0 1 min 2 weeks

மலையில் இறந்த சவுல் ராஜா:

இந்த வேதப்பாடத்தில் மலை என்பதற்கு ஜெபம் என்ற பொருளில் நாம் சிந்தித்து வரும் நிலையில், சவுலின் வாழ்க்கையில் மட்டும் எப்படி மலையில் வைத்து ஒரு கோரமான மரணத்தை காண முடிகிறது? என்ற யோசனை தலைப்பை பார்த்தவுடன் நமக்குள் ஏற்படலாம். ஆனால் இதுவும் சாத்தியமே என்கிறது கர்த்தருடைய வேதம். எனவே அதை குறித்து விளக்கும் சவுலின் வாழ்க்கையை ஆராய்வோம்.

இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு, சவுலின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை நாம் காண முடிகிறது. தீர்க்கத்தரிசி சாமுவேல் கூறிய காரியங்களில் அரைக்குறையாக செய்தது முதல் கடைசி வரை, பல குளறுபடிகளை காணலாம்.

தேவனுடைய கட்டளைப்படி அமலேக்கியரை முழுமையாக சங்கரித்து இருக்க வேண்டிய சவுல் (1சாமுவேல்:15.2-3), அப்படி செய்யவில்லை (1சாமுவேல்:15.14-19). அதில் தேவ சித்தம் பாதியும், சொந்த சித்தம் பாதியும் கலந்து செய்தார். இதனால் தேவ கோபத்தை பெற்று கொண்டது மட்டுமின்றி, அவரது சாவில் கூட, அதே அமலேக்கியன் தான் முன்னே நிற்கிறான் (2சாமுவேல்:1.6-10) என்பதை காணலாம்.

இன்றைய ஆவிக்குரிய உலகில் இது போன்ற சம்பவங்களை பல இடங்களில் காண முடிகிறது. எந்த தகுதியும் இல்லாத நிலையில் ஊழியத்திற்காக தேவனால் அழைப்பை பெற்று வரும் பலரும், ஒரு மேன்மையான நிலையை அடைந்த பிறகு, தனது சொந்த விருப்பங்களை செய்ய துவங்குகிறார்கள்.

சாமுவேல் அவ்வப்போது சவுலை உணர்த்தியது போல, மேற்கூறிய நபர்களை, தேவன் திரும்ப திரும்ப உணர்த்தினாலும், அதை அரைக்குறையாக செய்துவிட்டு, தனது சொந்த விருப்பத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

இதனால் சிறப்பான தேவ ஊழியர்களாக இருக்க வேண்டிய பலரும், தங்களின் சொந்த விருப்பத்தின் விளைவாக தேவையில்லாத அழிவையும் பெரும் தோல்விகளையும் சந்திக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு பிறகு சவுல், தேவன் தன்னை விட்டு விலகிவிட்டார் என்பதை உணர்ந்தாலும், தன்னுடைய நிலையை மாற்றி கொள்ளவில்லை.

தேவனுக்கு விரோதமாக நம் சொந்த விருப்பத்தை செய்து தேவனை விட்டு விலகியதாக அறிந்தால், உடனே மனந்திரும்பி தேவனிடம் நெருங்கி வந்தால், அவரிடம் மன்னிப்பை பெறலாம். மேலும் நியாயத்தீர்ப்பையும் வீழ்ச்சியையும் தவிர்க்க முடியும்.
சவுலின் வாழ்க்கையில் மற்றொரு குறை, எந்த தீங்கும் செய்யாத தாவீதை, ஊர்ப் பெண்கள் புகழ்ந்து பாடினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவனை கொலை செய்ய அலைந்து திரிகிறான்.

தன்னை காட்டிலும் சிறப்பான பெயரும், புகழும் பெற்ற தாவீதை கண்டு சவுலுக்கு ஏற்பட்ட பொறாமையினால், தான் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல், பல குளறுபடிகளை சவுல் செய்தான். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு: தேவனுடைய ஆசாரியர்களையே கொலை செய்தது.

சவுல் தேவ சித்தம் செய்யாமல் சொந்த விருப்பத்தை செய்த போது, தாம் விரும்பும் காரியங்களை முழுமையாக செய்யும் தாவீதை போன்ற மற்றவர்களை, தேவன் எழுப்புகிறார். ஆனால் அதையும் இந்த சவுல் போன்றவர்கள் விரும்புவதில்லை. அவர்களை எப்படியாவது மட்டுப்படுத்தி, அழிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கான வஞ்சகமான பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

இது போன்ற தற்கால சவுல்களை சபைகளிலும் ஊழியங்களிலும் காண முடிகிறது. புதிய விசுவாசிகள் யாராவது அதிக புகழையும், கணத்தையும் பெற்றால், பொறாமை கொள்ளும் பழைய விசுவாசிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக கிரியை செய்து, அவர்களை விசுவாசத்தில் இருந்து விழுத் தள்ளும் (கொலை செய்ய துடிக்கும் சவுலின் ஆவி) செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

ஆவிக்குரிய உலகில் தேவனால் அதிகமாக எடுத்து பயன்படுத்தப்படும் இளம் தேவ ஊழியர்களை கண்டு சகிக்க முடியாமல், அவர்களிடம் உள்ள குறைகளையும் குற்றங்களையும் பெரிய விஷயமாக சுட்டிக்காட்டி பிரசங்கம் செய்து காலத்தை தள்ளும் பழைய ஊழியர்களும் இருக்க தான் செய்கிறார்கள். இதனால் எந்த மாதிரியான ஆவிக்குரிய எழும்புதல் அல்லது வளர்ச்சி ஏற்படும் என்று எனக்கு தெரியவில்லை.

ஆனால் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தேவ ஊழியர்கள், விசுவாசிகள் என்று யாராக இருந்தாலும், தேவனுடைய பார்வையில் தண்டனைக்கு பாத்திரவான்கள் தான். அவர்களுக்கு சவுலின் முடிவு தான் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சவுல் ராஜாவாக இருந்த போது, பல போர் வீரர்களும் உதவ இருந்தார்கள். ஆனால் சாகும் நேரத்தில் யாரும் இருக்கவில்லை.

இதேபோல நம்மை காட்டிலும் மேன்மையான மற்றவர்களுக்கு விரோதமாக நாம் கிரியை செய்யும் போது, நமக்கு உதவ, ஆலோசனை அளிக்க பலரும் இருப்பார்கள். ஆனால் நாம் தேவனுடைய கரத்தில் இருந்து வரும் தண்டனையை அனுபவிக்கும் போது, யாரும் உதவ வரமாட்டார்கள்.

சவுலின் இந்த மோசமாக வாழ்க்கை முறையினால், அவருக்கு மட்டும் நஷ்டம் ஏற்படவில்லை. அவரது மகன்களுக்கும் சாவு நேரிட்டது. எனவே நாம் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அது நமக்கு மட்டுமின்றி பின் சந்ததிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால் தேவ சித்தம் செய்த தாவீதை தேவன் பாதுகாத்ததோடு, சவுலின் மரண நேரத்தில் உதவ கூட தாவீதினால் வர முடியாத நிலையை தேவன் ஏற்படுத்தினார்.
இஸ்ரவேலுக்கு எதிராக வந்த பெலிஸ்தருக்கு விரோதமாக சவுல், கில்போவா மலையில் பாளயமிறங்குகிறார்.

ஆனால் பெலிஸ்தருக்கு முன்பாக நிற்க முடியாமல் வீழ்ந்து சாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதேபோல மற்றவர்களின் மீது நமக்கு, பகை, விரோதம், எரிச்சல், பொறாமை ஆகியவற்றை வைத்து கொண்டு, தேவ சமூகத்தில் ஜெபிக்க கூடாது.

இது போன்ற ஜெபங்களுக்கு பதில் கிடைக்காது என்பது 100 சதவீதம் உறுதி. ஏனெனில் நாம், தேவனால் மற்றவர்களை ஆசீர்வதிக்கவே அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் மற்றவர்களை சபிக்குமாறு தேவனிடம் ஜெபிப்பது எவ்வளவு முட்டாள்தனம். இந்த ஜெபங்களில் ஒரு வேளை நாம் சாபங்களை கூறக் கூடும். ஆனால் அது இஸ்ரவேல் மக்களை சபிக்க அழைக்கப்பட்ட பிலேயாம், அவர்களை ஆசீர்வதித்தது போல தேவன் மாற்றிவிடுவார்.

எனவே நமது அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதிப்படுத்தி கொள்வோம். தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் காரியங்களை முழுமையாக செய்வோம். தேவ சித்தத்தை அரைக்குறையாக செய்வது, அதை செய்யாமல் விட்டதற்கு சமம் என்பதை அறிவோம்.

நமது குறைகளை உணர்த்தும் வகையில், நம்மை விட தாழ்ந்த நிலையில் உள்ளவர்களை தேவன் உயர்த்தும் போது, அதற்கு மனஸ்தாபம் அடைந்து தேவனிடம் திரும்புவோம். அந்த நேரத்தில் நமக்குள் சவுலை போன்ற பொறாமை குணம் கிரியை செய்வதாக இருந்தால், அதை இயேசுவின் நாமத்தில் கட்டி ஜெயம் எடுப்போம்.

(பாகம் – 7 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *