0 1 min 6 mths

…கர்த்தருடைய வழி சுழல் காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது. மேகங்கள் அவருடைய பாதத் தூளாயிருக்கிறது. நாகூம்: 1.3

தென்றல் வீசும் சூழ்நிலையில் நாம் நேரத்தைச் செலவிடுவது ஒரு இனிமையான அனுபவம் ஆகும். இதைப் பற்றி பலரும் கவிதைகள் கூட எழுதுவார்கள். தங்களுக்கு பிடித்தவர்களை, தென்றலோடு ஒப்பிட்டு கூறுபவர்களும் உண்டு. ஆனால் சுழல்காற்று மற்றும் பெருங்காற்று என்பது, யாரும் விரும்பத்தக்க ஒரு சூழ்நிலை அல்ல.

எவ்வளவு நிலையான மனிதனாக இருந்தாலும், சுழல் காற்றில் நடந்து செல்ல முடியாது; நிற்க முடியாமல் தடுமாறுவார்கள். பெருங்காற்றில் நடந்து சென்றால், அது நம்மைக் கீழே விழச் செய்யும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, சென்னையில் ஏற்பட்ட வர்தா புயலை கூறலாம்.

நம் வாழ்க்கையில் வரும் பல கஷ்டங்கள், நெருக்கங்கள் போன்றவை, சுழல்காற்று அல்லது பெருங்காற்றைப் போல நமக்கு பெரும் பாதிப்பை உண்டாக்குகின்றன. அந்தச் சூழ்நிலையில் நமது சொந்த பலத்தைக் கொண்டு நடமாட முடியாமல், என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கிறோம்.

ஆனால் இது போன்ற சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் தான் கர்த்தருடைய வழி இருப்பதாக, தியான வசனம் கூறுகிறது. தீர்க்கத்தரிசி எலியா சுழல்காற்றில் பரலோகத்திற்கு ஏறிப் போனதாக 2 இராஜாக்கள்.2:11-ல் காண்கிறோம். அந்தக் காட்சியைக் கண்டால் மட்டுமே, எலிசாவிற்கு தான் விரும்பியபடி, எலியாவின் இரட்டிப்பான ஆவியின் பலத்தைப் பெற முடியும் என்று எலியா, அதற்கு முந்தைய வசனத்தில் கூறுவது கவனிக்கத்தக்கது.

அப்படியென்றால், ஒரு மனிதனை மேலே தூக்கி செல்லும் வகையில் வீசிய சக்தி வாய்ந்த சுழல்காற்றிலும், எலிசா தனது குருவைப் பார்த்துக் கொண்டே இருந்திருப்பார். அதனால் தான் எலிசாவிற்கு இரட்டிப்பான பலம் கிடைத்தது.

இதேபோல நம் வாழ்க்கையில் வரும் சுழல்காற்று போன்ற பிரச்சனைகளில் தான், தேவன் அளிக்கும் இரட்டிப்பான ஆவிக்குரிய பலம் நமக்கு கிடைக்கிறது.
அந்தச் சூழ்நிலையிலும் நம்மோடு இருக்கிற தேவனை உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். தேவனை விட்டு நம் பார்வையை வேறிடத்திற்கு திருப்பினால், அதைப் பெற முடியாது.

மத்தேயு.8.24-26 வசனங்களில் இயேசுவோடு பயணித்த சீஷர்களின் படகின் மீது பெருங்காற்று வீசியதாக வாசிக்கிறோம். படகில் இயேசு இருந்தும் அதன்மீது பெருங்காற்று வீசியது இருக்கிறது என்றால், நாம் இரட்சிக்கப்பட்ட பிறகு கஷ்டங்கள் வராது என்று எப்படி கூற முடியும்? எவ்வளவுத் தான் பெருங்காற்று நம் வாழ்க்கை என்ற படகின் மீது அடித்தாலும், இயேசு இருக்கும் வரை, நாம் அழிந்து போகமாட்டோம். நித்திரையில் இருக்கும் இயேசு எழுந்தால், காற்றும் கடலும் சாந்தமாகிவிடும்.

அந்தப் பெருங்காற்றில் அழிந்து போவோம் என்று நினைத்த சீஷர்களை, அக்கரைக்கு கூட்டிச் சென்று ஊழியத்தைச் செய்தார் இயேசு. கஷ்டங்களின் நடுவில் என்ன செய்ய முடியும் என்று தவிக்கும் நாமும், இயேசுவை நாடினால், அவருடைய வழியை நமக்கு வெளிப்படுத்துவார். நாம் எதிர்பார்க்காத ஊழியங்களைச் செய்ய வைப்பார்.

எனவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களையும் துக்கங்களையும் கண்டு மனம் சோர்ந்து போக வேண்டி தேவையில்லை. அவற்றின் நடுவே தப்பிச் செல்லக்கூடிய வழியைத் தேவன் ஆயத்தம் செய்கிறார். மேலும் நம்மை நிலைத்தடுமாற செய்யும் சோதனைகளில், அவரை மட்டுமே நோக்கி பார்க்கும் போது, இரட்டிப்பான ஆவிக்குரிய பலத்தைத் தேவன் அருளுகிறார்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்பான தெய்வமே, நாங்கள் சந்திக்கும் சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் சோர்ந்து போன நிலையில் இருந்தோம். ஆயினும் அதில் தான் உமது வழிகளைக் காட்டி, இரட்டிப்பான பலத்தை அருளுகிறீர் என்று பேசிய உமது வெளிப்படுத்தலுக்காக ஸ்தோத்திரம். எனவே சோதனையில் தளர்ந்து போகாமல், உம்மை மட்டுமே நோக்கிப் பார்த்து, உமது சமூகத்தை நாடி வாழ உதவிச் செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *