0 1 min 3 mths

வெட்டுக்கிளி:

எறும்புகள், குழிமுசல்களுக்கு அடுத்தப்படியாக வெட்டுக்கிளிகளை மிகவும் ஞானமுள்ளவை என்று வேதம் குறிப்பிடுகிறது. நீதிமொழிகள்:30.27 வசனத்தில் வெட்டுக்கிளியின் சிறப்பு தன்மை குறித்து காணலாம்.

வெட்டுக்கிளிகள் பொதுவாக தனித்து வாழும் தன்மைக் கொண்டவை. ஆனால் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், கூட்டமாக இணைந்து கொள்ளும். மேலும் தனது பழக்க வழக்கங்களையும் மாற்றி கொள்ளும் திறன் கொண்டவை.

இந்த வெட்டுக்கிளிகளைப் போல ஒவ்வொரு இரட்சிக்கப்பட்ட நபரும் தேவனோடு தனித்து வாழும் தன்மைக் கொண்டவராக இருக்க வேண்டும். தனக்கான ஆவிக்குரிய உணவை தானே தேடிக் கொள்ளும் திறன் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். கூட்டமாக மட்டுமே என்னால் கிறிஸ்துவ வாழ்க்கையில் வளர முடியும் என்று பழகிக் கொள்ளக் கூடாது.

கொரோனா ஊரடங்கு போன்ற நேரங்களில் தேவாலயங்களில் கூட்டங்கள் நடைபெறவில்லை. இதனால் பலரும் பின்மாற்றத்தில் போக, முக்கிய காரணமாக அமைந்தது இந்த பழக்கம் தான். ஊரடங்கு நேரத்தில் சிலர் முழுமையாக தேவ சமூகத்தின் அனுபவத்தையே இழந்து தவித்ததாக கூறினார்கள்.

வெட்டுக்கிளி போல, தனித்து வாழ்வது என்பது தனி ஜெபத்தையும் குறிக்கும். அதாவது நமக்கும் தேவனுக்கும் ஒரு தனிப்பட்ட உறவு இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்களுக்கு எந்தொரு ஊரடங்கும் பெரிய பிரச்சனையாக இருக்காது.

கிறிஸ்தவ வாழ்க்கையில் எப்போதும் நம்மை உற்சாகப்படுத்தவும், ஊக்கவிக்கவும் பின்னால் ஆட்கள் இருப்பார்கள் என்று கூற முடியாது. யோசேப்பை போல நாம் தனிமையாக கைவிடப்பட்டாலும், தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இப்படி கூறியவுடன் தேவாலயத்திற்கு போகவே வேண்டாமா என்ற குழப்பம் ஏற்படக் கூடாது. தேவ மக்களோடு உள்ள கூட்டுறவும் நமக்கு தேவை தான். தனித்து வாழும் தன்மை கொண்ட வெட்டுக்கிளிகள், சில நேரங்களில் கூட்டமாக இணைந்து செயல்படும் பழக்கமும் கொண்டவை.

ஏனெனில் சிலர், தனிமையில் சிறப்பாக ஜெபிப்பார்கள். ஆனால் பிறருடன் இணைந்து செயல்படமாட்டார்கள். ஊழியங்களில் பிறருடன் ஒத்துப் போகமாட்டார்கள். கேட்டால், என் ஆவி அவர்களுடன் ஒத்துப் போவதில்லை என்று கூறுவார்கள். எல்லாருக்கும் ஒரே பரிசுத்தாவி அளிக்கப்பட்டிருக்க, இரட்சிக்கப்பட்ட ஒருவருடன் மற்றொருவரின் ஆவி ஒத்துப் போகாமல் போவது எப்படி என்று தெரியவில்லை.

இன்னும் சிலர் எங்கு ஜெபித்தாலும் தேவன் கேட்கிறார். அதற்கு தேவாலயத்திற்கு தான் போகணுமா? என்று எந்த கூட்டங்களுக்கும் போகமாட்டார்கள். நான் தனியாக ஜெபித்து கொள்கிறேன் என்பார்கள். அதுவும் தவறு தான். வெட்டுக்கிளியை முன்னிறுத்தி பார்க்கும் போது, இது ஒரு ஞானம் உள்ள செயல் அல்ல எனலாம்.

எனவே குடும்பத்தில், தேவாலயங்களில் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொண்டு, யாவரோடும் அன்புடனும் ஐக்கியத்துடனும் செயல்படுவோம். அதே நேரத்தில் தனி ஜெபத்தில் தேவனோடு உள்ள ஐக்கியத்தையும் விட்டுவிடாது இருப்போம்.

வெட்டுக்கிளிகள் கூட்டமாக இணையும் போது, அபரிமிதமாக பெருகும் தன்மை கொண்டவை. இதை சமீபத்தில் வெளியான செய்திகளில் கண்டிருப்போம். வட இந்திய பகுதிகளிலும், பாகிஸ்தான், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் வெட்டுக்கிளிகள் கூட்டமாக இணைந்து பெருகி, பல ஆயிரம் ஏக்கர்களில் இருந்த பயிர்களை அழித்தன.

இதேபோல இரட்சிக்கப்பட்டவர்கள் கூட்டமாக இணையும் போது, புதியவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும். இதற்கு இரட்சிக்கப்பட்டவர்களின் செயல்பாடு மற்றும் பேச்சு ஆகியவை சாட்சி உள்ளதாக இருக்க வேண்டும். இன்றைய கிறிஸ்தவர்கள் இணையும் போது, பிறரை குற்றம் கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

வேலை செய்யும் இடத்தில், குடும்பத்தில், சபையில் என தாங்கள் இருக்கும் இடத்தில் உள்ள சகநபர்களின் குற்றங்களை, பகிர்ந்து கொள்கிறார்கள். இதனால் கூறுபவருக்கோ, கேட்பவருக்கோ எந்த பயனும் ஏற்பட போவதில்லை. இடறலும் பின்மாற்றமும் மட்டுமே ஏற்படும்.

மேலும் இவர்களின் பேச்சை கேட்கும் பிறருக்கு, இரட்சிக்கப்படவோ, தேவனுடைய அன்பை அறிந்து கொள்ளவோ வாய்ப்பு கிடைக்காமல் போகும்.

இப்படி வெட்டுக்கிளிகளைப் போல, தனித்து வாழ்ந்தாலும் கூட்டமாக சேர்ந்தாலும் தேவனோடு ஐக்கியமும், பிறரிடம் தேவ அன்பையும் காட்டுவோம். நம் பேச்சு, செயல்பாடு ஆகியவை பிறரின் இரட்சிப்பிற்கு காரணமாக அமையட்டும். அப்போது நாமும் வெட்டுக்கிளியை போல, தேவனுடைய பார்வையில் ஞானமுள்ளவர்களின் பட்டியலில் இணைய முடியும்.

(பாகம் 4 – தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *