
பரிசுத்த வேதாகமத்தை தினமும் வாசிக்கும் பழக்கம் கொண்டவர்களில், பெரும்பாலானோருக்கு அதை தவறாகவோ, திருத்தியோ பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிந்திருக்கும். மேலும் வேதத்தில் உள்ள வார்த்தைகளில் ஒரு எழுத்தையோ, ஒரு உறுப்பையோ தவறாக பயன்படுத்துவோருக்கு நியாயத்தீர்ப்பு நாளில் தண்டனை கிடைக்கும் என்றும் வேதத்தில் (வெளிப்படுத்தின விஷேசம்:22.18) காண்கிறோம்.
இப்படியிருக்க, கிறிஸ்தவ வீடுகளில் வழக்கமாக பயன்படுத்தும் வசனங்களை நாம் எப்படி தவறாக கூறுகிறோம் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இதன்மூலம் யாரையும் குற்றப்படுத்த வேண்டும் என்பது எங்களின் நோக்கம் அல்ல. மாறாக, அதை அறிந்து திருத்திக் கொள்ள வாசகர்களுக்கு உதவ நினைக்கிறோம்.
கேட்டது:
சமீபத்தில் ஒரு தேவாலயத்தில் சிலர் கூறிய சாட்சியில் “நாங்கள் நிற்பதும், நிர்மூலமாகாது இருப்பது தேவனின் சுத்த கிருபையே” என்ற வசனத்தை கூறினர். இதை பல கிறிஸ்தவர்களும் பயன்படுத்தும் வசனம் என்றாலும், இந்த வசனத்தை வாசித்து பார்த்தால், திருத்தம் செய்யப்பட்டிருப்பதை காணலாம்.
சிந்தித்தது:
புலம்பல்:3.22-ல் உள்ள அந்த வசனம் – “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை” என்று உள்ளது. ஆனால் இன்றைய கிறிஸ்தவர்கள் இந்த வசனத்தை பயன்படுத்தும் போது, “கர்த்தருடைய சுத்த கிருபையே” என்கிறார்கள். கர்த்தருடைய கிருபையில் சுத்தம், அசுத்தம் என்றெல்லாம் வேறுபாடு எதுவுமில்லை. மேலும் நாம் நிர்மூலமாகாதிருக்கிறது என்பதுடன் நிற்பதும் என்ற வார்த்தையின் சேர்க்கையை காணலாம்.
இதில் தவறு எப்படி ஏற்படுகிறது என்றால், நாம் பயன்படுத்தும் பைபிளின் ஒவ்வொரு வார்த்தைக்கும், எதிர்மறையான விளைவுகளும் உண்டு. இது கிறிஸ்தவர்களில் பலருக்கும் தெரியாது. வேத வார்த்தைகளுக்கு நாம் கீழ்படிந்தால் ஆசீர்வாதமும், கீழ்படியாவிட்டால் எதிர்மறையாக சாபமும் கிடைக்கும்.
எடுத்துக்காட்டாக: நான் உன்னை ஆசீர்வதிக்கவே, ஆசீர்வதித்து என்று ஒரு வாக்குத்தத்தம் இருந்தால், அதை அடைய தேவன் ஒரு நிபந்தனையை நியமித்திருப்பார். அதன்படி செய்தால் மட்டுமே அதை பெற முடியும். அப்படி செய்யாவிட்டால், ஆசீர்வாதித்திற்கு பதிலாக சாபத்தை பெற வேண்டியதாகும். இதை உபாகமம்: 28ம் அதிகாரத்தை நிதானமாக வாசித்தால் புரிந்து கொள்ள முடியும்.
எனவே மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தில் உள்ள கிருபையை, சுத்த கிருபை என்று நாம் கூறும் போது, அதற்கு எதிர்மறையான அசுத்த கிருபை என்ற ஒன்று உள்ளதாக பொருள் தந்துவிடும். இந்த வகையில் இல்லாத ஒன்றை இருக்கிறது என்று வேத வசனம் குறிப்பிடுவது போல ஆகிவிடும். இதற்கு நாம் காரணமாகிவிடுவோம்.
மற்றொரு வசனம்:
இதேபோல கிறிஸ்துவ சபைகளில் கூட்டங்களின் முடிவில் கூறப்படும் ஒரு வசனம் – சங்கீதம்: 103.1-2. “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே”. இந்த வசனத்தை தூக்கத்தில் கேட்டால் கூட சரியாக கூறிவோம் என்று பலரும் கூறுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த வசனத்தை கூட பலரும் தவறாக கூறுகின்றனர்.
இதில் சிலர் தெரியாமல் தவறாக கூறுகிறார்கள் என்றால், சிலர் இந்த வசனத்தை திருத்திக் கூறி, அதற்கு விளக்கமும் அளிக்கிறார்கள். ஆனால் வேத வசனங்களை திருத்தவோ, மாற்றவோ, சேர்க்கவோ, கழிக்கவோ என்று எதற்கும் நமக்கு அதிகாரமில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
இந்த வசனத்தில், சகல உபகாரங்களையும் மறவாதே – என்ற வசன முடிவில், என்றென்றும் மறவாதே என்று பெரும்பாலானோர் சேர்த்து கூறுகிறார்கள். அவர் செய்த சகல – என்ற இடத்தில் வரும் அவர் என்ற வார்த்தைக்கு பதிலாக, கர்த்தர், இயேசு என்ற வார்த்தைகளை இட்டு கூறுகிறார்கள். சிலர் இரண்டாம் முறை கூறப்படும் என் ஆத்துமாவே என்ற வரியை விட்டுவிட்டு, முதல் வரியுடன் அவர் செய்த சகல என்று இணைத்து முடித்து விடுகிறார்கள்.
நமது சபை கூட்டங்களில், வீட்டு ஜெபத்தில், தனி ஜெபத்தில் என்று எப்போது ஜெபத்தை முடித்தாலும் கூறும் இந்த வசனத்திலே எவ்வளவு திருத்தங்கள் பாருங்கள். இந்த வசனத்தை நன்றாக தெரிந்த பல பழைய விசுவாசிகளும், போதகர்களும் கூட இதை இன்னும் சிறப்பாக கூறுவதாக நினைத்து, திருத்தம் செய்து கூறுகின்றனர்.
வேத வசனத்தில் அவ்வளவு பழக்கமில்லாதவர்கள், இதை கேட்கும் போது, அதை அப்படியே தவறாக கற்றுக் கொண்டு கூறுகின்றனர். சிலருக்கு கும்பல் இல்லாமல், தனியாக இந்த வசனத்தை முழுமையாக கூற தெரியாது. இதனால் அவர்களுக்கு தாங்கள் தவறாக கூறுகிறோம் என்பதே தெரியாமலேயே போகிறது.
இதுபோல இன்று பல வேத வசனங்களையும் நம்மில் பலரும் தவறாக கூறுகிறோம். ஆனால் மேற்கூறிய இரண்டு வசனங்கள் அதில் மிகவும் முக்கியமானவை என்பதால் அதை மட்டும் குறிப்பிட்டுள்ளோம். இந்த செய்தியின் முதலில் குறிப்பிட்டது போல, இந்த காரியங்கள் யாரையும் குற்றப்படுத்தும் நோக்கில் வெளியிடவில்லை. ஆனால் நமக்கே தெரியாமல், நாம் தவறாக கூறும் வேத வசனங்களை குறித்து அறிந்து, திருத்தி கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறோம்.
எனவே இன்று முதல் வேத வசனங்களை தெளிவாக படிப்போம், தியானிப்போம், கூறுவோம். பைபிளில் உள்ள வேத வசனங்களை அப்படியே கூறும் போது, அதில் இருந்து ஒரு தேவ வல்லமை உண்டாகிறது என்பதை புரிந்து கொள்வோம்.
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.