
ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைகள் பொதுவாக இருந்தாலும், அவற்றை பெறுவதற்கான விருப்பத்தின் அளவும், சந்தர்ப்பமும் வேறுபடுகிறது. அதிலும் சில காரியங்களை குறித்து நமக்கு எந்த அறிவும் இல்லாவிட்டாலும், அதன் மீது விருப்பம் வைத்து, கிடைக்காமல் ஏமாறுகிறோம். நடக்க கூட தெரியாத ஒரு கைக் குழந்தை நாம் பயன்படுத்தும் மொபைல்போனை கேட்டு அடம்பிடிப்பது போல.
சில நேரங்களில் நமது சொந்த முயற்சியில் செயல்பட்டு வெற்றிகளை பெறுகிறோம். ஆனால் அதில் நம்மால் திருப்திப்பட்டு கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறதே தவிர, முழுமையான மகிழ்ச்சியை பெற முடியவில்லை. ஆனால் தேவனிடம் இருந்து அளிக்கப்படும் காரியங்களில் ஒரு முழுமையை காண முடிகிறது.
கேட்டது:
எனவே நம் வாழ்க்கையில் தேவனுடைய கரம் கிரியை செய்ய காத்திருக்க வேண்டியுள்ளது. இதை கூறும் போது, சமீபத்தில் ஒரு போதகரின் பிரசங்கத்தில் கேட்ட ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த போதகர் எடுத்துக்காட்டாக கூறிய சம்பவத்தை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அந்த சம்பவத்தை அவர் இப்படித் தான் கூற ஆரம்பித்தார்… ஊழியத்திற்காக ஒரு ஊருக்கு சென்றிருந்த போது, கடை ஒன்றில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் இருந்த ஒரு மிட்டாய் கடைக்கு வந்த சிறுவன், அங்கிருந்த மிட்டாய்களை பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.
கடைக்காரர் அந்த சிறுவனை அழைத்து, எந்த மிட்டாய் வேண்டும் என்று கேட்டார். அதற்கு சிறுவன், ‘தன்னிடம் காசு எதுவும் இல்லை என்றும், மிட்டாய்களை பார்த்து திருப்திப்பட்டு கொள்வதாகவும் கூறினான். தோற்றத்திலேயே அவன் ஒரு ஏழை சிறுவன் என்பதை புரிந்து கொண்ட கடைக்காரர், அவன் மீது மனமிறங்கி, உனக்கு எந்த மிட்டாய் வேண்டுமோ, அதை எடுத்து கொள் என்று கூறினார். ஆனால் அதற்கு மறுத்த சிறுவன், கடைக்காரரே தனக்கு எடுத்து தருமாறு கூறினான்.
வேறு வழியின்றி கடைக்காரர் தனது கைநிறைய மிட்டாய்களை எடுத்து சிறுவனுக்கு கொடுத்தார். சந்தோஷமாக வாங்கி, நன்றி தெரிவித்துவிட்டு கிளம்ப இருந்த சிறுவனிடம், கடைக்காரர் ஒரு சந்தேகத்தை கேட்டார்.
இதை நீயே செய்திருக்கலாமே? எதற்காக நானே எடுத்து தர வேண்டும் என்று அடம்பிடித்தாய்? என்று கேட்டார். அதற்கு சிறுவன், ‘ஐயா, நீங்கள் இரக்கமாக எனக்கு பிடித்த மிட்டாய்களை என்னையே எடுத்து கொள்ள அனுமதி அளித்ததற்கு நன்றி!
ஆனால் எனக்கு இருக்கும் இந்த சின்ன கைகளை வைத்து எடுத்தால், அதில் கொஞ்சம் தான் கிடைக்கும். ஆனால் உங்களின் பெரிய கையை விட்டு எடுத்து தந்தால், நிறைய மிட்டாய்கள் கிடைக்கும் அல்லவா! அதுதான் அப்படி கூறினேன் என்று கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் சென்றுவிட்டான் என சம்பவத்தை கூறி முடித்த போதகர், தனது பிரசங்கத்தை தொடர்ந்தார்.
சிந்தித்தது:
மேற்கூறிய சம்பவத்தில் சிறுவன் கூறுவது போல, நமது திறமைகள், அறிவு, சக்தி ஆகியவை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேலே செயல்பட முடியாதவை. ஆனால் சகலத்தையும் உருவாக்கி, தனது ஞானத்தினால் இயக்கி வரும் தேவனால் செய்ய முடியாத காரியங்கள் எதுவும் இல்லை.
எனவே நமது காரியங்களில் நமது சொந்த புத்தியை பயன்படுத்தி, சிறிய அளவில் வெற்றி பெறுவதை விட, பெரிய தேவனிடம் ஒப்படைத்து பெரிய ஜெயத்தை பெறுவது தானே நல்லது?
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.