0 1 min 2 mths

அரக்கோணத்தை சேர்ந்த ஒரு சகோதரி கூறுகிறார்…

இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட பெற்றோருக்கு மகளாக பிறந்த எனக்கு, மருத்துவம் படிக்க தேவன் உதவி செய்தார். மேலும் நம் நாட்டிலேயே சிறந்த பெயரை பெற்ற ஒரு பெரிய மருத்துவமனையில் எனக்கு வேலை கிடைக்க தேவன் இரக்கம் பாராட்டினார்.

எனக்கு அளிக்கப்பட்ட பணிகளில் அதிக விருப்பத்தோடு செய்து வந்த நிலையில், எங்கள் மருத்துவமனையில் பணியாற்றி வந்த வெளி மாநில பணியாளர்கள், தங்கள் ஊர் பண்டிகை ஒன்றை கொண்டாடுவதற்கான அழைப்பை விடுத்து இருந்தனர். ஆனால் இரட்சிக்கப்பட்ட நான், வேறு மத முறைப்படி கொண்டாடப்படும் அந்த பண்டிகைக்கு போக விரும்பவில்லை.

இருப்பினும் நான் இருந்த சூழ்நிலையில், அதை தவிர்க்க முடியவில்லை. விருப்பமில்லாத மனதோடு மற்ற டாக்டர்களுடன் சென்றேன். சில மணி நேரங்களுக்கு பிறகு மருத்துவமனைக்கு திரும்பிய எங்களுக்கு, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. எங்கள் மருத்துவமனையில் பணியாற்றும் பலருக்கும், பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது.

இது குறித்து விசாரித்த போது, எங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த ஒரு நோயாளியின் உறவினர்கள் மூலம் செய்யப்பட்ட தாக்குதல் என்று தெரியவந்தது.
எங்கள் மருத்துவமனையில் உடல்நலக் குறைவோடு சேர்க்கப்பட்ட ஒருவருக்கு, சரியான முறையில் சிகிச்சை அளிக்க தவறியதால், அவர் இறந்துவிட்டார்.

இதில் ஆத்திரமடைந்த அந்த நோயாளியின் உறவினர், மருத்துவமனைக்கு வந்து இது குறித்து விசாரித்தனர். அதற்கு சரியான முறையில் பதில் அளிக்காமல் விடவே, அந்த நோயாளிக்கு மருத்துவம் அளித்த டாக்டர் முதல் கண்ணில் கண்ட மற்ற எல்லா மருத்துவமனை ஊழியர்களையும் ஒரு ரெளடி கும்பல் தாக்கி சென்றுள்ளது.

ஆனால் அந்த ரெளடி கும்பல் மருத்துவமனைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, நான் பணியாற்றி வந்த குறிப்பிட்ட பிரிவினர் எல்லாரும் பண்டிகை அழைப்பை ஏற்று சென்று இருந்தோம். அந்த தாக்குதலுக்கு பிறகு நாங்கள் மருத்துவமனைக்கு வந்ததால், எங்களுக்கு எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை. இந்த வகையில் தேவன், என்னை மட்டுமின்றி என்னோடு பணியாற்றியவர்களையும் காப்பாற்றினார்.

இது மட்டுமின்றி, நான் கர்ப்பமாக இருந்த நேரத்தில் மேலதிகாரிகளால் என் மீது அதிக வேலை பளு அமர்த்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, ஒரு நாள் தொடர்ந்து ஓய்வின்றி 24 மணிநேரம் பணியாற்ற வேண்டிய சூழ்நிலையில் ஏற்பட்டது.

எனக்கு உள்ள உடல் பெலவீனத்தை எடுத்து கூறியும் ஒத்துக் கொள்ள மறுத்த மேலதிகாரிகள், அந்த பணியை செய்யுமாறு கூறினர். எனது பொறுப்பில் 90 நோயாளிகள் இருந்தனர். காலையில் இருந்து மாலை வரை பணியாற்றிய என்னால் மேற்கொண்டு செயல்பட முடியவில்லை. இதனால் இரவு நர்சுகளிடம் பணியை ஒப்படைத்து விட்டு, என் அறையில் படுத்து தூங்கிவிட்டேன்.

இரவில் களைப்பில் தூங்கிய எனக்கு, ஏறக்குறைய 120 போன் அழைப்புகள் வந்துள்ளதை கூட கேட்க முடியவில்லை. அதன்பிறகு ஒரு அழைப்பை எடுத்து பேசிய போது, ஒரு பெட்டில் எலும்பு முறிவில் இருந்த நோயாளிக்கு அதிக வலி இருப்பதாக, அவரை பராமரிக்கும் நர்சு கூறினார்.

அவருக்கு வலி நிவாரணி மருந்தை அளிக்குமாறு கூறி, 10 நிமிடங்களுக்கு பிறகு வலி குறையாத பட்சத்தில் மீண்டும் அழைக்குமாறு கூறினேன். ஆனால் அவரது நிலை மேலும் பரிதாபமாக போனதால், அவரை பராமரித்து வந்த உறவினர்கள், நான் இருக்கும் அறைக்கு வந்தனர்.

அங்கே நான் தூங்குவதை கண்டு கோபமடைந்த அவர்கள், என்னை தாக்குவதற்கு வந்தாலும், ஒரு பெண் என்பதை மதித்து, ஒரு கிறிஸ்துவ பெண்ணான நீயே வேலை நேரத்தில் தூங்கலாமா? என்று கேட்டு விட்டு சென்றனர். அந்த வார்த்தை என்னை மிகவும் துக்கப்படுத்தியது.

எனக்கு இருந்த உடல் களைப்பில் நான் தூங்கியது உண்மையே. ஆனால் என்னால் தேவனுடைய நாமத்திற்கு ஒரு அவப்பெயர் வந்துவிட்டதே என்று எண்ணி ஜெபிக்க துவங்கினேன். ஆண்டவரே அந்த நோயாளிக்கு பூரண விடுதலை அளித்து இரட்சியும். இல்லாவிட்டால், உமது நாமத்திற்கு அவப்பெயர் வந்துவிடுமே என்று ஜெபித்தேன்.

என்னோடு பணியாற்றிய மற்ற எல்லாருக்கும் இது தெரிய வந்ததால், விரைவில் நான் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று நினைத்தேன். இருப்பினும் கர்த்தர் சகலத்தையும் பார்த்துக் கொள்வார் என்று ஜெபித்து கொண்டேன். அடுத்த நாள் ஜெபித்துவிட்டு பணிக்கு சென்றேன். இது குறித்து பேசுவதற்கு மேலதிகாரியிடம் சென்றேன்.

அப்போது எனக்குள் தேவன் தைரியத்தை அளித்தார். மேலதிகாரியிடம் நடந்த காரியத்தை தைரியமாக கூறி, ஒரு டாக்டரால் 90 நோயாளிகளை தொடர்ந்து 24 மணிநேரம் பார்த்து கொள்ள முடியாது. நாங்களும் மனிதர்கள் தான் என்பதை நீங்கள் நினைக்க வேண்டும் என்று கூறினேன்.

எனது பேச்சை பொறுமையாக கேட்ட மேலதிகாரி, தனது தவறை ஒத்துக் கொண்டார். மேலும் இனி அது போன்ற பணி நியமனங்கள் அளிக்கப்படாது என்று உறுதி அளித்தத்தோடு, எனக்கு பதவி உயர்வும் வழங்கினார்.

தன்னை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாக இருக்கும் நம் தேவன், எனக்கு ஏற்பட்ட எல்லா பிரச்சனைகளில் இருந்தும் என்னை விடுவித்து இரட்சித்தார். எந்த இடத்திலும் வெட்கப்பட்டு போகாதபடி காத்து கொண்டார். எல்லா துதியும், கனமும், மகிமையும் தேவனுக்கே செலுத்துகிறேன்.

இந்த சாட்சியை படித்து கொண்டிருக்கும் அன்பான சகோதர, சகோதரியே, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கஷ்டமான பாதையில் செல்லும் போது, மனிதர்களின் உதவியை நாடி செல்லாமல், தேவனை மட்டுமே நோக்கி பாருங்கள். அப்போது அவர் தகுந்த நேரத்தில் உதவும் சகாயராக வந்து உங்களுக்கு துணை நிற்பார். நீங்கள் எண்ண முடியாத அற்புதங்களை உங்களுக்காக செய்வார்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *