0 1 min 3 mths

ஒவ்வொருவருக்கும் தேவன் ஒவ்வொரு திறமையை அளித்து இருக்கிறார். ஆனால் அது பயன்படுத்தும் முறையில் தான் முக்கியத்துவம் பெறுகிறது. உலக மக்கள் தங்கள் திறமைகளை பயன்படுத்தி, சமூகத்தில் நல்ல நிலைக்கு வருகிறார்கள்.

இரட்சிக்கப்பட்ட மக்கள், தேவ ஊழியங்களில் புகழ்பெற்றவர்களாக மாறுகிறார்கள். ஆனால் எல்லாரும் தங்கள் திறமைகளை சரியான முறையில் பயன்படுத்துகிறார்கள் என்று உறுதியாக கூற முடியாது.

கேட்டது:

சமீபத்தில் ஒரு சகோதரன் உடன் போனில் பேசிக் கொண்டிருந்த போது, தேவன் அளிக்கும் தாலந்துகள் குறித்து பேசினேன். அப்போது அவர், எனக்கு என்ன தாலந்து இருக்குன்னே தெரியலை பிரதர் என்று அப்பாவித்தனமாக கூறினார்.

அவரைப் போல இன்று பல கிறிஸ்தவர்களுக்கும் தங்களுக்கு தேவன் அளித்துள்ள தாலந்து என்ன என்பது தெரியாது. ஆனால் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத பல ஊழியங்களிலும், பணிகளிலும் ஈடுபட்டு வருவார்கள்.

இல்லாவிட்டால், குறிப்பிட்ட ஒருவரை முன்மாதிரியாக வைத்து கொண்டு அவரை போல மாற வேண்டும் என்று எண்ணி பிரயாசப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் தாலந்து வேறுபடும் பட்சத்தில், அதில் தோல்வி மட்டுமே அடைகிறார்கள்.

தேவன் தந்த தாலந்தை கண்டுபிடிப்பது எப்படி?

தேவனால் நமக்கு அளிக்கப்பட்டுள்ள தாலந்தை எளிமையான சில வழிமுறைகளால் கண்டுபிடிக்க முடியும். நமக்கு இருக்கும் தாலந்தை பயன்படுத்தும் போது, நமக்குள் பெரிய சந்தோஷமும் ஆறுதலும் உண்டாகும். அது தொடர்பாக ஆசையும் உண்டாகும்.

எடுத்துக்காட்டாக, பிறருக்காக அழுது ஜெபிக்கும் தாலந்து நமக்கு அளிக்கப்பட்டிருந்தால், அதற்கான தகுந்த சந்தர்ப்பம் கிடைத்தால், மனதில் அளவு கடந்த சந்தோஷம் உண்டாகும். அதற்கு பல தடைகள் வந்தாலும், அதன் மீதான ஆர்வம் குறையாது. வேறு யாராவது அழுது ஜெபிப்பதை குறித்து பேசினாலும், அதை கேட்கவும் அப்படி செய்யவும் மனதில் அதிக ஆர்வம் உண்டாகும்.

இது போல நமக்கு அளிக்கப்பட்ட தாலந்தை அறிந்து கொண்டால், அதை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தாமல், பிறகு பார்த்து கொள்ளலாம் என்று ஒதுக்க கூடாது. உலக காரியங்களுக்காக மட்டும் பயன்படுத்தி, காசு சம்பாதிக்கவும் முயற்சி செய்யக் கூடாது.

எடுத்துக்காட்டாக, சிலர் தங்களுக்கு கிடைத்துள்ள பிறரை எளிதாக புரிந்து கொள்ளும் தாலந்தை தொழிலாகவே பயன்படுத்துவார்கள். தாங்கள் வேலை செய்யும் இடத்தில், தனது வளர்ச்சிக்காக கூட சிலர் பயன்படுத்துவார்கள். இதனால் தேவ நாமம் எந்த விதத்திலும் மகிமைப்படாது. மேலும் அதனால் ஆவிக்குரிய ஆதாயம் உண்டாகாது.

இயேசு கூறிய ஒரு கதையில் தாலந்துகளை குறித்து குறிப்பிடுகிறார். அதில் 5 மற்றும் 2 தாலந்துகளை பெற்றவர்கள் அதை பயன்படுத்தி, எஜமானிடம் இரட்டிப்பாக திரும்ப அளித்து வெகுமதிகளைப் பெறுகிறார்கள். ஆனால் ஒரு தாலந்து பெற்றவர், அதை பத்திரமாக திரும்ப அளித்தும், தண்டனை பெறுகிறார்.

அதை போல தேவன் தரும் தாலந்துகளை நாம் பயன்படுத்தி, அதில் இருந்து கிடைக்கும் பலன்களை தேவனுக்கு திரும்ப செலுத்த கடமைப்பட்டு இருக்கிறோம். அப்படி இல்லாத பட்சத்தில், தேவ சமூகத்தில் தண்டனை தான் கிடைக்கும்.

மேலும் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒரு தாலந்தை கொண்டு, அதற்கு ஒத்து போகும் வேறு பல தாலந்துகளையும் சம்பாதித்து கொள்ள வேண்டும். அதை தான் 5 மற்றும் 2 தாலந்துகளை பெற்றவர்கள் செய்கிறார்கள். ஒரே தாலந்தில் திருப்திப்பட்டு கொள்ளவும் கூடாது.

எனக்கு இந்த குறிப்பிட்ட தாலந்து இருக்கிறது என்று பெருமைப் பாராட்டவும் கூடாது. ஏனெனில் தெய்வீகமான காரியங்களுக்கு, பெருமை தடையாக நிற்கும், நம் தேவனும் பெருமை பிடிக்காது.

சிலருக்கு தாலந்து இருந்தாலும் தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு புதிய ஆத்துமாக்களுக்கு சிறப்பாக சுவிஷேசம் கூறும் தாலந்து இருக்கும். ஆனால் அதை தேவைப்படும் இடத்தில் பயன்படுத்த தயங்குவார்கள்.

என்னை விட மற்றவர்கள் அல்லது தேவ ஊழியர்கள் தான் சிறப்பாக சுவிஷேசம் கூறுவார்கள். நாம் அடங்கி இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் எதற்கு இதில் தேவையில்லாமல் நுழைய வேண்டும் என்று யோசிக்க கூடாது.

இப்படி தேவன் நமக்கு தந்த தாலந்துகளை முதலில் கண்டுபிடிப்போம். அந்த தாலந்தை பயன்படுத்தி, பலரையும் தேவனுக்குள் திருப்புவோம். தேவ ஆலோசனையுடன் தகுந்த நேரத்தில் அவரது நாமத்தின் மகிமைக்காக பயன்படுத்துவோம். இதன்மூலம் தேவனிடம் பரலோகத்தில் வெகுமதிகளைப் பெறுவோம்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *