0 1 min 3 weeks

மலையில் லோத்தின் குடும்பம்:

ஆபிரகாமின் உறவுக்காரனாக வேதத்தில் நாம் காணும் லோத்தின் வாழ்க்கையிலும் ஒரு மலை குறுக்கிடுவதை காண முடிகிறது. ஆபிரகாமிடம் இருந்து பிரிந்து செல்லும் லோத்தின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனையை குறித்து, நாம் சந்திக்கும் சோதனைகள் – பாகம் 3 என்ற வேதப்பாடத்தில் படித்தோம்.

அந்த சோதனையில் தோல்வியை தழுவிய லோத்தின் வாழ்க்கையில், பல ஆவிக்குரிய குறைகள் இருந்தன. அதில் ஒன்று லோத்தின் குடும்பத்தில் இருந்த பிடிவாதம்.

சோதோம் கொமோராவை தேவன் அழிக்க வந்துள்ளார் என்று அறிந்தும், அவர்களுக்கு அந்த சாபத்திற்குரிய தேசத்தை விட்டு வெளியேற மனம் வரவில்லை. தேவ புருஷர் கட்டாயப்படுத்தி அவர்களை ஊருக்கு வெளியே கொண்டு போய்விட்டதாக (ஆதியாகமம்:19.16) காண்கிறோம்.

அதன்பிறகும் தேவ புருஷர் கூறும் காரியங்களை லோத் ஏற்க மறுக்கிறார். ஆதியாகமம்:19.17-ல் லோத்தின் குடும்பத்தினரை மலைக்கு ஓடிப் போகும்படி கட்டளை அளிக்கிறார்கள். அதற்கு அடுத்தடுத்த வசனங்களை வாசித்தால் (ஆதியாகமம்:19.18-20), லோத் அதை ஏற்க மறுத்து, தான் விரும்பும் பக்கத்தில் உள்ள சிறிய ஊருக்கு செல்ல விரும்புகிறார்.

தேவ புருஷர்கள் வேறு வழியில்லாமல், அவனது வேண்டுதலுக்கு ஒப்புக் கொள்கிறார்கள். அப்படி இருந்தும் லோத்தின் மனைவி கீழ்படியாமை காட்டி உப்புத் தூணாக மாறினாள் (ஆதியாகமம்:19.26).

தேவ புருஷரின் கட்டளைக்கு சாக்குப்போக்கு கூறி, தனது விருப்பத்திற்கு ஏற்ப பிடிவாதமாக கேட்டு வாங்கிய ஊராகிய சோவார் என்பதற்கு சிறியது என்று பொருள். அதன் பொருளுக்கு ஏற்ப சிறிய ஊராகவே இருந்த அதில், லோத் குடியிருக்க பயந்தான் என்று ஆதியாகமம்:19.30-ல் காண்கிறோம். இதனால் கடைசியில், தேவ புருஷர்கள் கூறியது போலவே, மலைக்கு லோத்து குடியிருப்பை மாற்றுகிறார்.

இதிலிருந்து தேவ ஆலோசனைக்கு கீழ்படியாமை காட்டி, பிடிவாதமாக வாங்கும் காரியங்களினால் பிற்காலத்தில் நமக்கு தொல்லைகள் ஏற்படும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

தாங்கள் கருத்தாக (பிடிவாதமாக) ஒரு காரியத்திற்காக உபவாசம் பண்ணி, கண்ணீர் சிந்தி ஜெபித்து தேவனிடம் இருந்து பெற்று கொண்டதாக, சில கிறிஸ்துவ நண்பர்கள் பெருமையாக கூறுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் அவர்களில் பலரும் பிற்காலத்தில் தேவையில்லாத கஷ்டங்களை அடைந்ததையும் பார்த்து இருக்கிறேன்.

நாம் கருத்தாக ஜெபிக்க வேண்டியது அவசியம் தான். அதற்கு உபவாசமும், கண்ணீரும் தேவை தான். ஆனால் அதற்காக நம் மனதில் ஒரு காரியத்தை நினைத்து கொண்டு, அது அப்படியே நடக்க வேண்டும் என்று தேவனிடம் பிடிவாதமாக ஜெபிப்பது தவறு.

ஏனெனில் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு காரியத்திற்கும் பின்னால், தேவனுக்கு ஒரு சித்தம் இருக்கும். இதனால் தான் சங்கீதம்:37.5-ல் “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்” என்று காண்கிறோம்.

நம் வாழ்க்கையில் குறிப்பிட்ட காரியத்தை ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அதுவே என் இலட்சியம், அதை அடைந்தே தீருவேன் என்று பிடிவாதம் காட்டுவது, சுயசித்தம் செய்ய தூண்டுவதாக அமையும்.

இயேசு கூட, தனது கல்வாரி பாடுகளை நினைத்து, அதை தன்னை விட்டு நீக்குமாறு ஜெபித்தார். ஆனால் கடைசியில் தனது சித்தத்தை தவிர்த்து, தேவ சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து ஜெபத்தை முடித்தார். இயேசுவும் பிடிவாதமாக ஜெபித்திருந்தால், நமக்கு இரட்சிப்பிற்கு வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும் அல்லவா?

தேவ புருஷர்கள் கூறிய வார்த்தைக்கு கீழ்படியாமல் சொந்த இஷ்டத்தை செய்து, தாமதமாக மலையில் உள்ள ஒரு குகைக்கு குடியேறிய லோத்தின் குடும்பம், என்றென்றும் ஒரு அருவருப்பான நிலைக்கு தள்ளப்பட்டதை காண முடிகிறது.

லோத்தின் மலை குடியிருப்பின் மூலம் இரு அந்நிய ஜாதிகள் பிறக்க செய்தது தான் அவர்களின் பிடிவாதத்தினால் கிடைத்த பலன். ஆதியாகமம்:19.37,38 வசனங்களில் மோவாபியர், அம்மோனியர் ஆகியோருக்கு தகப்பனாக, லோத்து மாறியதை காணலாம்.

மேற்கூறிய இவ்விரு ஜாதிகளும், பிற்காலத்தில் இஸ்ரவேல் மக்களுக்கு பெரிய தொல்லையாக இருந்ததாக வேதம் குறிப்பிடுகிறது. இதேபோல இன்று பலரும் அடம்பிடித்து தேவனிடம் பெறும் பல காரியங்களுக்காக பிற்காலத்தில் பெரும் நஷ்டத்தையும் துக்கத்தையும் சந்திக்கிறார்கள்.

தேவன் ஒரு காரியத்தை எச்சரிப்பாக நமக்கு அளிக்கும் போது, அதற்கு முட்டுக்கட்டை போல நம் அறிவை பயன்படுத்த கூடாது. ஏனெனில் நம்மை விட நம் எதிர்காலத்தை குறித்து தேவன் நன்றாக அறிந்தவர். மேலும் நம் எதிர்காலத்தை நன்மையாக மாற்றவும் தேவன் வல்லமை உள்ளவர் என்பதை நாம் மறக்க கூடாது.

எனவே தேவன் இரக்கமாக அளிக்கும் எச்சரிக்கையின் சத்தத்தை கேட்டு, அதற்கு எதிராக பிடிவாதம் காட்டாமல் கீழ்படிந்து வாழ்ந்தால், லோத்தின் வாழ்க்கையில் வந்தது போன்ற தேவையில்லாத சமாதான கேடுகளும், சாபங்களும் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியும்.

மேலும் நமது பின்சந்ததிகள் தேவனுக்கும், தேவ பிள்ளைகளுக்கும் பெரும் தொல்லையாக இல்லாமல், அவர்களுக்கு ஆறுதலை அளிப்பவர்களாக இருப்பார்கள். அவர்களால் தேசமும் ஆசீர்வாதத்தை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

(பாகம் – 4 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *