0 1 min 1 yr

கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார், துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது. சங்கீதம்:11.5

எல்லா தேவ பிள்ளைகளின் இருதயத்திலும் இருக்கும் மிகப் பெரிய கேள்வி என்னவென்றால், எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனைகள் வருகின்றன. கர்த்தருக்கு உண்மையாய் வாழாத எவ்வளவோ பேர் நன்றாக இருக்கிறார்களே? என்பதாகும்.

மேலும் இந்தக் கஷ்டங்களுக்கு முக்கிய காரணம், பிசாசு தான் என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். ஆனால் மேற்கண்ட வசனத்தின்படி, தேவனும் நம்மை சோதிக்கிறார் என்று அறிகிறோம்.

பாவத்தில் இருந்து மீட்டு நமக்கு பரிசுத்த வாழ்க்கையைத் தந்த பிறகும், இந்தச் சோதனைகள் எதற்காக நமக்கு அளிக்கப்படுகின்றன? என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. நீதிமானைத் தேவன் எதற்காக சோதிக்கிறார் என்பதையும், அதன் பின்னணிகளைக் குறித்தும் இந்த வேதப் பாடத்தில் ஆராய்ந்து அறிவோம்.

1. அன்பின் அளவு:

நம் மீதான மிகுந்த அன்பினால், பாவத்தில் இருந்து நம்மை தேவன் இரட்சித்தார். அவரைத் தேடி நாம் போகவில்லை, அவர் நம்மைத் தேடி வந்தார். யாருக்கும் வேண்டாதவர்களாக இருந்த நம்மை, அவருக்கு வேண்டும் என்றார். இதில் இருந்து தேவனுடைய அளவில்லாத அன்பை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் அவரது அன்பிற்கு நிகராக நாம் என்ன செய்கிறோம்? என்ற கேள்வி எழுப்பப்பட்டால், அதற்கான பதிலை கூற முடியாமல் திணறுகிறோம். ஏனெனில் அவர் காட்டிய அன்பிற்கு முன்னால், நாம் செய்யும் ஊழியங்கள் எதுவுமே நிகராக அமையாது.

இந்நிலையில் நாம் உண்மையாக அவரை அன்புக் கூறுகிறோமா? என்பதை அறிய தேவன் சில சோதனைகளை நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார். அதைக் குறித்து உபாகமம்:13.1-3 வசனங்களில் காணலாம். அதன்படி, நம்மை தேவனிடம் இருந்து பிரிக்கக் கூடிய வகையில், திசைத் திருப்பும் பல சம்பவங்கள் நம் வாழ்க்கையில் நடைபெறலாம்.

எடுத்துக்காட்டாக, இயேசு கிறிஸ்துவை மட்டுமே நாம் உண்மையான தேவன் என்று நம்புகிறோம், அவரையே ஆராதிக்கிறோம். ஆனால் சில நேரங்களில் நம்மோடு வேலைச் செய்யும் மற்ற மத நம்பிக்கைகளைக் கொண்டவர்கள், அவர்கள் சேவிக்கும் தெய்வங்கள் மூலம் அல்லது கோயில்களில் அற்புதம் நடைபெறுவதாக கூறுவதைக் கேட்கிறோம். நாம் கடந்து செல்லும் சில சூழ்நிலைகளில், அவற்றைக் கேட்பதைத் தவிர்க்க முடிவதில்லை.

இது போன்ற காரியங்களைத் தொடர்ந்து நாம் கேட்கும் போது, நமக்குள் சில கேள்விகள் எழுகின்றன. தெய்வங்களாக பாவிக்கப்படும் கல்லும், மண்ணும் எப்படி அற்புதம் செய்ய முடியும்? அவை தேவர்கள் அல்ல என வேதம் கூறும் போது, அந்தக் கோயிலில் அற்புதம் நிகழ்த்தியது யார்? போன்ற கேள்விகள் உண்டாகின்றன.

இன்னொருபுறம் நம் தேவன் மீதான விசுவாசத்திலும் சற்று தளர்வு உண்டாகிறது. இது தேவன் அளிக்கும் ஒரு சோதனை என்று நாம் உபாகமம்: 13.3 வசனத்தில் வாசிக்கிறோம்.

இது போன்ற சோதனைகளில், நம் தேவன் மீதான விசுவாசத்தில் தளர்ந்து போகக் கூடாது. யார் என்ன கூறினாலும், யோபு கூறுவது போல, நான் ஆராதிக்கும் தேவன் இன்னார் என்று அறிவேன் என்ற உறுதி நமக்குள் இருக்க வேண்டும்.

ஏனெனில் தேவன் மீதான நமது அன்பு அதிகரிக்கும் போது, இது போன்ற செய்திகள் நம்மை கலங்க செய்யாது. எனவே தேவனோடு உள்ள உறவை தினமும் புதுப்பித்து கொள்ள வேண்டும்.

இதேபோல, நம்மை கிறிஸ்துவிற்குள் வழிநடத்திய அல்லது நாம் மேன்மையாக நினைக்கும் சில தேவ ஊழியர்களை மிகவும் நேசிக்கிறோம். இந்த அன்பு சில நேரங்களில், தேவன் மீதான அன்பை காட்டிலும் அதிகமாகி விடுகிறது. அந்தக் குறிப்பிட்ட நபர் கூறுவது எல்லாமே சரி என்று நம்புகிறோம்.

இது கூட தேவன் மீதான அன்பை நிரூபிக்கும் ஒரு சோதனையாக, தேவன் நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் அதிகமாக நம்பும் நபர், தேவனை விட்டு விலகிப் போனால், அவர்களை நம்பும் நாமும் பின்மாற்றத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளது.

எனவே ஆவிக்குரிய வாழ்க்கையில் நம்மை நடத்திய அல்லது நடத்தும் நபர்களைப் பின்பற்றலாம். ஆனால் அவர்களின் ஆலோசனைகள் வேதத்திற்கு புறம்பாக அமைந்தால், அவற்றை பின்பற்றக் கூடாது.

நம் வாழ்க்கையில் தேவனை எந்த அளவிற்கு நேசிக்கிறோம் என்பதை அறிவதற்கு இது தேவனால் அனுமதிக்கப்படும் ஒரு சோதனை ஆகும். எனவே இந்தச் சோதனையில் இடறி பின்வாங்கி போகாமல், தேவனை மட்டுமே அதிகமாக நேசிக்கிறோம் என்பதை நிரூபித்து, ஜெயமுள்ள வாழ்க்கையைத் தொடருவோம்.

(பாகம் -2 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *