0 1 min 2 mths

மலையில் மோசேயின் வாழ்க்கை:

மோசேயின் வாழ்க்கையில் எண்ணற்ற மலை அனுபவங்களை நாம் காண முடிகிறது. எகிப்தில் இருந்து உயிருக்கு பயந்து தப்பியோடும் மோசேயின் வாழ்க்கையில் ஒரு மலையில் வைத்து தான் திருப்பு முனை ஏற்படுகிறது. யாத்திராகமம்:3.1-ல் மோசேயின் முதல் தேவ சந்திப்பு ஓரேப் மலையில் நடைபெறுவதை காணலாம்.

மலையில் தான் கண்ட அதிசயத்தை உற்று பார்க்கும்படி நெருங்கி செல்லும் மோசேயிடம் பாதரட்சையை கழற்றுமாறு தேவன் கூறுகிறார். எனவே நாம் மலையாகிய ஜெபத்தில் தரித்திருக்கும் போது, தேவன் தன்னிடமாக அழைத்து நம்மோடு பேசுவதை காணலாம். அதே நேரத்தில் ஜெபத்தில் தேவன் நம்மோடு பேசுவதற்கு நமது பாவங்கள் தடையாக இருக்கின்றன என்பதை அறிய வேண்டும்.

மோசே தனது பாதரட்சையை அகற்றிய பிறகே, தான் யார் என்பதையும், தனது திட்டம் என்ன என்பதையும் மோசேயிடம் தேவன் தெரிவிக்கிறார். எனவே நமது பாவ நடவடிக்கைகளை தேவன் நமக்கு வெளிப்படுத்தும் போது, அவற்றை நம்மில் இருந்து அகற்றினால், அவரது திட்டத்தை நாம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

எகிப்தில் இருந்து பயந்து தப்பியோடி வந்த மோசேயை, அந்த தேசத்திற்கே திரும்ப அனுப்பி, துன்பத்தில் வாடும் தனது மக்களை விடுவிக்கும் பணியை தேவன் ஒப்படைக்கிறார். ஆனால் மோசே பல சாக்குப்போக்குகளை கூறி தப்ப முயற்சி செய்கிறார்.

ஆனால் மோசேயின் எல்லா சாக்குப்போக்குகளுக்கும் தேவன் பதிலை வைத்திருந்தார். இதனால் கடைசியாக, தேவ பணிக்கு தன்னை மோசே ஒப்புக் கொடுக்கிறார். மலையில் கண்ட ஒரு அதிசயமே மோசேயை, அங்கே ஏறி செல்ல வைத்தது.

அதுபோல ஜெபத்தில் இருக்கும் மகிமையை நாம் கண்டால் மட்டுமே, ஜெபிக்க நமக்கு மனம் வரும். இன்று பலருக்கும் தினமும் பல மணிநேரங்கள் ஜெபிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் தொடர்ந்து என்னத்தை ஜெபிப்பது என்ற கேள்வி எழுகிறது.
உண்மையில் தேவனுடைய மகிமையை நமது ஜெபத்தில் உணர்ந்தால், மணிநேரங்கள் கடந்து போவது தெரியாது. நாமே ஜெபத்தை நிறுத்த நினைத்தால் கூட முடியாது.

இதேபோல இஸ்ரவேல் மக்களுக்காக பரிந்து பேசும் போது, தேவனுடைய மகிமையை காண மோசே விருப்பம் தெரிவிக்கிறார் (யாத்திராகமம்:33.18-23). மோசேயின் இந்த ஆசையை நிறைவேற்ற, தேவனிடம் உள்ள இடத்தில் அமைந்த ஒரு கன்மலைக்கு வருமாறு கூறுகிறார். அதற்கு கீழ்படிந்த போது, தனது பின்பகுதியை தேவன் காண்பிக்கிறார்.

தேவ மகிமையை காண மோசேக்கு, அவரிடம் உள்ள கன்மலைக்கு செல்ல வேண்டியிருந்தது போல, நாமும் தேவ மகிமையை காண வேண்டுமானால், அவர் விரும்பும் வகையிலான ஜெபத்தை ஏறெடுக்க வேண்டியுள்ளது. நாம் ஏனோ தானோ என்று ஜெபத்தால், அவரது மகிமையை காண முடியாது.

மேலும் நாம் ஜெபத்தில் கேட்கும் காரியங்களை அளிக்க தேவன் எவ்வளவு வாஞ்சையுள்ளவராக இருக்கிறார் என்பதை இந்த கன்மலை சம்பவத்தின் மூலம் அறிய முடிகிறது. எனவே உண்மையாய் நாம் தேவனை நோக்கி கூப்பிடும் போது அவர் நமக்கு சமீபமாக வருகிறார் (சங்கீதம்:145.18).

மோசேயின் வாழ்க்கையில் கிடைத்த முதல் மலை அனுபவத்திற்கு பிறகு, இஸ்ரவேல் மக்களை வழிநடத்தி சென்ற போது, பல முறை மலைக்கு வரும்படி தேவன் அழைக்கும் போதெல்லாம் எந்த மாற்றுக் கருத்தையும் மோசே கூறவில்லை.

40 நாட்கள் இரவு பகலும் எந்த உணவும், தண்ணீரும் இல்லாமல், இரு முறை மலையில் தனி மனிதனாக தேவனோடு, மோசே இருந்திருக்கிறார். மலையில் மோசேக்கு கிடைத்த தேவ மகிமையினால் இஸ்ரவேல் மக்களால் அவரது முகத்தை காண முடியவில்லை. முக்காடு போட்டு கொண்டு தான், மக்களிடம் பேசியுள்ளார்.

நமது ஜெபத்தில் அந்த அனுபவம் கிடைக்கிறதா? அப்படி நமது முகங்கள் மகிமையாக பிரகாசிக்க வேண்டுமானால், தேவனிடம் முகமுகமாக பேசும் அனுபவம் நமக்கு தேவை. நம் வாழ்க்கையில் ஒரு முறை மோசேயை போல தேவ மகிமையை காணும் அனுபவம் கிடைத்துவிட்டால், ஜெபம் எவ்வளவு இன்பமானது என்பது நமக்கு புரிந்துவிடும்.

அதன்பிறகு நம்மை யாரும் ஜெபிக்குமாறு கட்டாயப்படுத்த தேவையில்லை. நாம் தான் மற்றவர்களை ஜெபத்திற்கு அழைப்போம். மோசேயின் வாழ்க்கையில் பல முறை மலைக்கு ஏறிச் சென்று, தேவனோடு நேரத்தை செலவிட்டுள்ளார்.

இதன் விளைவாக இஸ்ரவேல் மக்களுக்கு தேவையான பத்து கட்டளைகள் (இரண்டு முறை), பலி முறைகள், ஆசரிப்புக் கூடார வடிவமைப்பு, வாழ்வியல் வழக்கங்கள், சட்டங்கள் என்று நிறைய காரியங்களை தேவனிடம் இருந்து பெற்றார்.

இதுபோல நாமும் ஜெபத்தில் தேவனோடு ஒரு நெருங்கிய உறவை கொண்டிருக்கும் போது, அவர் நமக்கு மட்டுமின்றி, நம்மை சுற்றிலும் உள்ளவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்குவார். நாம் செய்ய வேண்டிய ஊழியங்களின் முறைகள், ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்குவார்.

நமக்கு எதிராக கிரியை செய்யும் பிசாசின் வல்லமைகள், மனித திட்டங்களை கூட தேவன் நமக்கு வெளிப்படுத்துவார். முன்காலத்தில் வாழ்ந்த பல ஊழியர்கள், தங்களின் மரண நாள், மரண நேரத்தை கூட கூறிவிட்டு மரித்ததாக கேள்விப்பட்டுள்ளேன்.

இதை மோசேயின் வாழ்க்கையிலும் காண முடிகிறது. கடைசியாக மோசேயின் மரணம் கூட ஒரு மலையில் தான் நிகழ்கிறது. இதை குறித்து உபாகமம்:34.5-7 ஆகிய வசனங்களில் காண்கிறோம். தேவனோடு நெருங்கி வாழ்ந்த மோசேயை, தேவனே அடக்கம் செய்தார்.

கர்த்தருடைய வார்த்தையின்படி, என்று அங்கே குறிக்கப்பட்டிருப்பதில் இருந்து மோசே மரிக்கும் முன்பே தனது மரண நாள், இடம், நேரம் ஆகியவற்றை தேவன் தெரிவித்திருந்தார் என்பதை அறியலாம். தேவன் அடக்கம் செய்த மோசேயின் கல்லறையை, வேத வசனம் குறிப்பது போல, இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை என்று வரலாற்று ஆசிரியர்களும், வேத பண்டிதர்களும் தெரிவிக்கிறார்கள்.

எனவே நாமும் ஜெபத்தில் தேவனோடு ஒரு நெருங்கிய உறவை வைத்து கொள்வோம். ஒவ்வொரு முறை ஜெபிக்கும் போதும், தேவ மகிமையை உணர்வோம். கடமைக்காக ஜெபிக்காமல், கருத்தாக ஜெபித்து நமக்கு மட்டுமின்றி, நமது சுற்றத்தாருக்கும் பிரயோஜனம் உள்ளவர்களாக மாறுவோம். ஜெபத்தில் உறுதியாக இருந்து, தேவ ரகசியங்களையும், நம்மை குறித்த எதிர்கால காரியங்களையும் தேவ திட்டங்களையும் அறிந்து கொள்வோம்.

(பாகம் – 5 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *