தேவன் இன்றும் சுகமளிக்கிறாரா?

பெங்களூருவில் இருந்து ஒரு சகோதரி: இரட்சிக்கப்பட்ட பெற்றோருக்கு பிறந்த நான் சிறு வயது முதலே தேவ பக்தியில் வளர்க்கப்பட்டேன். இருப்பினும் நோய்களிலிருந்து தேவன் நம்மை பூரணமாக குணமாக்குகிறாரா? என்பதில் சந்தேகம் இருந்தது. பல கூட்டங்களில் தேவ ஊழியர்கள் ஜெபிக்க குணமடைந்ததாக சாட்சிகளை கேட்ட போதும், எனக்குள் தேவன் மீது முழுமையான விசுவாசம் ஏற்படவில்லை.

எனக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் போதெல்லாம், மருந்துகளையும், டாக்டர்களையும் நம்பினேன். ஆனால் தேவன் மீது விசுவாசத்தை வைத்து ஜெபிக்க மனம் ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில் எனக்கு திருமணமானது. எனது கணவர், தேவன் நோய்களிலிருந்து விடுவிப்பர் என்பதில் அதிக உறுதியாக இருந்தார்.

 

இது குறித்து நாங்கள் இருவரும் பல சந்தர்ப்பங்களில் வாக்குவாதம் நடத்தினாலும், எனக்குள் அந்த விசுவாசத்தை வளர்க்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் என் கணவர், உனக்கு தேவன் ஒரு சந்தர்ப்பத்தை அளிப்பார். அப்போது நீயாக உணர்ந்து கொள்வாய் என்று கூறி மேற்கொண்டு அதை குறித்து பேசுவதை குறைத்துக் கொண்டார்.

எனக்கு திருமணமாகி ஒரு சில மாதங்களில், என் இடது காதில் வலி ஆரம்பித்தது. அதிக தூரம் காற்றில் சென்றாலோ, நீரில் அதிக நேரம் இருந்தாலோ, எனக்கு அந்த காது வலி ஏற்படுவது வழக்கமாக இருந்தது. எனவே அதை நான் சாதாரணமாக எடுத்து கொண்டேன். இந்நிலையில், நாட்கள் செல்ல செல்ல வலி அதிகமானது. சில நாட்களுக்கு பிறகு லேசாக சீழ் வர ஆரம்பித்தது. பின்னர் அதுவே துர்நாற்றம் மிகுந்த சீழாக மாறியது.

இதில் பயந்து போன நாங்கள், ENT டாக்டரிடம் காட்டினோம். என் காதை சோதித்த அவர், அதில் ஒரு துளை இருப்பதாகவும், அதை உடனே அறுவை சிகிச்சை மூலம் மூட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதற்கு அதிக தொகை செலவாகும் என்று கூறியதால், பின்னர் வருவதாக கூறி வீடு திரும்பினோம். டாக்டர் கூறியது போல துளை இருக்கிறதா? என்று என் கணவரும் டார்ச் அடித்து பார்த்தார். அப்போது இடது காதில் ஓட்டை இருந்தது நன்றாக அவருக்கும் தெரிந்ததாம்.

உள்ளத்தில் அதிக கலக்கத்தோடு இருந்த போது, என் கணவர் ஒரு யோசனையை கூறினார். ஒரு வேளை, தேவ வல்லமையை அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையலாம். எனவே ஜெபிக்கலாம் என்றார். வேறு வழியின்றி ஒப்புக் கொண்ட நான், தேவனே, நீரே எனக்கு அறுவை சிகிச்சை செய்யும், டாக்டர்கள் செய்ய வேண்டாம் என்று ஜெபித்தேன். அதற்கு மறுநாள் என் காதில் இருந்து இரத்தத்துடன் சீழ் வந்தது. இதில் மேலும் பயந்து போனோம். காது வலி குறைய டாக்டர் கொடுத்த Ear drops போட்டோம். அதில் வலி மேலும் அதிகமானது.

இதனால் மருந்துகள் எதுவும் வேண்டும் என்று முடிவெடுத்த நாங்கள், இது குறித்து எங்கள் சபை ஊழியரிடம் கூறி ஜெபித்தோம். அப்போது அவர், எண்ணை பூசி ஜெபித்து கொள்ளுங்கள். தேவன் உங்களுக்கு பூரண சுகத்தை தருவார் என்றார். அதற்கு கீழ்படிந்த நாங்கள், தினமும் ஜெபித்துவிட்டு காதில் எண்ணை போட்டு வந்தோம். ஓரிரு நாட்களில் எனது காது வலி குறைய ஆரம்பித்தது. சில நாட்களில் வலியும் இல்லை, சீழும் இல்லை.

காது வலி குறைவே, என் கணவர் மீண்டும் என் காதில் டார்ச் அடித்து பார்த்தார். அப்போது அந்த இடத்தில் ஒரு கருப்பு நிறத்தில் ஏதோ மூடப்பட்டிருப்பதாக தெரிந்ததாம். சில நாட்களுக்கு பிறகு மீண்டும் பார்த்த போது, அங்கு எதுவும் இல்லாமல், சாதாரணமாக இருந்ததாம். கணவருக்கு சந்தேகம் வந்து இரு காதுகளையும் டார்ச் அடித்து பார்த்துவிட்டு, உனக்கு எந்த காதில் துளை இருந்தது? என்று கேட்டுவிட்டார்.

அதன்பிறகு நீரில் எவ்வளவோ நேரம் விளையாடி இருக்கிறேன். காற்றில் அதிக தூரம் பயணம் சென்றிருக்கிறேன். ஆனால் என் சிறு வயது முதல் இருந்த அந்த காது வலி இன்று வரை எனக்கு மீண்டும் வரவே இல்லை. இந்த சம்பவத்தின் மூலம் தேவன் பூரணமாக குணமாக்குகிறவர் என்பதை உணர்ந்தேன். என் வாழ்க்கையில் தேவன் செய்த நன்மைக்காக அவரை துதிக்கிறேன்.