0 1 min 8 mths

உங்களுக்கு தேவன் மீது அன்பு இருக்கிறதா என்று யாரை கேட்டாலும், இருக்கிறது என்று தான் கூறுவார்கள். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இயேசுவை நேசிக்கிறோமா? என்றால், கொஞ்சம் சந்தேகம் எழுகிறது. அன்பு சகலத்தையும் தாங்கும், சகிக்கும், ஜெயிக்கும் என்றெல்லாம் வேதத்தில் வாசிக்கிறோம்.

அப்படி நமக்குள் தேவ அன்பு இருக்குமானால், நம் வாழ்க்கையில் வரும் சோதனைகளில் நாம் புலம்பமாட்டோம். எல்லா பிரச்சனைகளிலும் மனிதர்களை நாடி ஓடமாட்டோம். ஊழியர்களால் எச்சரிக்கையின் செய்தி கேட்கும் போது, கோபப்படமாட்டோம். இதுபோல பல ‘மாட்டோம்’-கள் நம் வாழ்க்கையில் இடம்பெறும்.

இந்த காரியத்தை குறித்து கூறும் போது, வட இந்தியாவில் நடந்ததாக நண்பர் ஒருவர் கூறிய ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. அது தேவ அன்பின் ஆழத்தை சோதிப்பதாக அமைந்தது என்பதில் சந்தேகமே இல்லை.

கேட்டது:

வட இந்தியாவில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகம் உள்ள ஒரு பகுதியில் கிறிஸ்துவ சபையை ஒரு போதகர் நடத்தி வந்தார். அவ்வப்போது அந்த ஊருக்கு வரும் தீவிரவாதிகள், மக்களிடம் உள்ள பொருட்களையும், பணத்தையும் சூரையாடி செல்வது வழக்கம்.

இந்நிலையில் ஒரு முறை ஞாயிற்றுக் கிழமை ஆராதனையில், எல்லா விசுவாசிகளும் ஆவியில் நிரம்பிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஊருக்குள் தீவிரவாதிகள் நுழைந்துவிட்டனர். இதை கண்ட ஊர் மக்கள், பகல் வேளை என்பதால் வீட்டு கதவுகளை பூட்டிவிட்டு, மெளனம் சாதித்தனர்.

ஆனால் இதை அறியாத சபை விசுவாசிகள் சத்தமாக பரிசுத்தாவியில் நிரப்பிக் கொண்டிருந்தனர். அதை கேட்டு கோபமடைந்த தீவிரவாதிகள், அப்பகுதியில் விசாரித்த போது, அது ஒரு கிறிஸ்தவ தேவாலயம் என்று தெரியவந்தது. அதனால் மேலும் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள், இன்று அவர்களுக்கு ஒரு புத்தியை புகட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு தேவாலயத்திற்கு வந்தனர்.

அதிக சத்தமாக இருந்த தேவாலயத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள், துப்பாக்கியால் மேலே நோக்கி 2-3 முறை சுட்டனர். சத்தம் கேட்டு பயந்து போன விசுவாசிகள் மெளனமாகிவிட்டனர். கை கால்கள் நடுங்கி, எல்லாரும் சுவர் ஓரமாக ஒதுங்கி நின்றனர்.

அப்போது தீவிரவாத கும்பலுக்கு தலைவனான நபர் வந்து நடுவே நின்று, நீங்கள் கும்பிடும் இயேசுவிற்கு இவ்வளவு சத்தமாக கூறினால் தான் கேட்க முடியுமா? அப்படிப்பட்ட இயேசுவை நீங்கள் ஒவ்வொருவராக இப்போது மறுதலிக்க வேண்டும்.

மறுதலிக்காதவர்களை இங்கேயே சுட்டுக் கொலை செய்வோம். மறுதலிக்க தயாராக இருப்பவர்கள் வலதுபுறத்திலும், முடியாது என்பவர்கள் இடதுபுறத்திலும் வாருங்கள் என்று மிரட்டினான்.

முதலில் எல்லாரும் தயங்கி தயங்கி நிற்கவே, திரும்பவும் துப்பாக்கியை மேலே நோக்கி சுட்டனர். இடதுபுறத்தில் ஆட்கள் அதிகமாக தென்பட, அவர்களை ஒவ்வொருவராக அழைத்து துப்பாக்கி முனையில் கேட்ட போது, வலதுபுறத்திற்கு செல்ல ஒப்புக் கொண்டனர். முடிவாக சபை போதகரும் 2 விசுவாசிகளும் மட்டும், முடிவு வரை இயேசுவிற்காக தங்களின் உயிரை கொடுக்க தயாராக இடதுபுறத்திலேயே இருந்தனர்.
துப்பாக்கி காட்டி எவ்வளவு மிரட்டியும், இயேசுவை அவர்கள் மறுதலிக்கவில்லை.

அதை கண்டு ஆச்சரியப்பட்ட தீவிரவாதிகளின் தலைவன், மறுதலிக்க தயாராக இருந்த மற்றவர்களை பார்த்து, நீங்கள் எல்லாரும் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் வாழும் நடிகர்கள். இனிமேல் கிறிஸ்தவர்கள் என்று கூறி, மற்றவர்களை ஏமாற்றாதீர்கள். இந்த மூன்று பேர் தான் உண்மையான கிறிஸ்தவர்கள். இவர்கள் “கிறிஸ்துவின் தீவிரவாதிகள்” என்று கூறி யாரையும் கொல்லாமல் அங்கிருந்து வெளியேறினர்.
சிந்தித்தது:

மேற்கூறிய சம்பவத்தை கேட்ட எனக்கு, ஒருபுறம் ஆச்சரியமும், மறுபுறம் நான் எந்த நிலையில் இருக்கிறேன் என்றும் யோசிக்க தோன்றியது. நாளை நாம் செல்லும் தேவாலயத்தில் இது போல துப்பாக்கி முனையில் ஒரு கேள்வி எழுந்தால், இயேசுவிற்காக மரிக்க நான் தயாராக நிற்பேனா? என்று என்னையே ஆராய்ந்து பார்த்தேன்.

நிச்சயமாக கர்த்தருக்காக மரிக்கவும் தயாரிக்க இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, தேவனே உம் அன்பினால் என் இதயத்தை நிரப்பும் என்று ஜெபித்தேன். இந்த சம்பவத்தை கேட்ட உங்களுக்குள்ளும், அப்படி ஒரு கேள்வி மனதில் ஒலிக்கிறதா?

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *