமும் சபை பாகுபாடுகளில் இருந்து ஜாதி, மொழி என எந்த பாகுபாடுகளும் காட்டக் கூடாது. அப்படி காட்டினால், நாம் எறும்புகளைப் போல ஞானமுள்ளவர்களாக மாற முடியாது.

மற்றொரு எறும்பின் சிறப்பு என்னவென்றால், குறிப்பிட்ட இடத்தில் உள்ள இரை தேட செல்லும் போது, அதிக நுண்நுகர்வு திறன் கொண்ட ஒரு எறும்பு முன்னே சென்று பாதை முழுவதும் ஒரு வித பொருளை கொட்டி கொண்டே செல்கிறது.

அந்த வழிக்காட்டுதலை பின்பற்றி, மற்ற எறும்புகள் ஒரே சீரான வரிசையில் இரை இருக்கும் இடத்தை அடைகின்றன. வசிக்கும் இடத்தில் இருந்து இரைக்கும், இரை இருக்கும் இடத்தில் இருந்து வசிப்பிடத்திற்கு பாதை தவறாமல், ஒரே வரிசையில் எல்லா எறும்புகளும் செல்லுகின்றன.

பரலோகத்திற்கு செல்லும் பாதை தெரியாமல் இருந்த நமக்கு, இரட்சகர் இயேசு மனிதனாக வந்த வழிக்காட்டினார். இன்னும் தெளிவாக கூறினால், வாழ்ந்து காட்டினார். அவர் காட்டிய பாதையில் விலகாமல் சென்றால், கண்டிப்பாக, அந்த மோட்ச ராஜ்ஜியத்தை அடையலாம்.

எறும்புகள் செல்லும் வரிசையில், எந்த மோதலும் ஏற்படுவதில்லை. காரணம், எல்லா எறும்புகளும் ஒரே நோக்கத்தோடு செயல்படுகின்றன. இதேபோல, நம் நோக்கமும் பரலோகம் சென்று இயேசுவை பார்க்க வேண்டும் என்று மட்டும் இருந்தால், மற்றவர்களுடன் எந்தவிதமான சண்டையும் வராது. அது நாம் வசிக்கும் தெரு, வேலை செய்யும் இடம், சொந்தங்கள், சபை என்று எல்லா தளங்களுக்கும் பொருந்தும்.

இரை இருக்கும் இடத்தில் இருந்து வசிக்கும் இடத்திற்கு வரும் எறும்புகளை, இரையை நோக்கி செல்லும் எறும்புகள் சந்திக்கும் போது, ஒருவருக்கு ஒருவர் வாழ்த்தி கொள்கிறார்கள். இதன்மூலம் இரு முனைகளில் இருந்து, தற்போது இவர்கள் இருக்கும் இடம் வரை எந்த பிரச்சனையும் இல்லை என்று உறுதிப்படுத்தி கொள்கிறார்கள்.

இதேபோல கிறிஸ்தவ பயணத்தில் உள்ள பாடுகள், நிந்தைகள், நெருக்கங்கள், ஆசீர்வாதங்கள், நன்மைகள் ஆகியவை குறித்து வாழ்ந்து முடித்த, வாழ்ந்து கொண்டிருக்கிற பல பரிசுத்தவான்கள், விசுவாசிகள், ஊழியர்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பரலோக பயணத்தை குறித்த எல்லா சந்தேகங்களையும், நாம் கேட்கும் மற்றவர்களின் சாட்சிகள் மற்றும் தேவ செய்திகள் மூலம் தெளிவுப்படுத்தி கொள்ளலாம். ஆனால் இன்று நாம் எதிர்கொள்ளும் தவறான உபதேசங்கள் போல, எறும்புகள் இடையே தவறான தகவல்கள் பகிரப்படுவது இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

எறும்புகளின் இன்னொரு சிறப்பு பண்பு என்னவென்றால், அவை பார்வைக்கு சிறியவையாக இருந்தாலும், தன்னை விட 40 மடங்கு எடையை தூக்கி செல்லும் திறன் படைத்தவை. இதேபோல கிறிஸ்துவிற்காக பாடுகளை சகிப்பதில் அவரது சீஷர்களாகிய நாம் சிறந்தவர்கள் தான். இதற்கான தைரியத்தையும், தேவ பலத்தையும் பெற்று உள்ளோம். ஆனால் பல கிறிஸ்தவர்களும் இதை நம்புவதும் இல்லை. அதற்கு தயாராகவும் இல்லை.

எறும்புகள் தன்னால் தனியாக தூக்க முடியாத அதிக எடையுள்ள இரையை, பல எறும்புகள் சேர்ந்து தூக்கி செல்கின்றன. கிறிஸ்துவ வாழ்க்கையிலும் மற்றவர்களின் கஷ்டங்களில் நாம் உதவி செய்து, அதை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. இதை குறிக்கும் வகையில், உன்னை போல பிறரையும் நேசி என்று இயேசு (லூக்கா:10.27) கூறினார்.

இங்கு பிறர் என்ற வார்த்தைக்கு சந்தேகம் கேட்கும், நம்மை போன்ற ஒருவருக்கு, தெளிவாக புரியும் வகையில், ஒரு கதையை இயேசு (லூக்கா:10.30-37) கூறுகிறார். இந்த கதையில் எருலேமில் இருந்து எரிகோவிற்கு செல்லும் யூதருக்கு, சமாரியன் என்ற வேறு ஜாதிக்காரன் உதவுகிறார். இன்னும் தெளிவாக கூறினால், யூதர்களுக்கு சமாரியர்கள் பரம எதிரிகள்.

அப்படியென்றால் நல்ல சமாரியனாகிய இயேசு, நம்மிடமும் எதிரிக்கு கூட உதவும் பண்பை தான் விரும்புகிறார் என்பது தெளிவாகிறது. எனவே சபை மட்டுமின்றி, அலுவலகம், வசிக்கும் தெரு, ஊர் என்று நமது உதவும் பண்பு எறும்பை போல விரிவடைய வேண்டும்.

எறும்பின் முக்கிய பண்பாக, நீதிமொழிகள்:30.25ல் காண்கிறோம். அதாவது கோடைக்காலத்தில் தன் ஆகாரத்தை சேர்த்து வைக்கின்றன. கோடையில் ஆகாரம் கிடைக்கும் போது, அவற்றை பத்திரமான இடத்தில் சேமித்து வைத்து, மழைக்காலத்தில் அதன்மூலம் உயிர் வாழ்கின்றன.

இந்த எறும்புகளை போல, நாமும் வேத வசனங்கள் கிடைக்கும் போது சேமித்து வைத்து கொள்ள வேண்டும். அதாவது நாம் கேட்கும் தேவ செய்திகளை ஏதாவது எழுதுதல் மற்றும் பதிவு செய்து கொள்ளலாம். இதன்மூலம் தேவாலயங்களுக்கு செல்ல முடியாத நிலை வரும் போது, அந்த செய்திகளை வாசிக்கலாம் அல்லது கேட்கலாம்.

ஆனால், நவீன கிறிஸ்துவர்கள் இடையே இந்த பழக்கம் முற்றிலும் குறைந்துவிட்டது. சிலர் தேவாலயங்களுக்கு சென்று கேட்கிற காரியங்களை, அங்கேயே விட்டு விட்டு வருபவர்களும் உண்டு. இதனால் தவிர்க்க முடியாத காலங்களில், அவர்கள் வழிவிலகி அல்லது பின்மாறி, ஆவியில் மரித்தவர்களாகி விடுகிறார்கள்.

இப்படி பல சிறந்த பழக்கங்களைக் கொண்ட எறும்புகளை தான் மிகா ஞானமுள்ளவை என்று வேதம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவைகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மேற்கண்ட காரியங்களைப் பின்பற்றினால், ஆவிக்குரிய வளர்ச்சியுடன் ஞானியாக மாறலாம்.

(பாகம் 2 – தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *