0 1 min 4 weeks

…நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான். தானியேல். 3.25

தானியேல் தீர்க்கத்தரிசன புத்தகத்தில், அவரது நண்பர்கள் ராஜாவின் கட்டளைக்கு கீழ்படியவில்லை என்ற குற்றச்சாட்டில் சிக்குகிறார்கள். மேலும் அதற்கு தண்டனையாக எரியும் அக்னி சூளையில் போடப்படுகிறார்கள்.

அவர்களை தீயில் போட போனவர்களை பஸ்மமாக்கி போட்ட 7 மடங்கு தீயால், தேவ பிள்ளைகளான சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற 3 பேரையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்களை தேவன் பாதுகாத்தார் என்று வேதம் கூறுகிறது.

மேலும் அவர்களை காண சென்ற ராஜாவுக்கு வியப்பு அளிக்கும் வகையில், 3 பேருக்கு பதிலாக தீயில் 4 நபர்களாக காட்சி அளித்தார்கள். குறிப்பாக, 4வது நபரின் சாயல், தேவ குமாரனை போல இருந்ததாக ராஜா கூறுகிறார்.

ஆனால் தீயில் இருந்த 3 பேருக்கும், 4வது நபர் தங்களோடு இருப்பதை அறிய முடியவில்லை. ஏனெனில் அவர்களுக்கு அப்படியொரு உணர்வு ஏற்பட்டதாக வேதம் குறிப்பிடவில்லை. மேலும் அவர்கள் அக்னி சூளையில் இருந்து வெளியே வந்த போது, 4வது நபரை ராஜா பார்க்கவில்லை.

இதில் இருந்து நாம் ஒரு காரியத்தை அறிந்து கொள்ளலாம். அதாவது நம் வாழ்க்கையில் நம்மை அழிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அக்னி சூளை போன்ற கஷ்டங்களின் நடுவில், தேவன் நம்மோடு உலாவுகிறார்.

அவர் நம்மோடு உலவும் போது, நமக்கு அந்த கஷ்டத்தின் தாக்கம் ஏற்படுவது இல்லை. ஆனால் நம்மை அந்த கஷ்டத்தில் தள்ளியவர்கள், அதன் தாக்கத்தில் அழிந்து போவார்கள்.

மேலும் அந்த கஷ்டம் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, பெரிய விஷயமாக தெரிந்தாலும், நமக்கு அதை ஒரு சாதாரண சம்பவமாக தேவன் மாற்றுகிறார். அந்த சூழ்நிலையில் தேவன் நம்மோடு இருப்பதை நம்மால் உணர முடியாமல் போகலாம், ஆனால் அவர் நம்மோடு இருப்பதை, மற்றவர்கள் காண முடியும்.

அந்த கஷ்டத்தில் இருந்து வெளியே வந்த பிறகும், தேவன் நம்மோடு இருப்பார். ஆனால் மற்றவர்களால் அதை காண முடியாது. எனவே கஷ்டங்களின் நடுவில் நாம் தனியே விடப்பட்டதாக, கலங்க வேண்டிய தேவையே இல்லை.

இன்று கிறிஸ்தவர்களுக்கு எதிராக வரும் பல சோதனைகள் மற்றும் போராட்டங்களை எதிர்த்து பலரும் போராடி வருகிறார்கள். சிலர் தந்திரமாக அதில் இருந்து தப்ப முயற்சி செய்கிறார்கள். வேறு சிலர், கஷ்டத்தில் தேவன் என்னை கைவிட்டார் என்று கூறி, பின்மாறி போகிறார்கள்.

ஆனால் வேதத்தில் பார்த்த அந்த 3 பேரும், தேவன் கைவிடமாட்டார் என்பதை அவர்கள் நம்பினார்கள் என்று கூறலாம். ஆனால் அப்படியே கைவிட்டாலும் பரவாயில்லை என்ற உறுதியான தீர்மானம் அவர்களிடம் இருந்தது.

நம் கஷ்டங்களில் தேவனுடைய அதிசய கரத்தை காண வேண்டுமானால், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ போல உறுதியான தீர்மானமும், தேவன் மீதான அளவு கடந்த நம்பிக்கையும் தேவைப்படுகிறது. அவரை நம்பும் மக்களை அவர் எந்த சூழ்நிலையிலும் கைவிடுவதில்லை.

எனவே நமது உறுதியான நம்பிக்கையை தேவன் மீது வைப்போம். எந்த சூழ்நிலையிலும் தேவனை தூஷிக்காமல் வாழ்வோம். வாழ்ந்தால் இயேசுவின் நாமத்தின் மகிமைக்காக, இறந்தால் அவருக்கு சாட்சியாக என்ற முழுமையான விசுவாசத்தை வளர்த்து கொள்வோம்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள ஆண்டவரே, எந்த சூழ்நிலையிலும் எங்களை நீர் கைவிடுகிறது இல்லை என்று பேசிய உம் வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். தேவரீர் எங்களோடு இருப்பதை நாங்கள் அறியாவிட்டாலும், மற்றவர்களுக்கு முன்பாக, அதை வெளிப்படுத்துகிறீர் என்று அறிந்தோம். உம் மீதான விசுவாசத்தை வளர்த்து கொண்டு உமக்கு சாட்சியாக வாழ உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *