
வேலூரை சேர்ந்த சாம் என்ற சகோதரன் கூறுகிறார்…
பாரம்பரிய பக்தி நிறைந்த குடும்பத்தை சேர்ந்தவன் நான். புகைப் பிடிப்பது, மது அருந்துவது உட்பட எல்லா கெட்ட பழக்கங்களும் எனக்கு இருந்தது. ஆனால் தெய்வங்களின் மீது தீவிர பக்தியுள்ளவனாகவும் இருந்தேன்.
நான் சார்ந்த தெய்வங்களைக் குறித்து யாராவது தவறாக கூறினால், அவர்களை அடித்து, உதைக்கவும் தயங்கமாட்டேன். இந்நிலையில் என்னோடு ஒரு கிறிஸ்துவ சகோதரன் வேலை செய்து வந்தார். நாங்கள் இருவரும் ஒரே தெருவில் வசித்து வந்ததால், அவரது சைக்கிளில் ஏறி, தினமும் வேலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன்.
நான் வேலை செய்யும் இடத்திலும், அதிகமாக கோபம் கொள்ளும் பழக்கம் கொண்ட நான், சக பணியாளர்களை கெட்ட வார்த்தைகளில் திட்டவும் தயங்குவதில்லை. நாங்கள் வேலைக்கு செல்லும் போது, என்னுடன் வரும் கிறிஸ்துவ நண்பர் எப்போது தேவனை குறித்தும், அவரது வாழ்க்கையில் தேவன் செய்த நன்மைகளை குறித்தும் கூறுவது வழக்கம். ஆனால் அவற்றை நான் கேட்க விரும்பாமல், அவரை எதிர்த்து பேசி வந்தேன்.
இதேபோல ஒரு நாள் நாங்கள் இருவரும் சைக்கிளில் செல்லும் போது, இயேசு கிறிஸ்துவை குறித்து நண்பர் கூறிக் கொண்டே வந்தார். சற்று நேரத்தில் கோபமடைந்த நான், அவரை பேச்சை நிறுத்துமாறு கூறினேன். அவரோ தொடர்ந்து கூறிக் கொண்டே வந்தார். இதில் ஆத்திரமடைந்த நான், சைக்கிளை நிறுத்தமாறு கூறினேன்.
சைக்கிளை நிறுத்தி இறங்கிய அவரை, கோபத்தில் அடித்து, உதைத்தேன். இனிமேல் உன்னோடு நான் வேலைக்கு வரமாட்டேன் என்று கூறி கோபமாக வீட்டிற்கு சென்றுவிட்டேன். அவரோ மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவரது வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அடுத்த நாள் காலையில் எங்கள் வீட்டில் ஏற்பட்ட சண்டையில், எதுவும் சாப்பிடாமல் வேலை செல்ல கிளம்பினேன். நண்பரின் வீட்டை கடந்து தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால், எனக்கு சற்று சங்கடமாக இருந்தது. நேற்று அவரை அடித்துவிட்டதால், அவரும் என்னை அழைத்து செல்லமாட்டார். எனவே எதுவும் தெரியாத மாதிரி, அவரது வீட்டை கடந்து செல்ல முயன்றேன். ஆனால் அவர், என்னை பார்த்துவிட்டார்.
என்னை கட்டாயப்படுத்தி சைக்கிளில் வருமாறு கம்பெனி வரை அழைத்து சென்றார். அங்கே சென்றவுடன் காலையில் சாப்பிட்டாயா? என்று கேட்டார். நான் சாப்பிடவில்லை என்று உண்மையை கூறினேன். உடனே தனது மதிய உணவை எனக்கு எடுத்து கொடுத்து சாப்பிடுமாறு வற்புறுத்தினார்.
எனக்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. நேற்று அவரை கோபத்தில் அடித்து உதைத்த மனிதன் நான், இன்று எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் எனக்கு உணவு தருகிறாரே என்று என் மனம் வருந்தியது. சாப்பிட்ட பிறகு, அவரிடம் மன்னிப்புக் கேட்டேன்.
அதன்பிறகு, உங்களை அடித்து, உதைத்த என் மீது உங்களுக்கு கோபமே வரவில்லையா? என்று கேட்டேன். உடனே அவர், இயேசுவின் அன்பு அதை மன்னித்துவிட்டது என்று சாதாரணமாக கூறினார். அவ்வளவு விலையேறப்பட்டதா அந்த இயேசுவின் அன்பு என்று வியந்தேன். நானும் அவரோடு தேவாலயத்திற்கு செல்ல ஆரம்பித்தேன்.
தேவலாயத்தில் என் மீது காட்டப்பட்ட சகோதர அன்பிற்கு முன்னால், எனது கோபம், எரிச்சல், பெருமை, கெட்ட பழக்கங்கள் ஆகியவை எல்லாம் மறைந்தன. கிறிஸ்துவின் சுபாவங்களான சாந்தம், தாழ்மை, தயவு, இரக்கம் ஆகிய நற்பண்புகள் என்னில் பிறந்தன. இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, இன்று நானும் என் குடும்பமும் வாழ்ந்து வருகிறோம்.
அன்று அந்த கிறிஸ்துவ நண்பர், பொறுமையாக என்னை மன்னிக்காமல் விட்டிருந்தால், இன்றும் இரட்சிக்கப்படாத ஒரு பாவியாகவே இருந்திருப்பேன். இந்த சாட்சியை படிக்கும் தேவ பிள்ளையே, நாம் கிறிஸ்தவர்கள் என்று பெயரில் மட்டும் வாழ்ந்து கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை.
நமது வாழ்க்கையில் கிறிஸ்துவின் சுபாவங்களை காட்டினால், உங்களை காண்பவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். அதற்கு எனது கிறிஸ்துவ நண்பர் சிறந்த சாட்சியாக உள்ளார். அந்த நண்பர் எனக்கு பல நாட்கள் சுவிஷேசம் கூறினார். ஆனால் அது எனக்குள் கிரியை செய்யவில்லை. அவரது கிறிஸ்துவின் சுபாவம் என்னை தொட்டது. இயேசுவின் பிள்ளையாக மாற்றியது.
இன்று நானும் இயேசுவின் சுபாவத்தை மற்றவர்களுக்கு காட்டுகிறேன். அநேகருக்கு அது ஒரு கேலி, கிண்டல் செய்வதற்கு ஏதுவாகிறது. ஆனால் ஒரு நாள் தேவன், அவர்களை இரட்சிப்பார் என்று விசுவாசிக்கிறேன். முடிவு வரை இயேசுவிற்கு நல்ல சாட்சியாக வாழ எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். என்னையும் உங்கள் மத்தியில் ஒரு சாட்சியாக நிறுத்திய தேவனை நன்றியுள்ள இருதயத்தோடு துதிக்கிறேன்.