0 1 min 1 mth

சீரியாவின் ராஜாவுடைய ஊழியக்காரர் அவனைப் பார்த்து: அவர்களுடைய தேவர்கள் மலைத்தேவர்கள், அதினால் அவர்கள் நம்மை மேற்கொண்டார்கள்;… 1இராஜாக்கள்:20.23

இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப்பின் நாட்களில், சீரியாவிற்கு எதிரான யுத்தத்தில் வெற்றிப் பெற்றனர். இந்த சீரியர்கள், தங்களின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்த பிறகு, அவர்கள் கூறிய வசனத்தை தான் மேலே வாசித்தோம். இது ஒரு வரலாற்று சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என்றாலும், இதில் இஸ்ரவேலின் தேவனை குறித்து கூறப்படும் ஒரு குறிப்பை காண முடிகிறது.

இஸ்ரவேலின் தேவர்கள் மலைத் தேவர்கள் என்பதால் தங்களுக்கு தோல்வி ஏற்பட்டதாக, சீரியர்கள் நினைத்து கொள்கின்றனர். இந்நிலையில் உண்மையில் இஸ்ரவேலின் தேவன் மலைகளின் தேவனா? என்ற கேள்வி எழுகிறது.

ஆனால் அப்படி அவர் ஒரு மலைகளின் தேவனல்ல என்பது நாம் வாசித்த வசனத்திற்கு பிறகு வரும் வசனங்களின் மூலம் அறிய முடிகிறது எனினும் பைபிளில் பல இடங்களில் நம் தேவன், மலைகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதை காண முடிகிறது. எனவே பரிசுத்த வேதாகமத்தில் மலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட சில குறிப்பிட்ட இடங்களை குறித்து ஆராய்ந்து பார்ப்போம்.

1. மலையில் நோவாவின் குடும்பம்:

பரிசுத்த வேதாகமம் வாசிக்க ஆரம்பித்த சில ஆதிகாரங்களிலேயே ஒரு பெரிய அளவிலான தேவனின் நியாயத்தீர்ப்பை, ஆதியாகமம்:7-8 அதிகாரங்களை வாசிக்கும் போது காண முடிகிறது. உலகில் ஆதி மனிதர்களின் பாவம் அதிகரித்த போது, அதை பொறுக்க முடியாத தேவன், அதுவரை இல்லாத மழையை உலகில் பெய்ய பண்ணி மனிதன் உட்பட அனைத்து நிலவாழ் உயிரிகளையும் அழிக்கிறார்.

ஆனால் நோவா என்ற 600 வயது தாத்தாவிற்கு, தேவனிடம் கிருபை கிடைத்து, பேழையை உண்டாக்கி குடும்பத்துடன் தப்புகிறார். இது குறித்து அவரால் எச்சரிப்பை பெற்ற மற்ற உலக மக்கள், அதற்கு கீழ்படியாமல் தேவனுடைய நியாயத்தீர்ப்பில் சிக்கி மாண்டு போகிறார்கள்.

உலகில் 40 நாட்கள் தொடர்ந்து பெருமழை பெய்த போது உண்டான வெள்ளம், பூமியின் சகல மலைகளை மூடியது என்று ஆதியாகமம்:7.19-ல் காண்கிறோம். ஆனாலும் தேவ கட்டளையை ஏற்று பேழையை உண்டாக்கிய நோவாவின் குடும்பத்தினர் மற்றும் இனம் காக்க நோவாவின் பேழைக்குள் சென்ற விலங்கின ஜோடிகள் உயிர் தப்பினர்.

இந்நிலையில் நோவாவின் பேழை, ஆராரத் என்ற மலையின் மீது தங்கியதாக, ஆதியாகமம்:8.4-ல் காண்கிறோம். ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு மேலாக பூமியில் வெள்ளம் இருந்த நிலையில், அது முழுவதுமாக வற்றிய பிறகே, நோவாவின் குடும்ப வெளியே வந்தது.

இந்த பேழை என்பது நாம் ஆராதிக்க தேவன் நமக்கு அளித்திருக்கும் சபையை காட்டுகிறது. இந்த சபையில் பல மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள் ஆகியவை நம்மோடு இருக்கலாம். இது குறித்து சங்கீதம் 23.1 தினத்தியானத்தில் கண்டோம். எனவே அவைகளோடு ஒன்றாகவும், சமாதானத்தோடும் நாம் இருந்தால் மட்டுமே உலகம் அடையும் நியாயத்தீர்ப்பில் இருந்து நாம் தப்ப முடியும்.

இன்றைய கிறிஸ்துவ உலகில் இதை புரிந்து கொள்ளாத பலரும், ஒரு சபையின் போதகரின் ஆலோசனை கடினமாகவோ அல்லது கண்டிப்பாகவோ இருந்தால், விசுவாசிகள் அடுத்த சபைக்கு தாவி விடுகிறார்கள். இது குறித்து கேட்டால், அந்த சபையும், ஊழியரும் சரியில்லை என்கிறார்கள்.

இல்லாவிட்டால், சபைக்கு வருகிறவர்கள் சரியில்லை என்கிறார்கள். நாம் செல்லும் சபைக்கு வருகிறவர்கள் எல்லாரும் பரிசுத்தவான்களாக இருந்துவிட்டால், நம் வாழ்க்கையை பரிசுத்தம் செய்ய சபை எதற்கு? வேத வசனம் எதற்கு? ஊழியர்கள் எதற்கு?

மற்றவர்களை சரியில்லை என்று கூறும் நமக்குள் எல்லாம் நிறைவாக இருக்கிறதா? என்பதை முதலில் யோசிக்க வேண்டும். நமக்குள் எவ்வளவோ குறைகள் இருக்கிறது என்பது நமக்கே தெரியும் என்றாலும், அதற்கு சாக்குப் போக்குகளை சொல்லி விட்டு, மற்றவர்களின் குறைகளை பெரிய விஷயமாக எடுத்து கொள்கிறோம்.

நம்மை போலவே, மற்றவர்களிடமும் குறைகள் இருப்பது இயற்கையே என்பதை புரிந்து கொண்டால், மேற்கூறிய சபைத் தாவல்கள் நடைபெற வாய்ப்பில்லை.

இங்கே குறிப்பிடப்படும் மலையை, நமது ஜெப வாழ்க்கைக்கு நிழலான எடுத்துக் கொள்ளலாம். நாம் இருக்கும் சபையில் நிலைநின்றால் மட்டும் போதாது. அந்த சபையும், நாமும் ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். உலக வெள்ளத்திற்குள் நாம் சிக்கி கொள்ளாதபடி, நமது சபை ஜெபத்தில் தங்கியிருக்க (உறுதியாக) வேண்டும்.

இன்று பல கிறிஸ்துவ சபைகளில், அலங்காரம், ஆடம்பரம், இசை, பாட்டு, பிரசங்கம், ஊழியம், ஏழைகளுக்கு தர்மம் செய்வது என்று பல காரியங்கள் இருக்கிறது. ஆனால் ஜெபம் இல்லை. கிறிஸ்துவர்களில் ஜெபிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

முன்கால கிறிஸ்துவர்களின் ஜெபத்தால் தான் நாம் இன்றும் கிறிஸ்துவிற்குள் காக்கப்படுகிறோம். எனவே ஒவ்வொரு கிறிஸ்துவனின், கிறிஸ்துவ சபையின் வளர்ச்சியும், நிலைநிற்கும் தன்மையும் ஜெபத்தில் தான் உள்ளது என்பதை நாம் ஒருநாளும் மறந்து போகக் கூடாது.

அதேபோல நோவாவின் குடும்பத்தில் இருந்த எல்லோருக்குள்ளும் ஒருமனம் இருந்தது. நோவா கூறிய காரியங்களுக்கான சாத்தியம் எதுவும் இல்லாத நிலையிலும், அவரது குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு கீழ்படிந்தனர். பூமியில் மழை நின்றுவிட்டதால் நாங்கள் பேழையை விட்டு இறங்கி செல்கிறோம் என்று யாரும் இறங்கி செல்லவில்லை. தேவனிடம் இருந்து கட்டளை கிடைத்த பிறகே, நோவாவும் குடும்பமும் பேழையை விட்டு வெளியேறியது.

எனவே நமது குடும்பத்திலும் இந்த ஒருமனம் தேவை. குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கும், வெவ்வேறு கருத்துகளையும் கொண்டிருந்தால், உலக நியாயத்தீர்ப்பில் நாமும் சிக்கி பலியாக வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தேவ சமூகத்தில் ஒருமனத்தோடு காத்திருக்கும் அனுபவம் இருக்க வேண்டும்.

கடைசி காலத்தில் வாழும் நமக்கு, எந்த மாதிரியான போராட்டங்கள், சோதனைகள், கஷ்டங்கள் ஆகியவை வரும் என்பதை நிதானிக்க முடியாத நிலையில் இருப்பதால், நம் குடும்பத்திற்குள்ளே ஒருமனம் இல்லை என்றால், தேவனுடைய நடத்துதலை கண்டு நடப்பது மிகவும் கடினம்.

எனவே நோவாவின் பேழை மலையில் தங்கியிருந்தது போல நமக்குள்ளும், நமது செல்லும் சபையிலும் ஜெபம் நீங்காமல் நடைபெறுவதை உறுதி செய்யுங்கள். குடும்பத்திற்குள் ஒருமனமும், ஐக்கியமும் கொண்டு, தேவ சமூகத்தில் ஒரே ஆவியுடையவர்களாக மாறுவோம்.

சபையில் உள்ள மற்றவர்களை குற்றப்படுத்தும் பழக்கத்தை கைவிட்டு, நம்மில் உள்ள குறைகளை களைந்து மற்றவர்களுக்கு மாதிரியாக மாறுவோம். இதன்மூலம் நோவாவின் குடும்பத்தை போல, உலக மக்கள் அடைய போகும் தேவனுடைய நியாயத்தீர்ப்பில் இருந்து தப்புவோம்.

(பாகம் – 2 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *