0 1 min 3 mths

குழிமுசல்:

பரிசுத்த வேதாகமம் குறிப்பிடும் மற்றொரு மகா ஞானமான விலங்கு குழிமுசல். பாலூட்டிகள் குடும்பத்தைச் சேர்ந்த இவை, சாதாரண முயல், யானை போன்ற விலங்குகளின் சில பண்புகளைக் கொண்டவை என்று அறிவியல் உலகம் குறிப்பிடுகிறது.

இந்த குழிமுசல்களைப் பற்றி நீதிமொழிகள்:30.26ல் சத்துவமற்ற ஜெந்து என்று காண்கிறோம். இவை உருவத்தில் சிறியவை மட்டுமின்றி, பெலவீனமான விலங்கும் கூட. பெரிய விலங்குகள் மற்றும் எதிரிகளிடம் இருந்து தப்பிக்க, அவை மலைகளின் பொந்துகளில் வாழ்கின்றன.

உண்மையான கிறிஸ்தவர்கள், தங்களுக்கு தீங்கு செய்பவர்களின் மீது கோபப்படுவது இல்லை. அவர்களை பழிவாங்கமாட்டார்கள். எல்லாரையும் மன்னித்து விடுவார்கள். அநீதியான சந்தோஷங்களை அனுபவிப்பது இல்லை. இதனால் உலகில் பலவீனமான கூட்டமாக, உண்மையான கிறிஸ்தவர்கள் தெரிகிறார்கள்.

இந்நிலையில், நமக்கு எதிராக போராடும் சத்துருவாகிய பிசாசின் வல்லமைகளை மேற்கொள்ள, நமது வீடுகளை கன்மலையில் அமைக்க வேண்டியுள்ளது. அந்த கன்மலை கிறிஸ்துவே என்று 1கொரிந்தியர்:10.4ல் காண்கிறோம்.

சங்கீதம்: 104.18ல் கன்மலைகள் குழிமுசல்களுக்கு அடைக்கலம். என்று காண்கிறோம். எனவே கன்மலையாகிய கிறிஸ்துவே நமக்கு அடைக்கலமாக உள்ளார். அவர் மீது கட்டப்படும் போது, நாம் உறுதியாக நிற்க முடியும். வாழ்க்கையில், எந்த மாதிரியான புயல் வந்தாலும், நாம் அசைக்கப்படுவதில்லை.

மேலும் குழிமுசலானது அசை போடுகிற விலங்காக இருந்தாலும், அதற்கு விரிகுளம்பு இல்லை. இதனால் அது அசுத்தமான விலங்கு என்று லேவியராகமம்:11.5, உபாகமம்:14.7 போன்ற வசனங்களில் காணலாம். அதாவது அது சாப்பிட தகுதி இல்லாதது.

நாமும் ஒரு காலத்தில் அசுத்தமான மனிதர்களாக, தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு தகுதியில்லாத மக்களாக இருந்தோம். நன்மை -தீமைகளுக்கு இடையிலான வித்தியாசம் அறியாதவர்களாக இருந்தோம். அந்த நிலையில் இருந்த நம்மை, புதிய ஏற்பாட்டில் இயேசுவின் தியாகம் மூலம் பரலோக அழைப்பிற்கு தகுதியுள்ளவர்களாக மாற்றப்பட்டோம்.

மற்ற விலங்குகளுடன் ஒப்பிடும் போது, குழிமுசல்களின் உடல் வெப்பம் சீரற்றதாக இருக்கும். இதனால் அவை கும்பலாக சேர்ந்து வாழ்கின்றன. மேலும் சூரிய ஒளியில் அவ்வப்போது, நின்று தனது உடலின் வெப்பத்தை அதிகரித்து கொள்ளும்.

இதேபோல, நமது ஆவிக்குரிய நிலை எப்போதும் சீராக இருப்பதில்லை. உலகில் வாழும் நாம், சில போராட்டங்களில் வெற்றி பெறுகிறோம். அப்போது தேவனோடு இன்னும் கிட்ட சேர்கிறோம். தோல்வி அடையும் போது, உலகத்திற்குள் சரிந்து போகிறோம்.

இந்த சீரற்ற ஆவிக்குரிய நிலையை களைந்து, நமது ஆவியில் எப்போதும் அனலாக இருக்கவே, ஆவிக்குரிய கூட்டங்களில் பங்கேற்கிறோம். தேவாலயத்தில் ஒருமனதோடு தேவ சமூகத்திற்குள் வரும் போது, நமக்குள் இருக்கும் குளிர்ந்து போன அனுபவம் நீங்கி, ஆவியில் அனலுண்டாகிறது.

இது தவிர, நீதியின் சூரியனாகிய இயேசுவின் சமூகத்தில் அவ்வப்போது காத்திருந்து, அவரிடம் வல்லமையை பெற்று கொள்கிறோம். இதனால் தனிப்பட்ட முறையிலும், ஆவிக்குரிய கூட்டத்தோடு சேர்ந்தும், குழிமுசல்களைப் போல, வெப்பநிலையை பாதுகாத்து கொள்ளலாம்.

மற்ற விலங்குகள் அல்லது எதிரிகளால் ஆபத்து ஏற்படும் என்று குழிமுசல் தனியாக வாழவோ அல்லது சூரியனை காணாமல் அதன் கூட்டிற்குள்ளேயே இருந்தாலோ, அவற்றின் உடல் வெப்பநிலை குறைந்து சாக நேரிடும்.

தேவாலயங்களில் யாரும் சரியில்லை என்று குறை கூறி, சபைக்கு செல்லாமல் இருப்பவர்களும், எனக்கு நேரமில்லை என்று தனி ஜெபத்தில் தேவனோடு பேசாமல் இருப்பவர்களும், குழிமுசல்களைப் போல ஆவிக்குரிய சாவை சந்திக்க வேண்டியதாகும்.

குழிமுசலின் பற்கள் வாழ்நாள் முழுவதும் வளரும் தன்மைக் கொண்டவை. இதேபோல ஒவ்வொரு கிறிஸ்தவனின் வளர்ச்சியும், வாழ்நாள் முழுவதும் இருக்கும். ஏனெனில் வாழ்நாள் முழுவதும், வேதத்தையும், தேவனுடைய செயல்களையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

குழிமுசல்களின் கால்களில் ரப்பர் தட்டுகள் போன்ற அமைப்பும், அதில் எண்ணற்ற வேர்வை சுரப்பிகளும் உள்ளன. இதன்மூலம் பாறைகளின் மீது இந்த விலங்கு வேகமாகவும் உறுதியாகவும் நடமாட முடியும்.

இந்த ரப்பர் தட்டுகள் போன்ற அமைப்பு, நமக்கு அளிக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய ஆயுதங்களின் பட்டியலில் காண முடிகிறது. சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையை கால்களிலே தொடுத்திருக்க வேண்டும் என்று எபேசியர்:6.15ல் காண்கிறோம்.

நாம் அறிவிக்கும் சுவிசேஷம் சமாதானத்திற்குரியதாக இருக்க வேண்டும். மேலும் சுவிசேஷம் அறிவிக்க தகுந்த பரிசுத்த ஆவியின் வல்லமையை தரித்து கொள்ள வேண்டும். பரிசுத்தாவின் பலத்தோடு செய்யும் சுவிசேஷப் பணிகளால் மட்டுமே, பாறை போன்ற கடினமான பாதைகளில் பயணிக்க முடியும்.

சுவிசேஷ பணிகளில் வரும் பிரச்சனைகள், கஷ்டங்கள், நெருக்கங்களில் நாம் தளர்ந்து போகாமல், கிறிஸ்துவை மட்டுமே சார்ந்து வாழவும் முடியும். இல்லாவிட்டால், இரட்சிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையை விட, விரோதிகளின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும்.

மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, சுவிசேஷம் அறிவிப்பதில் சோர்ந்து போய் விடுவோம். பிறகு, நாம் முற்காலத்தில் செய்தவைகளையே பெருமையாக பேசுவதை வழக்கமாக மாற்றி கொள்வோம். இந்த செயலை எந்த வகையிலும், தேவன் அங்கீகரிப்பதும் இல்லை.

குழிமுசல்களின் சிறந்த சிறுநீரகங்கள், அதன் உடலில் உள்ள நீர்ம நிலை நன்றாக பராமரிக்க கூடியவை. இதனால் தவிர்க்க முடியாத கடினமான காலநிலைகளிலும் உயிர் வாழ முடிகிறது.

நமக்கு எப்போதும் வேத வசனங்களை வாசிக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்று கூற முடியாது. சில நாட்களில் நமக்கு கிடைக்கும் அதிக நேரத்தையும் காலத்தையும் சரியாக பயன்படுத்தி, அந்த வசனங்களை மனப்பாடம் செய்து கொண்டால், அவை அவ்வப்போது நம்மோடு பேசும். தியானத்தில் வரும் போது, இன்பமாக இருக்கும்.

குழிமுசல்களிடம் உள்ள மேற்கண்ட நல்ல காரியங்களை நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்பற்றினால், சிறப்பான ஆவிக்குரிய வளர்ச்சியை பெறலாம் என்பதோடு, தேவனுடைய பார்வையில் மகா ஞானமுள்ளவர்களாகவும் காணப்படுவோம்.

(பாகம் 3 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *