0 1 min 4 weeks

இயேசுவின் வாழ்க்கையில் மலைகள்:

நமக்காக, தன் ஜீவனையே அளித்த இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில், அதிக இடங்களில் மலைகளின் குறுக்கீட்டை காண முடிகிறது.

இந்த உலகில் 3½ ஆண்டுகள் ஊழியம் செய்த இயேசுவின் வாழ்க்கையில், தன்னோடு வைத்திருந்த 12 சீஷர்களை தேர்ந்தெடுப்பதற்கு முந்தைய இரவு முழுவதும் ஒரு மலைக்கு சென்று ஜெபித்ததாக, லூக்கா:6.12-ல் வாசிக்கிறோம்.

தேவ ஊழியத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் விசுவாசிகளின் வாழ்க்கையில், தேவ சித்தம் அறியும் வகையிலான தனி ஜெபம் தேவை. அதற்கு காலம், நேரம், தேதி, சந்தர்ப்பம் ஆகியவற்றை பார்த்துக் கொண்டிருக்க கூடாது.

இரவு நேரத்தில் மலையில் ஜெபிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அங்கு உள்ள காட்டு மிருகங்கள், ஊரும் பிராணிகள், பாம்புகள் ஆகியவற்றால், தொந்தரவு ஏற்படலாம். அதேபோல, நாம் ஊழியத்திற்காக ஜெபத்தில் போராடும் போது, அதற்கு பல தடைகள் வரக்கூடும். ஆனால் பின்வாங்க கூடாது. அப்படி பின்வாங்கினால் தேவனுடைய தெளிவான சித்தத்தை அறிந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்படும்.

மேலும், உலக மக்களின் பாவங்களை முழுமையாக சுமக்க இந்த உலகிற்கு மானிடனாக வந்த இயேசு, சீஷர்களை தேர்ந்தெடுப்பதில் கூட சொந்தமாக செயல்படவில்லை. பிதாவிடம் ஆலோசித்த பிறகே செய்கிறார். இதில் இருந்து பிதாவோடு, இயேசுவிற்கு இருந்த நெருங்கிய உறவை நாம் அறிய முடிகிறது. இதேபோல இயேசுவோடும் நமக்கு ஒரு நெருங்கிய உறவு தேவை. இதற்கு ஜெபம் மட்டுமே நமக்கு உதவி செய்யும்.

மற்றொரு சந்தர்ப்பத்தில், இந்த உலகில் இயேசு ஊழியத்தை துவக்கும் முன் 40 நாட்கள் உபவாசத்தோடு இருந்த போது, பிசாசு அவரை உயர்ந்த மலையின் மேல் அழைத்து சென்றாக (மத்தேயு:4.8) வாசிக்கிறோம். இங்கு பிசாசின் தந்திரமான நடவடிக்கையை குறித்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

தன்னையே பலியாக கொடுத்து உலகை பாவத்தில் இருந்து மீட்டு, அதை அரசாள வேண்டும் என்பது இயேசுவை குறித்த தேவ சித்தம். ஆனால் அதை அடைய இயேசுவிற்கு குறுக்கு வழியை பிசாசு காட்டுகிறான். அதை அறிந்த இயேசு, வேத வசனத்தினால் பிசாசை ஜெயித்தார்.

இன்று நம் வாழ்க்கையிலும் ஆசீர்வாதமாக தோன்றும் உலக ஆடம்பரம், பணம், புகழ் ஆகியவற்றை அடைய, பிசாசு குறுக்கு வழிகளை நம் காதுகளில் ஓதுகிறான். இதை நம்பினால், நமது ஆவிக்குரிய வாழ்க்கையை எளிதாக தகர்த்துவிட்டு, தேவ சித்தத்தில் இருந்து நாம் விலகி செல்ல நேரிடும்.

நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஏற்படும் வீழ்ச்சி தான் அவனுக்கு தேவை. அதற்காக பிசாசு எதை வேண்டுமானாலும் தருவான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இது போன்ற குறுக்கு வழிக்கான ஆலோசனைகளை, யார் மூலம் பிசாசு கொண்டு வந்தாலும், அது தேவனுடைய வார்த்தைக்கு தகுதியானதா என்று பரிசோதிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், அது ஒரு தவறான ஆலோசனை என்று தெரிந்து கொள்ளலாம்.

மத்தேயு:15.29-38 ஆகிய வசனங்களை வாசிக்கும் போது, இயேசுவின் பாதங்கள் பட்ட இன்னொரு மலையை குறித்து காண முடிகிறது. அங்கு அவர் பல்வேறு நோயாளிகளை குணப்படுத்திவிட்டு, 3 நாட்கள் பிரசங்கம் செய்கிறார். தமது வார்த்தைகளை கேட்ட மக்களுக்கு உணவளிக்க, சீஷர்களுக்கு கட்டளையிடுகிறார். அதன்பிறகு 4,000 பேருக்கு (பெண்கள், குழந்தைகள் தவிர) உணவு அளிக்கிறார்.

இன்று தேவாலயங்களில் செய்யப்படும் 1 மணிநேர பிரசங்கத்தையே கேட்க பலருக்கும் விருப்பம் இல்லை. அதேபோல நாம் கூறும் சுவிஷேசத்தை கேட்கவும், பலருக்கும் விருப்பம் ஏற்படுவதில்லை. ஆனால் இயேசுவின் பிரசங்கத்தை 3 நாட்கள் தொடர்ந்து மக்கள் கேட்டதாக வாசிக்கிறோம்.

இதற்கான காரணங்களில் முக்கியமான ஒரு காரியம், நாம் சுயமாக பேசுவது. தேவ வசனம், சுவிசேஷம், தீர்க்கத்தரிசனம் ஆகியவற்றை நாம் சுயமாக பேசினால், கேட்க யாருக்கும் மனம் இருக்காது. ஆனால் தேவனுக்கு நம்மையே முழுமையாக ஒப்புக் கொடுக்கும் போது, அவர் நம் மூலம் பேசுகிறார் (லூக்கா:12.12). அப்போது நாமாக நிறுத்தினாலும், கேட்பவர்கள் தொடர்ந்து பேசுமாறு கூறுவார்கள்.

அதேபோல மத்தேயு:17.1-13 வசனங்களில் ஒரு மலையில் வைத்து இயேசு மறுரூபமாகி, மோசே, எலியா ஆகியோருடன் பேசுவதை, உடனிருந்த 3 சீஷர்கள் கண்டார்கள். இந்த வசனத்தின் துவக்கத்தில் சீஷர்களை, இயேசு தனித்திருக்கும்படி அழைத்து சென்றதாக வாசிக்கிறோம். அப்படியென்றால், இந்த மலையின் தரிசனம், மற்ற எல்லாருக்கும் அளிக்கப்பட வேண்டியதல்ல என்பது தெளிவாகிறது.

நம் வாழ்க்கையிலும் தேவன், சில நேரங்களில் தனிமையை அனுமதிக்கிறார். ஆனால் அந்த தனிமையிலும் இயேசு நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் மறக்க கூடாது. அதேபோல அந்த தனிமையில், மற்றவர்களுக்கு அளிக்கப்படாத தரிசனங்களை, தேவன் நமக்கு காட்ட விரும்புகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் துக்கப்பட கூடாது.

மேலும் பழைய ஏற்பட்டில் வாழ்ந்த மோசேயையும், எலியாவையும், சீஷர்களால் அடையாளம் காண முடிகிறது. இதில் இருந்து தேவ சமூகத்தில் நமக்கு அளிக்கப்படும் தரிசனங்கள் குழப்பமானவைகள் அல்ல என்பதை அறியலாம்.

இயேசுவின் ஊழியத்தில் மலை பிரசங்கம் என்ற ஒரு பகுதியே தனியாக காண்கிறோம். கிறிஸ்துவ வாழ்க்கையின் முக்கியமான காரியங்களை, இயேசுவின் மலை பிரசங்கத்தில் நாம் காண முடிகிறது.

கடைசியாக, உலகின் பாவங்களுக்காக இயேசு ஏற்ற சிலுவை மரணம், கல்வாரி மலையில் வைத்து தான் நடைபெற்றது. சிலுவை மரணத்தில் இயேசு கூறிய 7 காரியங்களில் ‘முடிந்தது’ என்ற வார்த்தையும் (யோவான்:19.30) கூறப்பட்டுள்ளது. அதாவது, இந்த உலகில் வந்து தான் செய்ய வேண்டிய எல்லாவற்றையும், இயேசு செய்து முடித்தார்.

இதேபோல நம்மை குறித்தும் தேவனுக்கு ஒரு சித்தம் உண்டு. அதை அறிந்து முழுமையாக செய்யும் போது, அது நமக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பெரிய ஆசீர்வாதமாகவும், விடுதலையாகவும் அமையும்.

அதன்பிறகு இயேசு அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்து, 40 நாட்கள் இந்த பூமியில் இருந்து சீஷர்களை உறுதிப்படுத்திவிட்டு, மலையில் வைத்து தமது சீஷர்களிடம் விடைப் பெற்று பரமேறி சென்றார் (அப்போஸ்தலர் நடபடிகள்:1.9-12). அப்போது பரிசுத்தாவியை பெறுவதற்கு சீஷர்களை காத்திருக்கும்படி அறிவுறுத்தி செல்கிறார்.

அதற்கு அடுத்த வசனத்தில், வானத்தை அண்ணார்ந்து பார்த்து கொண்டிருந்த சீஷர்களிடம், வெண்மையான அங்கி தரித்த இருவர், இயேசு திரும்ப அப்படியே வருவார் என்று கூறுகிறார்கள். இதில் இருந்து அவர் மீண்டும் மலையின் மீது வந்து இறங்குவார் என்பது தெளிவாகிறது.

இப்படி இயேசுவின் வாழ்க்கையில் அநேக சந்தர்ப்பங்களில் மலையை காண முடிகிறது. நாம் கவனித்து படித்தால், இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் மக்கள் இடையே அவர் ஒரு ஆவிக்குரிய உணர்வை அளித்துள்ளதை காண முடிகிறது. எனவே தேவனோடு உள்ள நமது தனிப்பட்ட உறவின் மூலம் நமக்குள் ஒரு எழுப்புதல் அடைவதோடு, மற்றவர்கள் இடையேயும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு காரணமாக அமையும் என்பதை அறியலாம்.
——-
இப்படி பரிசுத்த வேதாகமத்தில் பலருடைய வாழ்க்கையில் மலைகள் குறுக்கிட்டதை காண முடிகிறது. அது சிலருடைய வாழ்க்கையில் ஆசீர்வாதமாகவும், சவுல் போன்றவர்களுக்கு தண்டனையாகவும் அமைந்துள்ளது. எனவே மலை என்ற தேவனோடு உள்ள நெருங்கிய உறவை தரும் ஜெப அனுபவத்தை, சரியான முறையில் பாதுகாத்து கொள்வோம்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *