0 1 min 1 mth

இரட்சிக்கப்பட்ட பலருக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தேவ சமூகத்திற்கு போகவோ, ஜெபிக்கவோ, வேத வாசிக்கவோ விருப்பம் இல்லாத நிலை ஏற்படுகிறது. இன்றைய கிறிஸ்தவர்களில் பலருக்குள்ளும் இந்த நிலை இருந்தாலும், வெளியோட்டமாக அதை காட்டி கொள்ளாமல், நல்ல நடிகர்களாக வாழ்கிறார்கள்.

இதனால் தேவனிடம் இருந்து சந்தோஷம், சமாதானம், ஆசீர்வாதம் ஆகியவற்றை பெறுவதற்கு பதிலாக, ஏமாற்றம், துக்கம், சாபம் போன்றவை தான் கிடைக்கின்றன. இது அவர்களின் வாழ்க்கை முழுவதும் எதிரொலிக்கிறது.

கேட்டது:

இது குறித்து கூறும் போது, சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு ஒருவரை அழைத்து சென்றிருந்தேன். அப்போது ஏறக்குறைய 2 மணிநேரத்திற்கு மேல் ஒரு தனி அறையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த நேரத்தில் பக்கத்து அறையில் இருந்த இரு சகோதரிகள் பேசி கொண்டிருந்த காரியங்கள் என் காதில் விழுந்தது. அவர்களின் பேச்சில் இருவரும் இரட்சிக்கப்பட்டவர்கள் என்பது தெளிவானது.

தங்கள் வாழ்க்கையின் அன்றாட காரியங்களை பற்றி ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். அதில் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வரும் ஒருவர், வேலை முடிந்து வீடு திரும்புவதற்குள் வீட்டில் உள்ள மகளும் கணவரும் சேர்ந்து எல்லா பணிகளையும் முடித்து விடுவார்கள்.

வீட்டிற்கு போய் சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விடுவேன். ஆனால் இரவில் நீண்டநேரம் எனக்கு தூக்கமே வராது. நான் தூங்கினாலும், அது நிம்மதியான தூக்கம் என சொல்ல முடியாது என்று கூறினார்.

இதை கேட்ட மற்றொரு சகோதரி, நான் வீட்டிற்கு சென்றவுடன் சாப்பிட்டு விட்டு, தூங்குவதற்கு முன் குறைந்தது 10 நிமிடங்களாவது முழங்காலில் நின்று கண்ணீர் விட்டு ஜெபிப்பேன். அதன்பிறகு தூங்கி விடுவேன் என்றார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த திருமண சகோதரி, தினமும் கண்ணீர் விட்டு ஜெபிக்க முடிகிறதா? படுத்த உடன் தூக்கம் வருகிறதா எப்படி? நானும் எவ்வளவோ காரியங்களை செய்து பார்த்தேன். ஆனால் தூக்கம் மட்டும் சரியாக வருவதில்லை.

என் வீட்டில் உள்ளவர்கள் அவ்வளவு நன்றாக என்னை பார்த்து கொள்கிறார்கள். எந்த டென்ஷனும் எனக்கு தருவதில்லை. ஆனால் எனக்கு இருக்கும் குறை என்ன என்றே தெரியவில்லை என்றார்.

இரவில் படுப்பதற்கு முன் ஜெபித்து விட்டு படுக்க வேண்டியது தானே மேடம்? என்ற கேள்விக்கு, அது மட்டும் என்னிடம் சொல்லாதே. நான் ஆண்டவர் மேலே செம்ம கோபத்தில் இருக்கேன். அதனால் நான் ஜெபித்து பல நாட்களாகிவிட்டது.

அது என்னமோ, நான் ஜெபிக்க ஆரம்பித்தால், என் வாழ்க்கையில் நடந்த மோசமான காரியங்கள் மட்டும் தான் நினைவுக்கு வருகின்றன. நான் ஒரு கிறிஸ்துவராக இருந்தும் எனக்கு ஏன் இவ்வளவு பிரச்சனைகள், தோல்விகள் வந்தது? என்று நினைக்கும் போது, ஜெபிக்கிற எண்ணமே போய்விடும்.

ஆண்டவருக்கு என்னோட நிலைமை தெரியாதா? அதை எல்லாம் நினைச்சு பார்த்தா என டென்ஷன் ஆகிவிடும். அதனால் நான் ஜெபிப்பதே இல்லை என்று தன் மற்ற காரியங்களை பேசி கொண்டிருந்தார் திருமணமான சகோதரி.

சிந்தித்தது:

எதார்த்தமாக கேட்ட மேற்கண்ட இந்த சகோதரிகளின் பேச்சு மூலம் இன்றைய கிறிஸ்தவர்களின் முக்கிய பிரச்சனை ஒன்று தெரியவந்தது. நாம் ஜெபிக்கும் போது, நம் மனதை குழப்பமடைய வைக்கும் பல தவறான ஆலோசனைகளை பிசாசு கொண்டு வருகிறான்.

அதற்கு நாம் செவி கொடுக்கும் போது, தேவன் மீதான ஒரு வெறுப்பு உருவாகிறது. இந்த வெறுப்பு அதிகமாகும் போது, ஒரு கட்டத்தில் நமக்கு ஜெபிக்க, வேதம் வாசிக்க, தேவ சமூகத்திற்கு போக விருப்பம் இன்றி, அவர் மீதான வெறுப்பாக மாறுகிறது.

இதனால் பெயருக்கு கிறிஸ்தவராக வாழ்ந்தாலும், நாம் உண்மையில் ஒரு கிறிஸ்து விரோதியாக மாறி விடுகிறோம். இதன் விளைவாக பல ஆசீர்வாதங்களை இழப்பது மட்டுமின்றி, மனதில் தேவனால் அளிக்கப்படும் சமாதானம் அற்று, பல தவறான முடிவுகளுக்கு செல்கிறோம்.

இது போன்ற நிலையை தவிர்க்க, நம் வாழ்க்கையில் தேவன் செய்த நன்மைகளையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவ்வப்போது நினைத்து அவரை துதிப்போம். நாம் வாழ்க்கையில் சில தோல்விகளையும் இழப்புகளையும் சந்திக்க பல காரணங்கள் இருக்கலாம்.

அதற்காக தேவனை குற்றப்படுத்தி கொண்டு, அவர் மீது வெறுப்பு ஏற்படாதவாறு நம் மனதை பாதுகாத்து கொள்வோம். நம் ஜெப நேரத்தில் வரும் தவறான யோசனைகள், எண்ணங்களை, இயேசுவின் நாமத்தில் கட்டுவோம். அப்போது, நாம் ஒரு தோல்வி அடைந்த கிறி்ஸ்தவராக அல்ல, உண்மையான கிறிஸ்தவராக வாழ்ந்து, எழும்பி பிரகாசிக்க முடியும்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *