0 1 min 4 mths

ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாம்சமாயிருக்கிறவர்களோடே வாசம் பண்ணாத தேவர்களேயொழிய ராஜ சமூகத்தில் அதை அறிவிக்கத்தக்கவர் ஒருவரும் இல்லை என்றார்கள். தானியேல்:2.11

தானியேல் புத்தகத்தின் இரண்டாம் அதிகாரத்தில், ஒரு கனவு பெரிய குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. பாபிலோன் நாட்டின் ராஜா கண்ட ஒரு கனவின் அர்த்தத்தை அறிய, அந்நாட்டில் உள்ள சாஸ்திரிகள், ஜோசியர்கள், சூனியக்காரர்கள், கல்தேயர் என்று ஒரு பெரிய கும்பலை, ராஜா அழைக்கிறார்.

அவர்களுக்கு ஒரு சோதனையும் வைக்கிறார். அதாவது தான் கண்ட கனவை கூறி, அதன் அர்த்தத்தை தெரிவிக்குமாறு மேற்கண்ட திறமை வாய்ந்தவர்களிடம் கேட்கிறார். ஆனால் அவர்களால், கனவின் அர்த்தத்தை மட்டுமே தெரிவிக்க முடியும் என்று கூறி, மேற்கூறிய தியான வசனத்தை கூறுகிறார்கள்.

அதே அதிகாரத்தில், தனது கனவை அவர்களிடம் கூறாமல் இருப்பதற்கான காரணத்தை (தானியேல்:2.9 பிற்பகுதி) ராஜா கூறுகிறார். மேற்கூறிய 4 கும்பலிடமும் ராஜா கேட்பது 2 காரியங்கள். ஆனால் அதில் ஒரு காரியத்தை மட்டுமே, அவர்களால் கூற முடியும் என்று கூறுகிறார்கள்.

இந்த காரியத்தை அறிந்து ராஜ அரமனைக்கு வரும் தானியேலிடமும், ராஜா இதையே கேட்கிறார். ஆனால் தேவ சமூகத்தில் ஜெபித்து தெளிவான தரிசனத்தை பெற்று வரும் தானியேல், அவற்றை எளிதாக ராஜாவிடம் அறிவிக்கிறார்.

ஆனால் நாம் அந்த பகுதியை (தானியேல்:2.29-45) தெளிவாக வாசித்தால், தானியேல் 3 காரியங்களை, ராஜாவிற்கு அறிவிக்கிறார். கனவையும், அர்த்தத்தையும் மட்டுமே ராஜா கேட்டிருந்தார். ஆனால் அதனோடு, கனவு காண்பதற்கு முன், ராஜா என்ன யோசித்தார் என்பதையும் தானியேல் கூறுகிறார். இதுதான் தேவனுடைய வெளிப்படுத்துதலின் மேன்மை.

நமது தேவன் கேட்பதற்கு அதிகமாக அளித்து ஆசீர்வதிக்கிற தேவன். ஆனால் அவரிடம் உண்மையாக காத்திருந்து பெற்று கொள்ள நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். இன்றும் நாம் அந்த ராஜாவை போல மனிதர்களை நோக்கி சென்று, நமது வாழ்க்கையின் கேள்விகளுக்கு விடை காண முயன்றால், நாம் எதிர்பார்ப்பது கிடைக்காது. ஆனால் தேவனிடம் கேட்டால், நாம் கேட்டதை காட்டிலும் விரிவான பதில் கிடைக்கிறது.

இன்று பலரும் ஜோசியர்கள், சூனியக்காரர்கள், சாஸ்திரிகள் என்ற உலகின் ஞானிகளை நோக்கி சென்று, எந்த பயனும் இல்லாமல் அலைந்து திரிகிறார்கள். நல்ல நாள், கெட்ட நேரம், ராகு காலம், நட்சத்திரம் ஆகியவற்றை பார்த்து கொண்டு, வாழ்க்கையை நிர்ணயிக்க முயற்சிக்கிறார்கள்.

ஆனால் மேற்கூறிய ராஜா, ஜோசியர்களையும் (நாள், நட்சத்திரம் பார்ப்பவன்), சூனியக்காரர் (மந்திரவாதிகள்) ஆகியோரிடம் பதில் கிடைக்காமல், இஸ்ரவேலின் தேவனை உண்மையாக பின்பற்றிய மனிதனிடம் பதிலை பெற்று, தேவனை புகழ்ந்தார்.

எனவே நாள், ராசி, நட்சத்திரம் பார்க்கிறவர்களை தேடுவதை விட்டு, அதன் மீது நம்பிக்கை வைப்பதை தவிர்ப்போம். பயன் தராத அவற்றிற்காக காத்திருப்பதை விட, எல்லாவற்றையும் முழுமையாக அளிக்கும், நம் ஜீவனுள்ள தேவனுக்காக காத்திருப்போமாக. அப்போது நாம் தேடுவதை விட, சிறந்ததை பெற்றுக் கொள்ளலாம்.

ஜெபம்:

அன்பான இயேசுவே, எங்கள் வாழ்க்கையில் கேள்விகளாக நிற்கும் பல காரியங்களுக்கு பதில் தர நீர் வல்லவராய் இருக்கிறீர் என்று அறிய உதவி செய்தீர். எங்கள் வாழ்க்கையில் உதவாத, அரைகுறையான மனிதர்களின் பின்னால் ஓடிய எங்கள் குறைகளை மன்னியும். இனி உமக்காக காத்திருந்து, நாங்கள் கேட்பதற்கும், நினைப்பதற்கும் அதிகமாய் கிரியை செய்கிற உம்மிடம் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *