0 1 min 6 mths

நம் வாழ்க்கையில் தேவன் பல நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் தரும் போது, தேவனை துதிக்கிறோம். ஆனால் துக்கமான, வேதனை மிகுந்த சந்தர்ப்பங்களில் நமது ஆவிக்குரிய நிலை எப்படி இருக்கிறது? என்று கேட்டால், பலரும் மவுனம் சாதிப்பார்கள். ஏனெனில் பெரும்பாலானோரின் ஆவிக்குரிய சரிவு, துக்கமான நேரங்களில் தான் நிகழ்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு கேரளாவை சகோதரனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர், 1920-க்களில் கேரளாவில் ஊழியம் செய்து வந்த சாது கொச்சு உன்னி என்ற தேவ ஊழியரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தையும், அதை தொடர்ந்து அவர் எழுதிய பாடலையும் பாடி காட்டினார். உண்மையில் அந்த பாடலின் பொருளை அறிந்த போது கண்களில் கண்ணீர் நிரம்பிவிட்டது.

கேட்டது:

அந்த சம்பவத்தை அவர் இப்படித் தான் கூற ஆரம்பித்தார்… அந்த காலத்தில் கேரளாவில் உண்ண உணவு கூட சரியாக கிடைக்காமல் கஷ்டத்தின் மத்தியில் தேவ ஊழியம் செய்தவர்களில் சாது கொச்சு உன்னி உபதேசியும் ஒருவர். குடும்பத்துடன் பட்டினி பசியோடு, பல ஊர்களுக்கு நடந்து சென்று ஊழியம் செய்து வந்தார்.

இந்த கஷ்ட நேரத்தில் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தங்களுக்கே சாப்பிட்டிற்கு வழியில்லாத நிலையில், குழந்தையை எப்படி வளர்ப்பது என்ற கேள்வி எழுந்தாலும், எல்லாவற்றையும் கர்த்தர் பார்த்துக் கொள்வார் என்ற விசுவாசம் மனதை தைரியப்படுத்தியது.

நாட்கள் கடந்தது. ஆனால் அவர்களின் வாழ்க்கையில் இருந்த கஷ்டம் மட்டும் மாறவே இல்லை. ஊழியத்திற்கு செல்லும் போது கிடைக்கும் எளிய உணவு வகைகளை கொண்டு வந்து சாப்பிட்டு வந்தனர். குழந்தைக்கு சரியான உணவு அளிக்க முடியாத காரணத்தால், சில நாட்களில் அதன் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

அதை மருத்துவமனைக்கு எடுத்து செல்லவும், சாதுவிடம் பணம் இல்லை. வேறு கதியில்லாத நிலையில், கர்த்தரையே நம்பி ஜெபிக்க துவங்கினர். நாம் ஒன்று நினைக்கும் போது, தேவனுடைய திட்டம் வேறாக இருக்கும் என்பது போல, சாதுவின் ஜெபம் கேட்கப்படவில்லை. சில நாட்களில் குழந்தை இறந்தது.

இதில் மனமுடைந்து போன சாதுவின் மனைவி லேசாக மனநிலை பாதிக்கப்பட்டார். தேவனுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு ஊழியம் செய்து, நமக்கு கிடைத்த பலன் இதுதானா? என்று கூட மனதில் கேள்வி எழுந்தது. ஆனால் அந்த அவிசுவாச எண்ணங்களை மனதில் வளரவிடாமல் தடுத்த சாது, தனது குழந்தைக்கு அடக்க ஆராதனை நடத்தினார்.

துக்கம் தாங்க முடியாமல் வீட்டிற்கு வந்த அவர், தேவ சமூகத்தில் கண்ணீரோடு ஜெபிக்க துவங்கினார். அப்போது இயேசுவின் பாடுகள், அவர் முன் வந்தன. எனக்காக பாடுபட்ட இயேசுவிற்காக, நான் ஏன் பாடுபட கூடாது என்று மனதில் தைரியம் அடைந்தவராக…

“துக்கத்தின்டே பானப் பாத்திரம்
கர்த்தாவென்டே கையில் தந்தால்
சந்தோஷத்தோடு அது வாங்கி
ஹாலேலுயா பாடிடும் ஞான்”

என்ற இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடலின் பொருள் என்னவென்றால், “துக்கத்தினால் நிரம்பிய பாத்திரத்தை தேவன் என் கையில் அளித்தாலும், அதை சந்தோஷத்தோடு பெற்றுக் கொண்டு, அல்லேலுயா என்று கூறுவேன் என்பதாகும்.

இந்த பாடல் கேரளாவில் மட்டுமின்றி, உலகின் பல பகுதிகளிலும் இன்றும் தியானித்து பாடப்படும் ஒரு பாடல் ஆகும். இவ்வளவு கஷ்டங்களின் மத்தியில் சாது செய்த ஊழியத்தின் விளைவாக, இன்று கேரளாவில் கிறிஸ்துவை அறியாத மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு எனலாம். மேலும் இந்தியாவில் இன்று ஆசீர்வதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்று என்றால் மிகையாகாது, என்று கூறி முடித்தார் அந்த சகோதரன்.

சிந்தித்தது:

சாது கொச்சு உன்னி உபதேசியின் சாட்சியை கேட்ட போது, உண்மையிலேயே நாம் தேவனுக்காக செய்வது ஒன்றும் இல்லை என்ற எண்ணம் தான் தோன்றியது. இன்று நம் வாழ்க்கையில் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளையே நம்மால் எதிர்கொள்ள முடியாமல், பல நாட்களுக்கு தேவனை தேடாமல், அவர் மீதே கோபம் வைத்து கொண்டு இருந்து விடுகிறோம்.

சில நேரங்களில் நான் இவ்வளவு எல்லாம் ஊழியம் செய்தும், எனக்கு ஏன் இந்த வேதனை, கஷ்டம், பாடு என்றெல்லாம் புலம்புகிறோம். ஆனால் உண்மையில் தேவன் நம்மை கஷ்டத்தின் பாதையில் நடத்தி, தனக்கு ஏற்ற ஒரு மின்னும் ஆயுதமாக பலருக்கு முன்பாக பிரகாசிக்க செய்ய விரும்புகிறார். ஆனால் அதற்கு நாம் ஒப்புக் கொடுக்க வேண்டியுள்ளது என்று உணர்ந்தேன்.

அதற்கு நம் வாழ்க்கையின் சந்தோஷமான நேரங்களில் மட்டுமல்ல, துக்கமான நேரங்களிலும் சாது உபதேசியை போல, துதிக்கிற மனம் நமக்கு இருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். என்னோடு சேர்ந்து உங்களால் அந்த தீர்மானத்தை எடுக்க முடிகிறதா?

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *