0 1 min 3 weeks

கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சகோதரன் கூறுகிறார்…

தேவ ஊழியர்களின் வேத வார்த்தையைக் கேட்டு சிறு வயதிலேயே இரட்சிக்கப்பட்டேன். 20 வயதில் தேவனின் அழைப்பை பெற்று, ஊழியத்திற்காக வந்தேன். கிராம பகுதியில் ஊழியத்தை துவங்கிய நான், ஒரு ஸ்தாபனத்தின் கீழ் செயலாற்றி வந்தேன்.

கிராமத்தில் சிறு கூட்டம் மக்கள் இரட்சிக்கப்பட்டதால், மகிழ்ச்சியோடு ஊழியத்தை தொடர்ந்தேன். நீண்டதூரம் பயணித்து ஊழியம் செய்து வர, உடல் வெப்பம் அதிகரித்தது. மேலும், அவ்வப்போது சிறுநீர் கழிக்க முடியாமல் திணறினேன்.

திருமணம் செய்து கொள்ளாததால், துவக்கத்தில் இதை பெரிய விஷயமாக எடுத்து கொள்ளவில்லை. நாட்கள் செல்ல செல்ல சிறுநீர் கழிக்க முடியாமல் அதிக அவஸ்தைப்பட்டேன். சில மாதங்கள் கடந்த நிலையில் என்னால் ஒரு சொட்டு கூட சிறுநீர் கழிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் கடும் வயிற்றுப் போக்கு ஏற்பட ஆரம்பித்தது.

ஆனால் தேவாலயத்திற்கு வரும் விசுவாசிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதால், நான் உயிருடன் இருக்கும் வரை ஊழியத்தை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆரோக்கிய குறைப்பாடு உடன் ஊழியத்தை தொடர்ந்தேன். நாட்கள் செல்ல செல்ல என் நிலை மேலும் மோசமானது. வயிறு வீக்கம், வாந்தி, குமட்டல் என பல உடல் பிரச்சனைகள் வந்தன.

அறிமுகமான டாக்டர் ஒருவர் என்னை பரிசோதித்துவிட்டு, உங்களின் சிறுநீர் பாதையில் ஏதோ ஒரு அடைப்பு ஏற்பட்டுள்ளது. சிறுநீரக கற்கள் போல இல்லை. ஆனால் அதை அறுவை சிகிச்சை செய்து மட்டுமே அகற்ற முடியும் என்றார். மேலும் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை என்பதால், பல லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று தெரிவித்தார்.

அந்த அளவுக்கு வசதி இல்லாத சபையை நடத்தி கொண்டிருந்த எனக்கு, உதவும் வகையில் சபையும் இல்லை, என் வீட்டாரும் இல்லை. இதனால் அறுவைச் சிகிச்சைக்கான பணத்தை ஆயத்தம் செய்வது முடியாத காரியம் என்று தெரிந்தது.

என் ஆரோக்கிய நிலையை குறித்து அறிந்த, சபையின் தலைமை போதகர், என்னை காண வந்தார். இந்த நிலையிலும் ஊழியம் தடையின்றி நடைபெற்று வந்ததும், அதற்காக எந்த உதவியும் தலைமை ஸ்தாபனத்தில் கேட்காததையும் அறிந்து, தலைமை போதகர் மிகவும் வருத்தப்பட்டார்.

என் படுக்கைக்கு அருகில் வந்த அவர், மற்ற அனைவரையும் அறையை விட்டு வெளியேறுமாறு கூறினார். என் நிலை குறித்து ஒரு வார்த்தை கூட கேட்காமல், ஜெபிப்போம் என்று கூறி ஜெபிக்க ஆரம்பித்தார். கண்ணீர் விட்டு, பாரத்தோடு ஜெபித்தார். அவர் ஜெபத்தை தொடர, என் தலையில் இருந்து ஏதோ ஒரு வல்லமை இறங்குவதை உணர ஆரம்பித்தேன்.

அந்த வல்லமை அப்படியே என உடலில் இறங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக உடல் முழுவதும் பரவ, சில நிமிடங்களில் எனக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என தோன்றியது. இதற்கு முன் இந்த மாதிரியான உணர்வு ஏற்பட்டாலும், நான் கழிவறைக்கு சென்றால், ஒரு சில சொட்டுகள் மட்டுமே வரும். இதனால் அதை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை.

கொஞ்ச நேரத்தில் நான் அணிந்திருந்த கைலி நனைய ஆரம்பித்தது. ஜெபத்திற்கு நடுவே கைலியை பார்த்த போது, எனக்கு சிறுநீர் வெளியேறுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. கைலியை கழட்டி விட்டு, கழிவறைக்கு சென்று சிறுநீர் கழித்தேன்.

இரத்தம் கலந்த நிறத்தில் வர ஆரம்பித்த சிறுநீர், சில விநாடிகளுக்கு பிறகு, சாதாரண நிறத்திற்கு மாறியது. சிறுநீர் வெளியேற, வெளியேற ஏதோ சிறு சிறு துண்டுகள் வருவதை கண்டேன். சிறுநீர் முழுமையாக வெளியேறிய உடன், என் உடலில் இருந்த பலவீனம் குறைய ஆரம்பித்தது. எனக்கு ஒரு புதிய சக்தி வந்ததாக உணர்ந்தேன்.

கழிவறையில் இருந்த வெளியே வந்த போது, தலைமை போதகர் ஜெபத்தை முடித்து காத்திருந்தார். நடந்த சம்பவங்களை கேட்ட அவர், ஆவியில் நிறைந்து தேவனுக்கு நன்றி கூறினார்.

சிறுநீரில் இருந்து கிடைத்த துண்டுகளில் ஒன்றை பரிசோதித்த டாக்டர், அது சதை பகுதி என்று கூறினார். மேலும் உங்கள் சிறுநீர் குழாயில் இருந்த சதை பகுதி, இப்படி தானாக அறுந்து வெளியேறியுள்ளது என்றும், வழக்கமாக இப்படி வெளியேறினால், அதிகளவில் இரத்தம் வெளியேறி இறந்து விடுவார்கள். ஆனால் நீங்கள் உயிரோடு இருப்பதே அதிசயம் என்றார்.

சாகும் தருவாயில் இருந்த எனக்காக பாரத்தோடு தேவ ஊழியர் ஜெபித்த ஜெபத்தை தேவன் கேட்டார். உண்மையாய் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாக இருக்கிறார். லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து அறுவை சிகிச்சையில் தீர்க்க வேண்டிய என் பிரச்சனையை, தேவனே சிறந்த டாக்டராக இருந்து அவரே முடித்து வைத்தார்.

இந்த சாட்சியை கேட்டு கொண்டிருக்கும் தேவ பிள்ளையே, உங்கள் வாழ்க்கையில் தீர்க்க முடியாத வியாதியும், பலவீனமும் வாட்டி வதைக்கிறதா? என்னை குணமாக்கி இன்னும் அற்புத சாட்சியாக நிலைநிறுத்தியுள்ள இயேசு, உங்களையும் குணமாக்க போதுமானவராக உள்ளார்.

அவரை விட சிறந்த டாக்டர் இந்த உலகில் இல்லை. நம்மை படைத்த தேவனால் நம்மில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியாதா? இந்த உலகில் வேறெந்த டாக்டராலும் அவரை போல சிகிச்சை அளிக்க முடியாது என்பதற்கு நானே சிறந்த சாட்சி. எல்லா புகழும் கணமும் மகிமையும் தேவனுக்கே செலுத்துகிறேன், ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *