0 1 min 4 weeks

மலையில் ஆபிரகாமின் பலி:

விசுவாசிகளின் பிதாவாகிய ஆபிரகாமின் வாழ்க்கையில், நீண்ட காத்திருப்பிற்கு பிறகு கிடைத்த மகனை பலி செலுத்தும் சந்தர்ப்பத்தில் ஒரு மலையை காண முடிகிறது. ஏற்கனவே இது குறித்து வேதத்தில் கழுதைகள் என்ற வேதப்பாடத்தில் சில காரியங்களை படித்தோம். இந்நிலையில் ஆபிரகாமின் வாழ்க்கையில் மலையோடு ஏற்பட்ட தொடர்பை குறித்து காண்போம்.

தேவன் ஆபிரகாமிற்கு, பலி செலுத்த கட்டளையை அளிப்பதை ஆதியாகமம்:22.2-ல் காண்கிறோம். அங்கே மலையின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அது மோரியா தேசத்தில் உள்ளதாக காண முடிகிறது. அதிலும் மோரியா தேசத்தில் ஏதாவது ஒரு மலையில் அல்ல, நான் குறிக்கும் மலை ஒன்றில் பலி செலுத்த வேண்டும் என்று ஆபிரகாமிற்கு தேவன் கட்டளையிடுகிறார்.

எனவே இந்த மலையை குறித்து, ஆபிரகாமிற்கு ஒரு தெளிவான தரிசனத்தை ஆபிரகாம் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. மேலும் தேவ கட்டளையை பெற்றது குறித்து தனது மனைவி சாராளிடமோ, வேலைக்காரனிடமோ, நண்பர்களிடமோ தெரிவித்ததாக வேதத்தில் குறிப்பிடவில்லை.

இதில் இருந்து நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவனோடு உள்ள ஒரு நெருங்கிய தனிப்பட்ட உறவு இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். அப்படி இருக்கும்பட்சத்தில் நாம் செல்ல வேண்டிய கஷ்டமான, சோதனை மிகுந்த, இக்கட்டான பாதைகளையும் தேவன் நமக்கு காட்டுவார்.

அப்படி நாம் தேவனிடம் இருந்து பெறும் சில ரகசியமான காரியங்களை, எல்லோரிடமும் அறிவிக்க கூடாது. அப்படி அறிவித்தால், சில நேரங்களில் நாம் தேவனுக்காக செய்ய நினைக்கும் காரியங்களை செய்ய முடியாமல் தடைப்பட வாய்ப்புள்ளது.

இங்கே ஆபிரகாம், தேவனால் வெளிப்படுத்தப்பட்ட காரியத்தை சாராளுக்கு தெரிவித்திருந்தால், நிச்சயம் அவள் அதற்கு சம்மதித்து இருக்கமாட்டாள். தனது பிள்ளையை சாகடிக்க நினைக்கும் ஆபிரகாமை தனது பணியாளர்கள் மூலமாவது தடுத்திருப்பாள்.

இல்லாவிட்டால் அழுது கூக்குரலிட்டு, சென்டிமென்ட் பேச்சுகளை பேசி எப்படியாவது ஈசாக்கை பலிக் கொடுக்கும் ஆபிரகாமின் மனதை மாற்றியிருப்பாள். இதை தெளிவாக அறிந்த ஆபிரகாம், அதை யாருக்கும் தெரிவிக்கவில்லை.

இவ்வளவு ஏன், பலி செலுத்தும்படி தேவனால் கேட்கப்பட்ட ஈசாக்கிற்கு கூட கடைசி நிமிஷம் வரை தெரிவிக்கவில்லை. அந்த அளவிற்கு தேவனுக்கும் – ஆபிரகாமிற்கும் இடையிலான நெருக்கம் இருந்திருக்கிறது.

தேவனின் திட்டத்தை 100 சதவீதம் நிறைவேற்ற தன்னையே ஒப்புக் கொடுக்கும் ஆபிரகாமை இங்கே காணலாம். நம் வாழ்க்கையிலும் இந்த அனுபவம் இருந்தால் மட்டுமே, தேவ சித்தத்தை முழுமையாக செயல்படுத்த முடியும்.

அதேபோல ஆபிரகாமிற்கு கட்டளை கிடைத்தவுடன் அதிகாலையில் எழுந்து, பயணத்தை துவங்குவதை (ஆதியாகமம்:22.3) காண முடிகிறது. இதிலிருந்து தேவ சித்தம் செய்ய ஆபிரகாம் தாமதம் செய்யவில்லை என அறியலாம்.

அதற்கு தாமதம் செய்திருந்தால் கூட, தனது மனம் மாறவும், அதையே யோசித்து யாரிடமாவது உளறிவிடவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம். நம் வாழ்க்கையிலும் தேவனுக்காக நாம் எடுத்த தீர்மானங்கள், பிரதிஷ்டைகள், வேண்டுதல்கள் ஆகியவற்றை எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் செய்துவிடுவது நல்லது.

ஏனெனில் காலம் கடந்துவிட்டால், நமக்கு துவக்கத்தில் இருந்த விருப்பம், வைராக்கியமும் குறைய வாய்ப்புள்ளது. மூன்று நாட்கள் பயணிக்கும் ஆபிரகாம், தேவன் காட்டிய இடத்தை தூரத்தில் காண்கிறார்.

வயதான காலத்தில் கிடைத்த ஒரே மகனையே, பலி செலுத்துமாறு தேவன் கேட்டுவிட்டார். இதனால் ஏனோ தானோ என்ற அரை மனதோடு, பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு மலையில் வைத்து, பலியை தேவனுக்கு செலுத்த ஆபிரகாம் நினைக்கவில்லை.

தேவன் குறித்த இடத்தை அடைய 3 நாட்கள் ஆனபோதும், அதிலிருந்து பின்வாங்கவில்லை. இந்த 3 நாட்களில் எவ்வளவோ காரியங்களை, தந்தையும் மகனும் பேசி இருக்க கூடும். 2 வேலைக்காரரோடு ஆபிரகாம் பேசி இருக்கக் கூடும்.

ஆனாலும் தான் வந்த பணியில் சோர்வையோ, பின்வாங்குவதையோ செய்யவில்லை. இங்கே ஆபிரகாமின் தேவ சித்தம் செய்வதற்கான முழு மனதை காண முடிகிறது. நமக்குள்ளும் இந்த முழு மனது தேவை.

எல்லாரும் சபைக்கு போகிறார்கள் நானும் போகிறேன் என்று வாழ்வதற்காக தேவன் நம்மை அழைக்கவில்லை. நாம் தேவனின் அழைப்பை பெற்றதற்கு பின்னால் ஒரு நோக்கம் இருக்கிறது.

அதை ஆபிரகாமை போல, ஒரு நெருங்கிய தேவ உறவை கொண்டு அறியுங்கள். அந்த பணியை முழுமையாக செய்து முடிக்க ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதில் இருந்து பின்மாறி போக ஆலோசனை தரும் பலரும், பல சந்தர்ப்பங்களும் வரலாம்.

அதற்காக தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் பணியை அரைகுறையாக செய்து முடிப்பதில் தேவனுக்கு பிரியம் ஏற்படாது. தடைகளை ஞானமாக ஜெயித்து, முழுமையான தேவ சித்தத்தை செய்வதையே தேவன் நம்மிடம் விரும்புகிறார்.

எனவே நமது கிறிஸ்துவ வாழ்க்கையில் தேவனோடு உள்ள ஒரு நெருங்கிய உறவை பாதுகாத்து கொள்வோம். அதன்மூலம் தேவன் நமக்கு வெளிப்படுத்தும் காரியங்களை மனதில் வைத்து இருந்து, அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் காரியங்களை முழு மனதோடு, செய்ய வேண்டிய முறையிலேயே செய்து முடிப்போம்.

அதற்கு தடைகளாக வரக்கூடிய ஆலோசனைகளையும், ஆட்களையும் தவிர்ப்போம். அப்போது ஆபிரகாமை போல, தேவன் கூறிய இந்த செயலால் எனக்கு பேரிழப்பு ஏற்படும் என்று நினைக்கும் காரியங்கள் கூட சந்தோஷமாகவும் ஆசீர்வாதமாகவும் தேவன் மாற்றி தருவார்.

(பாகம் – 3 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *