
வாழ்க்கையில் நெருக்கம், துக்கம், வேதனை மற்றும் கஷ்டங்களின் நடுவில் நாம் செய்யும் பல காரியங்களை, வாழ்வின் செழிப்பான நேரங்களில் செய்ய தவறுகிறோம். மேலும் அதை பல வகையில் தேவன் நினைப்பூட்டினாலும், தேவனிடமே சமரசம் செய்ய விரும்புகிறோம்.
கேட்டது:
இது குறித்து கூறும் போது, சமீபத்தில் ஒரு செய்தியில் கேட்ட சாட்சி ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. அந்த சாட்சி இப்படி தான் துவங்கியது…
30 ஆண்டுகளுக்கு முன் எளிமையில் வாடிய ஒருவர், தேவனிடம் பய பக்தியோடு வாழ்ந்து வந்தார். அவரது நிலை கண்டு வருந்திய அந்த ஊரில் இருந்து ஒருவர், அவருக்கு உதவ முன்வந்தார். அதன்படி 10 ரூபாய் மதிப்புள்ள மிட்டாய் வகைகளை அவரிடம் அளித்து, விற்பனை செய்து கொள்ள கூறினார்.
தனக்கு முதல் நாள் முதலீடாக கிடைத்த அந்த 10 ரூபாய் பொருட்களை ஒரு பள்ளிக்கூடத்தின் அருகே விற்பனை செய்தார். அதன்மூலம் 20 ரூபாய் சம்பாதித்தார். 15 ரூபாயை திரும்ப செலுத்தி, அடுத்த நாளும் மிட்டாய் விற்பனையை தொடர்ந்தார். ஆனால் முதல் நாளில் கிடைத்த பணத்தில் 4 ரூபாயை தேவனுக்கு தசமபாகமாக கொடுத்தார்.
அடுத்த நாளில், 30 ரூபாய் சம்பாதிக்க, அதில் 6 ரூபாயை தசமபாகமாக அளித்தார். அடுத்த நாளில் 25 ரூபாய் முதலீடு செய்து, 50 ரூபாய் சம்பாதித்தார். இப்படி ஒரு மாதத்தில் 300 ரூபாய் முதலீடு செய்யும் நிலைக்கு வந்தார். இப்படி தனக்கு கிடைக்கும் வருமானத்தில் 10ல் 2 மடங்கை தசமபாகமாக செலுத்தினார்.
நாட்கள் நகர்ந்தன. ஒரே நாளில் 1,000 ரூபாய் வரை முதலீடு செய்யும் நிலைக்கு உயர்ந்தார். சில ஆண்டுகளில் சொந்தமாக மிட்டாய் கடையை வைத்து சம்பாதிக்க ஆரம்பித்தார். அப்போதும் 10ல் 2 சதவீதம் தசமபாகமாக அளித்தார். 10 வருடங்களுக்கு பிறகு, சொந்தமாக மிட்டாய் கம்பெனி வைத்து, சம்பாதித்தார்.
அப்போது, கம்பெனியில் இருந்த ஒருவர், வெளிநாடுகளுக்கு ஆர்டர் வந்திருக்கிறது. அதற்கு அதிக பணம் முதலீடு செய்ய வேண்டியுள்ளது என்றார். அதற்காக செலவை குறைக்க திட்டமிட்டார் அந்த நபர், கணக்கு பார்த்த போது, தசமபாகமாக தனது வருமானத்தில் 10ல் 2 சதவீதம் அளிப்பதை கவனித்தார்.
அப்போதைய நிலையில், 1 லட்சம் ரூபாயில் 20 ஆயிரம் ரூபாய் தசமபாகமாக செல்கிறது. இது மிகவும் அதிகமான தொகையாக தெரிந்தது. பணத்தை திரட்டும் வகையில், இனி 10ல் 1 பகுதி தசமபாகமாக அளிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
ஆண்டுகள் செல்ல செல்ல, சில மாதங்கள் முழுமையாக தசமபாகம் அளிக்காமல், தொகையை குறைக்க ஆரம்பித்தார். இந்த செயல் சில மாதங்களுக்கு தொடர, ஒரு கட்டத்தில் தசமபாகம் அளிப்பதே வீண் செலவு என்ற முடிவுக்கு வந்தார்.
வியாபார வளர்ச்சி, வசதியான வீடு, எல்லா வகையிலும் செழிப்பு ஆகியவற்றில் அவரது முழுமையாக கவனம் திரும்பியது. இதனால் தேவாலயத்திற்கு செல்லவோ, ஜெபிக்கவோ நேரம் செலவிட மனம் ஒத்துப் போகவில்லை.
இப்படியே நாட்கள் செல்ல, ஒருநாள் முக்கியமான வியாபார பேச்சுவார்த்தையின் போது, திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு இதயம் தொடர்பான சிகிச்சைக்காக பல லட்சங்கள் செலவு செய்தனர். இறுதியில் உயிர் பிழைத்து கொண்டார்.
மருத்துவமனையில் படுத்த படுக்கையாக கிடந்த போது, தேவன் தன் வாழ்க்கையில் நடத்தி வந்த வழிகளை திரும்பி பார்த்தார். அப்போது தான் அவர் எந்த அளவிற்கு தேவனை விட்டு விலகி உள்ளார் என்பது தெரியவந்தது. அதன்பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடிவு செய்தார்.
சிந்தித்தது:
இந்த சாட்சியை கேட்ட போது, மனதில் உணர்த்தப்பட்ட ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் போது, தேவனுக்கு மிகவும் உண்மையாக இருக்கும் பலரும், செழிப்பான காலங்களில் இருப்பதில்லை.
இதற்கு காரணம், வாழ்க்கையில் வசதிகளும் செழிப்பும் வரும் போது, நம் பார்வை அதன்பின்னால் திரும்பி விடுகிறது. இதனால் தேவனிடம் நாம் செய்திருந்த தீர்மானங்களும், நமது ஆவிக்குரிய செயல்பாடுகளும் தளர்ந்து போகின்றன. மேலும் தெய்வீக காரியங்களில் சமரசம் செய்துவிடுகிறோம். இப்படி தேவனிடம் இருந்து ஏற்படும் பிரிவு, நமது செழிப்பு மட்டுமின்றி, திடீர் வீழ்ச்சிக்கும் அதுவே காரணமாக அமைகிறது.
எனவே வாழ்க்கையில் எந்த மாதிரியான சூழ்நிலையிலும் நாம் பயணித்தாலும், தேவனோடு உள்ள உறவும், ஐக்கியமும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதை பாதுகாத்து கொள்ள வேண்டும். எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஆதரமான அவரை பற்றிக் கொண்டால், மற்றவை எல்லாம் நமக்கு கிடைக்காமல் போகுமா என்ன?
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.