0 1 min 2 weeks

கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு தேவ ஊழியர் கூறுகிறார்…

என்னை பாவத்தில் இருந்து இரட்சிக்க தனது சொந்த உயிரையே அளித்த இயேசுவிற்காக, எனது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் நோக்கில், தேவனுக்காக ஊழியம் செய்து வருகிறேன். நான் ஊழியம் செய்து வரும் ஸ்தாபனத்திற்கு பல இடங்களில் கிளை சபைகள் இருப்பதால், தேவ ஊழியர்களாகிய எங்களுக்கு அவ்வப்போது இடமாற்றம் அளிக்கப்படுவது வழக்கம்.

இதன்மூலம் புதிய விசுவாசிகள், புதிய இடம், புதிய ஊழியம் என்று அவ்வப்போது எங்கள் வாழ்க்கையில் பல புதுமைகளை காண்கிறோம். இந்நிலையில் நான் ஒரு இடத்தில் பல ஆண்டுகளாக ஊழியம் செய்த நிலையில், அங்கிருந்து ஒரு புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். புதிய இடத்தில் ஊழியத்தை விரிவுப்படுத்துவதை குறித்து, எனக்கு பொறுப்பாளர்களாக உள்ள ஊழியர்களிடம் கலந்து ஆலோசித்தேன்.

நான் கூறிய சில கருத்துக்களை ஏற்றுக் கொண்ட மூத்த ஊழியர்கள், ஜெபித்து தேவ ஆலோசனை உடன் செய்யுமாறு கூறினர். எனவே எனது முதல் திட்டமாக, அந்த இடத்தில் இருந்த தேவாலய கட்டிடத்தை விரிவுப்படுத்தலாம் என்று நினைத்தேன்.

இது குறித்து சபை விசுவாசிகளிடம் ஆலோசித்தேன். அப்போது அங்கிருந்த சில பணக்கார விசுவாசிகள், தற்போதைக்கு அதெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டனர். இதனால் மிகவும் மனசோர்வு அடைந்த நான், தேவனிடம் ஜெபிக்க ஆரம்பித்தேன்.

அப்போது தேவன், நீ செய்ய நினைக்கும் காரியங்களை தைரியமாக செய் என்று பேசினார். இதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்த நான், மேற்கொண்டு மனிதர்களின் பேச்சுகளை கேட்பதை தவிர்த்து, கட்டிடப் பணிக்காக ஜெபிக்குமாறு ஜெபக் கூட்டங்களில் அறிவித்தேன்.

இதனால் என் மீது ஆத்திரமடைந்த பணக்கார விசுவாசிகள், நாம் இவ்வளவு கூறியும் தேவ ஊழியர் தொடர்ந்து கட்டிட பணியை நடத்த நினைக்கிறார். நாம் அளிக்கும் தசமபாகம், காணிக்கை ஆகியவற்றை வைத்து தான், தேவ ஊழியரின் இந்த திட்டம் நிறைவேறும். எனவே இனிவரும் சில மாதங்களுக்கு நாம் அவற்றை அளிக்க கூடாது என்று தங்களுக்கு ஒரு முடிவெடுத்து கொண்டனர்.

அதேபோல அடுத்த மாதம் தேவாலய பணி துவங்கும் என்று அறிவித்த பிறகு, பெரும்பாலான பணக்கார விசுவாசிகள் காணிக்கையோ, தசமபாகமோ அளிப்பதை தவிர்த்தனர். தேவன் கூறிய வார்த்தையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அறிந்த நான், நிர்ணயிக்கப்பட்ட நாளில் கட்டிட வேலைக்கான கம்பி, சிமெண்ட், செங்கல், மணல் ஆகியவற்றை வாங்க முடிவு செய்தேன்.

என்னுடன் சில ஏழை விசுவாசிகளும், பணியாளர்களும் வர இருந்தனர். மேற்கூறிய பொருட்கள் வாங்க ஏறக்குறைய ரூ.10 லட்சம் வரை செலவாகும். ஆனால் என்னிடம் ஒரு ரூபாய் கூட இருக்கவில்லை. இந்நிலையில் விசுவாசத்தோடு ஜெபித்து, பொருட்களை எடுத்து வருவதற்கான லாரியை அழைக்க கூறினேன்.

என்னிடம் பணம் எதுவும் இல்லை என்பது, என்னை தவிர என்னுடன் உள்ள யாருக்கும் தெரியாது. சற்று நேரத்தில் லோடு லாரியும் வந்தாகிவிட்டது. விசுவாசிகள் வந்து என்னை அழைத்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் மனதில் தேவன் மீதான விசுவாசத்தை எந்த அளவிலும் குறையாமல் வைத்து கொண்டிருந்தேன்.

அப்போது திடீரென தேவாலயத்தின் கேட் திறக்கும் சத்தம் கேட்டது. நான் ஜன்னல் வழியாக பார்த்த போது, பழக்கமில்லாத ஒரு சகோதரி உள்ளே வந்துக் கொண்டிருந்தார். ஏதாவது ஜெபத் தேவைக்காக வந்திருப்பார் என்று நினைத்து அவரை வரவேற்றேன்.

தேவாலயத்திற்கு உள்ளே கூட வராத அவர், என்னிடம் வந்தவுடன் தனது கையில் இருந்த ஒரு சூட்கேஸை நீட்டிவிட்டு, இதில் ரூ.10 லட்சம் பணம் இருக்கிறது. இங்கு கொண்டு வந்து கொடுக்க கூறினார்கள் என்று கூறிவிட்டு, வேறெதுவும் கூறாமல் சென்றுவிட்டார்.

நான் அந்த பெட்டியை திறந்து பார்த்த போது, ரூ.10 லட்சம் இருந்தது. அந்த சகோதரியை நிமிர்ந்து பார்ப்பதற்குள், அவர் வெளியேறி இருந்தார். தேவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அந்த பணத்தில் பொருட்களை வாங்கி, தேவாலயத்தின் கட்டிடத்தை விரிவுப்படுத்தினேன்.

மாதங்கள் கடந்தன, தேவாலய பணிகள் முடியும் நிலையை எட்டியது. அப்போது என்னிடம் தசமபாகமும், காணிக்கையும் தர கூடாது என்று முடிவு செய்திருந்த பணக்கார விசுவாசிகள் வந்து, தாங்கள் செய்த தவறை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டு, அவர்களின் பங்களிப்பையும் அளித்தனர்.

அப்போது நான், தேவாலத்தின் பணிகளுக்காக அளிக்கும் பணம், தேவனுக்காக அளிப்பது. அதை நீங்கள் அளிக்கவில்லை என்றால், தேவன் வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் கொண்டு வருவார். நீங்கள் அதற்கு உதவவில்லை என்றால், அந்த ஆசீர்வாதத்தை இழப்பீர்கள் என்று அவர்களுக்கு அறிவுரை கூறினேன்.

இதன்மூலம் தேவனை நம்பி நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும், அவர் உறுதுணையாக நிற்கிறார் என்றும், ஊழியத்திற்காக பாடுபடுகிறவர்களை அவர் என்றும் கைவிடுவதில்லை என்றும் அறிந்து கொள்ள தேவன் உதவி செய்தார். தேவன் செய்த எல்லா அதிசயமான கிரியைகளுக்காக நன்றியுள்ள இதயத்தோடு அவரை துதிக்கிறேன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *