
முப்பிரிநூல் சீக்கிரத்தில் அறாது என்று பிரசங்கி:4.12ல் வாசிக்கிறோம். இதனால் தான் தேவன், தனது பிள்ளைகளுக்கு இடையே சகோதர ஐக்கியத்தையும், தெய்வீக அன்பையும் அளித்துள்ளார். இதை நாம் செல்லும் சபையில், நமது குடும்பத்தில், கிறிஸ்துவ நண்பர்கள் இடையேயும் காண முடியும்.
இந்த கிறிஸ்துவின் ஐக்கியத்தை விரும்பாத பிசாசு, அதை தகர்த்து போட பல தந்திரங்களை கையாளுகிறான். இதற்காக தனக்கு ஏற்ற சில மனிதர்களையும் கையில் எடுத்து அவன் பயன்படுத்துகிறான். இதை நாம் சரியாக உணர்ந்து கொள்ளாத பட்சத்தில், அவனது தந்திரத்தில் சிக்கி, சபையோடு உள்ள ஐக்கியத்தில் இருந்து பிரிந்து போகிறோம்.
குடும்பத்தில் கிரியை செய்யும் இந்த பிசாசின் தந்திரத்தை குறித்து அறியாமல், கணவன்-மனைவி இடையே பிரிவினை ஏற்படுகிறது. சிலர் விவாகரத்து செய்து கொண்டு, பின் நாட்களில் அதை எண்ணி வருந்துகிறார்கள். குடும்பத்தில் உள்ள பிள்ளைகள், இந்த பிரிவினை ஆவியை அறியாமல் சிறிய காரியங்களுக்கும் பெற்றோருக்கு எதிர்த்து பேசி, வீட்டை விட்டு ஓடுகிறார்கள். பொல்லாதவர்களின் கைகளில் சிக்கி வாழ்க்கை சீரழியும் போது, தனது தவறுகளை உணரும் பிள்ளைகளால், பெற்றோரிடம் திரும்ப வந்து சேர முடிவதில்லை.
கேட்டது:
இந்த பிரிவினை ஆவிகளை குறித்து கூறும் போது, சமீபத்தில் ஒரு போதகர் கூறிய ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இதை கேட்ட போது, பல குடும்பங்களின் பிரிவிற்கு இது போன்ற அர்த்தமில்லாத காரியங்களை பயன்படுத்தும் பிசாசின் பிரிவினை ஆவிகளின் செயலை குறித்து அறிய முடிந்தது.
அந்த சகோதரன் கூறிய சம்பவத்தை இப்படி தான் துவங்கினார்… கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பம் சந்தோஷமாக வாழ்ந்து வந்தது. திருமணமாகி சில ஆண்டுகளாகி குழந்தைகள் எதுவும் இல்லாத நிலையிலும், கணவன்-மனைவி இடையே எந்த ஒரு சண்டையோ, வாக்குவாதமோ இல்லாமல் சந்தோஷமாக இருந்தது.
இவர்களை குறித்து அப்பகுதியில் வசித்து வந்த ஒரு கிளவிக்கு தெரியவந்தது. அந்த கிளவிக்கும், அவரது பிள்ளைகளுக்கும் எப்போதும் வாக்குவாதமும், சண்டையுமாக கழிந்தது. இந்நிலையில் இந்த சண்டையில்லாத குடும்பத்தை குறித்து கேள்விப்பட்ட கிளவிக்கு, அதை சகிக்க முடியவில்லை.
எனவே கொஞ்சம் கொஞ்சமாக, அந்த குடும்பத்துடன் பழக ஆரம்பித்த கிழவி, சில நாட்களுக்குள் அவர்களுடன் நெருங்கிய நட்பை சம்பாதித்துவிட்டாள். ஒரு நாள், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பேச சென்ற கிளவி, உன் கணவனின் நடத்தையில் ஏதோ வித்தியாசம் தெரியுதே? என்றார். அப்படி என்ன மாற்றம் என்று அந்த பெண் கேட்டதற்கு, உனது கணவன் சற்று கூனிப் போய் நடக்கிறதை கவனித்தாயா? கடந்த ஜென்மத்தில் அவன், உப்புத் தூக்கி பிழைத்தவனாக இருந்திருப்பான். அது தான் அப்படி நடக்கிறான், என்றாள் கிழவி.
அதை நம்ப மறுத்த அந்த பெண்ணிடம், நீ வேண்டுமானால், இன்று இரவில் அவன் தூங்கிய பிறகு, அவனது முதுகை நக்கி பார். கடந்த ஜென்மத்தில் உப்புத் தூக்கி பிழைத்தவனாக இருந்தால், அவனது முதுகில் உப்பு கரிக்கும் என்றாள் கிழவி.
வீட்டில் இருந்த அந்த பெண்ணின் மனதை குழப்பிய கிளவி, மாலையில் பணி முடிந்து வீடு திரும்பிய கணவனை வழியில் தனியாக சந்தித்தாள். அப்போது, உன் மனைவியின் நடத்தையில் ஏதோ மாற்றம் தெரியுதே? என்றாள். அதற்கு அந்த மனிதன், என்ன மாற்றம்? என்றான். உன் மனைவி பேசும் போது அவ்வப்போது நாக்கை வெளியே நீட்டுகிறாள், இடுப்பை கூடுதலாக ஆட்டி நடக்கிறாள். தலையையும் அவ்வப்போது ஆட்டுகிறாள்.
இதையெல்லாம் வைத்து பார்த்தால், அவள் கடந்த ஜென்மத்தில் ஒரு நாயாக இருந்திருக்க வாய்ப்புள்ளது, என்றாள் கிழவி. அந்த மனிதன், அப்படியெல்லாம் தெரிவில்லையே? என்று கூற, அப்படியென்றால் இன்று இரவில் நீ தூங்காமல் இருந்து, உனது மனைவியின் நடவடிக்கைகளை கவனி. போன ஜென்மத்தில் அவள் நாயாக இருந்திருந்தால், நிச்சயம் உன்னை நக்குவாள் என்றாள் கிழவி. கிழவியின் பேச்சில் குழப்பமடைந்த அந்த மனிதன், தனது வீட்டிற்கு சென்றான்.
தனது மனைவியின் நடவடிக்கைகளை கவனித்த அவனுக்கு, எந்த மாற்றமும் தெரியவில்லை. அதேபோல தனது கணவனின் நடக்கையை கவனித்த அவளுக்கும் எதுவும் புதிதாக தெரியவில்லை. இருந்தாலும், கிழவி கூறியது போல, இன்று இரவு சோதித்து பார்ப்போம் என்று இருவரும் மனதில் முடிவு செய்து கொண்டனர்.
உண்மையை அறியும் ஆர்வத்தில் இருவரும் வழக்கத்தை விட முன்னதாகவே, சாப்பிட்டு உறங்க சென்றனர். இருவரிடையே அதிகம் பேச்சு எதுவும் இல்லை. சிறிது நேரத்தில் கணவன் உறங்கியது போல நடித்தார். அதை கவனித்த மனைவி, ஆர்வ மிகுதியில் சட்டையில்லாமல் படுத்திருந்த கணவனின் முதுகை நக்கி பார்த்தாள். காலையில் இருந்து மாலை வரை வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்துவிட்டு வந்த கணவனின் முதுகு உப்பு கரித்தது.
ஆனால் கணவனுக்கோ, கிழவி கூறியது போலவே, தனது மனைவி நாய் போல முதுகை நக்குகிறாள் என்று ஆச்சரியம் ஏற்பட்டது. இருவரும் எழுந்து லைட்டை போட்டு, மாறிமாறி கேள்வி கேட்டனர். கடந்த ஜென்மத்தை குறித்து ஏன் கேட்கிறாய் என்று வாக்குவாதம் எழுந்து சண்டையானது. அன்று இரவு மட்டுமல்ல, பல இரவுகள் சண்டையிலும், சச்சரவிலும் தொடர்ந்து, அந்த குடும்பத்தின் நிம்மதியே பறிப்போனது.
சிந்தித்தது:
மேற்கண்ட சம்பவத்தில் வந்த கிழவியைப் போல, இன்று பலருக்குள் இந்த பிரிவினையின் ஆவி கிரியை செய்கிறது. சபையில், வீட்டில், அலுவலகத்தில் என்று எல்லா இடங்களிலும் இந்த ஆவியினால் வழிநடத்தப்படும் ஆட்கள் உள்ளார்கள். எனவே இது போன்ற ஆட்களின் பேச்சை கேட்கும் போது, அதை பொறுமையாக முதலில் நிதானிக்க வேண்டும்.
இந்த ஆவியை எதிர்க்க உள்ள ஒரே ஆயுதம், தேவ அன்பு மட்டுமே. நாம் சார்ந்திருக்கும் யாரை குறித்து, நம்மிடம் அவதூறாக கூறப்படுகிறதோ, அவர் மீது முன்பை விட அதிகமான தேவ அன்பை காட்டினால் போதும், அந்த பிரிவினை ஆவி தோற்று போகும். பிரிவினை கொண்டு வர விரும்பும் நபர்களின் மீதும் தேவ அன்பை காட்டுங்கள். அப்போது தங்களின் செயல்களால் கூனி குறுகி, இனி அப்படி செய்யமாட்டார்கள். அப்ப இனி நமக்குள்ளே பிரிவினை ஆவிக்கு இடமில்லை, அப்படி தானே?
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.