
கிறிஸ்தவ சபைகளில் தேவனை துதிப்பது என்பது ஒரு முக்கியமான நிகழ்வு. ஒரு சபையில் வர்ஷிப் லீடர் என்றாலே பெரிய பதவி என்று மேன்மை பாராட்டி கொள்பவர்களும் உண்டு. இது போதகருக்கு அடுத்த ஸ்தானம் என்ற எண்ணமே இதற்கு காரணம்.
தேவனை பாடி துதிக்க, தேவாலயத்தில் நடக்கும் ஆராதனைகளில் மட்டுமே முடியும் என்றில்லை. தனிமையில் கூட தேவனை பாடி துதிக்கலாம். அதில் அளவில்லாத ஒரு சந்தோஷம் ஏற்படும் என்பதை எனக்கு உணர்த்திய ஒரு சம்பவத்தை பகிர விரும்புகிறேன்.
அனுபவித்தது:
பள்ளி பருவத்தில் இருந்த போது, நாங்கள் சென்ற சபையில் சிறப்பு ஜெபக் கூட்டம் நடந்தது. இதற்காக பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை கடுமையாக உழைத்தோம்.
பொது மைதானத்தில் கூட்டங்கள் நடந்தது என்பதால், இரவில் பொருட்களை பாதுகாக்க 15 வயதிற்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட நாங்கள் காவலுக்கு இருந்தோம். 4வது நாள் இரவில் வருபவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதால், காய்கறிகளை சுத்தம் செய்யும் வேலை எங்களுக்கு அளிக்கப்பட்டது.
2 சாக்கு வெங்காயம் உரிப்பது உட்பட பல வேலைகளை செய்ய வேண்டி இருந்தது. சிறிது நேரம் பேசி கொண்டிருந்த எங்களுக்கு, களைப்பு தட்ட ஆரம்பித்தது. சிலருக்கு தூக்கமும் வந்தது. வேலை மிகவும் நிதானமாக நடந்தது.
எனவே நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து ஏதாவது பேசிக் கொண்டே செய்தோம். அப்போதும் வேலையில் அவ்வளவு சுறுசுறுப்பு தெரியவில்லை. இரவு 11 மணியை கடந்த நிலையில், ஒரு நண்பர் பாட்டு பாட ஆரம்பித்தார். நாங்கள் எல்லாரும் சேர்ந்து பாட ஆரம்பித்தோம்.
2 சரணங்களே பாடிய அவர், மேற்கொண்டு பாட தெரியாமல் முழித்தார். உடனே அந்த பாட்டை விடுப்பா, இன்னொரு பாட்டு பாடுவோம் என்று மற்றொருவர் வேறொரு பாட்டை ஆரம்பித்துவிட்டார். இப்படி மாறி மாறி ஒவ்வொருவராக பாடல்களை பாடினோம்.
ஒருவர் ஒரு பாடலை துவங்கினால், மற்றவர்களும் அவரோடு சேர்ந்து பாடிவது என்ற முடிவுக்கு வந்தோம். வேலை சூடுபிடித்தது. ஒரு கட்டத்தில் எங்கள் பணி முடிந்தது. ஆனால் பாட்டு பாடுவதை நிறுத்த யாருக்கும் மனமில்லை. எனவே தொடர்ந்து மாறி மாறி பாடி துதித்தோம்.
இந்த சம்பவம் நடப்பதற்கு அருகிலேயே இருந்த ஆலயத்தின் ஒரு பகுதியில், பல ஊர்களில் இருந்து வந்த தேவ ஊழியர்கள் கலைப்புடன் தூங்கி கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர், எழுந்து வந்து எங்களுடன் இணைந்து கொண்டார்.
அதிகாலை 4 மணிக்கு அரைமனதோடு பாடுவதை நிறுத்தினோம். அப்போது அந்த தேவ ஊழியர், நாங்கள் பாடி கொண்டிருந்த போது, தூங்கி கொண்டிருந்த அவர் மீது ஒரு பெரிய பரிசுத்தாவியின் அபிஷேகம் இறங்கியதாக கூறினார்.
மேலும், தான் இதுவரை இது போன்ற ஒரு அனுபவத்தை பெற்றதே இல்லை என்று கூறி, எங்கள் நட்புணர்வையும் ஒற்றுமையையும் பாராட்டினார். இரவு முழுவதும் பாடி ஒரு தேவ பிரசன்னத்தை உணர்ந்த நாங்கள், சில மணிநேரங்கள் மட்டும் உறங்கிவிட்டு வீடுகளுக்கு திரும்பினோம்.
இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கடந்தாலும், இன்றும் அதை நினைத்தால் மனதில் இனிமையாக உள்ளது. இன்றும் நான் பல இடங்களில், உங்களுக்கு பிடித்த பாடல்களை பாடுங்கள், நாம் எல்லாரும் சேர்ந்து பாடலாம் என்று கூறுகிறேன். ஆனால் மேற்கூறியது போல தேவனை துதிக்க, ஒரு சரியான சந்தர்ப்பம் திரும்ப கிடைக்கவில்லை என்பது தான் வருத்தம்.
சிந்தித்தது:
மேற்கூறியது போல இரட்சிக்கப்பட்ட மக்கள் எல்லாரும் இணையும் போது, சபையில் நடக்கும் சம்பவங்களையும், ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள் குறித்த குற்றங்களையும் குறித்து ஒருவருக்கு ஒருவர் பேசுவதை தவிர்த்து, தேவனை இணைந்து துதித்து கொண்டே வேலை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
பிறரை குற்றம் கூறி கொண்டே வேலை செய்தால், நமக்குள் ஆவிக்குரிய பின்மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், குறிப்பிட்ட நபர்களின் மீது வெறுப்பு, கோபம் ஏற்பட்டு, பிரிவிணைக்கு வழி வகுக்கலாம். ஆனால் தேவனை கூடி துதித்து கொண்டே வேலை செய்தால், அது ஒவ்வொரு நபர்களிலும் ஆவிக்குரிய எழுப்புதலையும் ஐக்கியத்தையும் வளர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.