0 1 min 3 mths

தேவனுடைய ராஜ்ஜியம் என்ற வார்த்தையை இயேசு கூறியதாக 4 சுவிஷேசங்களிலும் வாசிக்க முடிகிறது. அந்த ராஜ்ஜியத்தின் பணியை துவக்கி வைத்த இயேசு, மீதமுள்ள வேலையை அவரை பின்பற்றிய மக்களிடம் ஒப்படைத்தார்.

இன்றைய காலத்தில் தேவ ராஜ்ஜியத்தை யார் கட்டியெழுப்புகிறார்கள் என்று கேட்டால், இரட்சிக்கப்பட்ட பலரும் பதில் தெரியாமல் திணறுகிறார்கள். எனக்கு சொந்தமா ஒரு வீடு கூட இல்ல பிரதர், எங்கிட்ட போய் தேவ ராஜ்ஜியத்தை கட்ட காசு கேட்கறீங்களே? என்று கேட்பவர்களும் உண்டு.

சில பழைய விசுவாசிகளை கேட்டால், தேவனுடைய ராஜ்ஜியத்தை கட்டுபவர்கள் தேவ ஊழியர்கள். இந்த பணியில் முழு நேரமாக உள்ள அவர்களுக்கு தசமபாகம், காணிக்கை ஆகியவற்றை எல்லாம் நாம் தவறாமல் கொடுத்தால் போதும் என்றார்கள் சிலர்.

பார்த்தது:

தேவனுடைய ராஜ்ஜியத்தை பற்றி பேசும் போது, சமீபத்தில் ஒருவரை சந்திப்பதற்காக ஒரு இடத்தில் நீண்டநேரம் காத்திருந்தேன். அப்போது நான் கண்ட சம்பவமும் அதன் பின்னணியில் தேவன் உணர்த்திய காரியமும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நான் காத்திருந்த இடத்திற்கு மிக அருகில் ஏறக்குறைய 20 மாடிகள் கொண்ட ஒரு கட்டிடத்தின் வேலை நடந்து கொண்டிருந்தது. எனக்கு நேரம் போகாததால் அதை கவனித்து கொண்டிருந்தேன்.

அப்போது 18வது மாடியில் இருந்த ஒருவருக்கு தேவையான சிமெண்ட் மற்றும் கற்களை கீழே இருந்து கயிற்றின் மூலம் மேலே ஏற்றிக் கொண்டிருந்தார்கள். குறிப்பிட்ட அளவு பொருட்களை சாக்கு பையில் வைத்து, 20வது மாடியில் உருளை போடப்பட்ட கயிற்றின் மூலம் கீழே இருந்து மேல் நோக்கி இழுத்தார்கள்.

அதிக எடை கொண்ட பொருட்களை ஏற்றிய போது, கீழே இருந்தவர்களால் மட்டுமே இழுத்து மேலே ஏற்ற முடியவில்லை. எனவே ஒவ்வொரு மாடியிலும் நிறுத்தி, அதற்கு மேலே உள்ள மாடியில் இருந்து சற்று இழுத்து கொடுத்தார்கள். அப்படி பொருட்கள் மேலே சென்று கொண்டே இருந்தன.

ஒரு கட்டத்தில் மேலே இடித்து தள்ளப்பட்ட தேவையில்லாத கட்டுமானங்கள், குப்பைகள் ஆகியவற்றை அங்கிருந்து அப்படியே கீழே கொட்டாமல், அதை ஒரு குழாய் போன்ற அமைப்பு மூலம் கீழே அனுப்பினார்கள். இந்த குழாய்க்கு ஒவ்வொரு மாடியிலும் திறப்பு இருந்தது.

இதனால் எந்த மாடியில் இருந்து வேண்டுமானாலும் குப்பையை நேரடியாக அந்த குழாயின் வழியாக கீழே கொட்டலாம். இதன்மூலம் ஒவ்வொரு முறையும் குப்பைகளை எடுத்து கொண்டு கீழே இறங்குவதை தவிர்த்து, அந்த நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

மேலும் குப்பை மேலிருந்து நேரடியாக கொட்டப்படாமல், குழாய் மூலம் கொட்டப்படுவதால், அப்பகுதி முழுவதும் தூசி பறக்காமல் தவிர்க்கப்படுகிறது. அதேபோல, எல்லா மாடியின் குப்பைகளும் ஒரே இடத்தில் சேர்ந்துவிடுகிறது. இதனால் ஒரே இடத்தில் இருந்து குப்பைகளை அகற்றினால் போதுமானது.

சிந்தித்தது:

மேற்கூறிய கட்டிட பணியை போல தான், தேவனுடைய ராஜ்ஜியத்தின் பணியும் நடைபெற வேண்டியுள்ளது. தேவனுடைய ராஜ்ஜியத்தை கட்டியெழுப்ப தேவ ஊழியர்கள் கீழே இருந்து பொருட்களான தேவனுடைய வார்த்தைகள், வசனங்கள், ஜெபத்தின் மூலம் கிடைக்கும் விடுதலை, பிற ஊழியங்கள் என்று மேலே ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பி கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களால் தாங்க முடியாத சந்தர்ப்பங்கள் வரும் போது, ஒவ்வொரு மாடியில் இருக்கும் விசுவாசிகளும் அவர்களுக்கு உதவ வேண்டும். ஊழியங்களுக்கு செல்லும் போது உடன் போவது, விசுவாசிகளின் தேவைகளுக்காக கூடி ஜெபிப்பது, சபைகளில் அளிக்கப்படும் ஊழியங்களில் பங்கேற்பது, புதிய ஆத்துமாக்களை சந்திப்பது, தேவ சமூகத்தில் மற்றவர்களை ஊக்கப்படுத்துவது போன்றவை இதில் உட்படும்.

இதனால் தேவ ஊழியர்களின் நேரமும், தேவையில்லாத உழைப்பும் தவிர்க்கப்படுகிறது. எல்லா இடங்களுக்கும் தேவ ஊழியர்களே சென்று ஊழியம் செய்யட்டும் என்று விசுவாசிகள் இருந்தால், ஊழியர்கள் சோர்ந்து போவது மட்டுமின்றி, விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சியும் குறைவாகவே இருக்கும்.

எந்த தவறும் செய்யாத மனிதர்கள் இந்த உலகத்தில் கிடையாது. எனவே நம்மில் உள்ள தவறுகள் அல்லது நாம் பிறரிடம் கண்ட தவறுகளை பலருக்கும் கூறுவதை தவிர்த்து, அதை தேவனிடம் அடைக்கப்பட்ட குழாய் என்பது போல ஜெபத்தில் தேவனிடம் கொட்டலாம். இதனால் அது நம் மனதில் இருந்து நீங்குவதோடு, யாருக்கும் இடறல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

இயேசு கூறியது போல, அறுப்போ மிகுதி ஆட்களோ குறைவு என்ற நிலையில், சர்ச்சுக்கு போகிறேன், என்னால் முடிஞ்சதை செய்யறேன். நான் விசுவாசி தானே இவ்வளவு போதும் என்ற மனநிறைவு அடையாமல், இது தேவனுடைய ராஜ்ஜியம் கட்டப்படுவதற்கான வேலை என்ற கண்ணோட்டத்தில் நாம் செயலாற்ற வேண்டும்.

நாம் செய்வது ஒரு வேளை உடன் விசுவாசிகள் மற்றும் தேவ ஊழியர்களின் கண்களுக்கு பெரிய விஷயமாக தெரியாமல் போகலாம். ஆனால் தேவ ராஜ்ஜியத்தின் உரிமையாளரான இயேசுவிடம் நமக்கு கட்டாயம் பலன் கிடைக்கும்.

எனவே தேவ ராஜ்ஜியத்தை கட்டுவது தேவ ஊழியர்களுக்கு மட்டுமே உரிய பணி அல்ல. அது இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு தேவ பிள்ளைக்கும் உள்ள பணி என்பதை நினைவில் கொள்வோம்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *