0 1 min 1 yr

மன்னர்களின் ஆட்சி இருந்த போது, பிரஜைகளுக்கு தனிப்பட்ட கருத்துகளைக் கூற எந்த அதிகாரமும் இல்லை. இதை இன்றும் மன்னர் ஆட்சி உள்ள சில நாடுகளில் காணலாம். மன்னர்களின் உத்தரவை அப்படியே பின்பற்ற வேண்டும்.ஆனால் இந்தியா போன்ற மக்களாட்சி நடைபெறும் நாடுகளில், குடிமக்களுக்கு கருத்து சுதந்திரம் உண்டு. தற்போது உள்ள சமூக ஊடகங்கள் முதல் தனி மனிதர்கள் வரை, அரசியல், அரசியல்வாதிகள் குறித்து பேசுவது சர்வசாதாரணம்.

இந்நிலையில், இரட்சிக்கப்பட்டவர்கள் இடையேயும் அரசியல் கருத்துகள் பேசுவது, அரசியல்வாதிகளை விமர்சிப்பது அதிகரித்து வருகிறது. நாம் அரசியல் பேசுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் சமீபத்தில் நான் கேட்ட சில சம்பவங்கள் மிகவும் வருத்தத்தை அளித்தது. அது குறித்து பகிர விரும்புகிறேன்.

கேட்டது:

2020 துவக்கம் முதலே இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. முதல் அலை, 2வது அலை என்று பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கிறிஸ்தவர்கள் இடையே அரசியல்வாதிகளின் மீது தவறுதலான கருத்தும் பேச்சும் நிலவுகிறது.

நாட்டை ஆளும் குறிப்பிட்ட பெரிய கட்சி சரியில்லை. அதனால் கொரோனா காலத்தில் சரியான முடிவு எடுக்கவில்லை. அதிலும் அந்த கட்சியின் தலைவர், மக்களை ஏமாற்றுகிறார் என்றெல்லாம் பேசுகிறார்கள்.

முன்னதாக, அந்த கட்சி 2வது முறை மத்திய அரசை கைப்பற்றிய போது, பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இடையே அதிருப்தியான பேச்சை கேட்க முடிந்தது. அதில் சிலர், தேவன் இந்தியாவை கைவிட்டார். இனி யாராலும் காப்பாற்றவே முடியாது என்று பேசினார்கள்.

தமிழகத்தில் தேர்தல் நடந்த போது, பல கிறிஸ்தவர்கள் குறிப்பிட்ட கட்சி தான் வெற்றி பெற வேண்டும் என்று உபவாசம் போட்டு ஜெபித்தார்கள். இன்னும் சில போதகர்கள், தேவ வசனத்தை வைத்து தீர்க்கத்தரிசன வீடியோ வெளியிட்டவர்களும் உண்டு.

இது குறித்த கேட்ட போது, அவர்கள் ஆதரிக்கும் மேற்கண்ட கட்சி தான் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இருக்குமாம். சுவிசேஷ சொல்லவும், தேவ ஊழியம் செய்யவும் எந்த தடையும் இருக்காதாம்.

ஆனால் எதிர்கட்சியினர், இரட்சிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவே செயல்படுவார்களாம். தேவையில்லாத சட்டங்களை கொண்டு வந்து, கிறிஸ்தவர்களை ஒடுக்குவார்களாம்.

சில போதகர்கள் கூட்டங்களில், கிறிஸ்தவர்களுக்கு எதிரானவர்கள் என்று கூறப்படும் கட்சியின் தலைவருக்கு, தேவனே தீர்க்கத்தரிசன புத்தகத்தின் ஒரு அதிகாரத்தை கனவில் வெளிப்படுத்தி, மிரட்டியதாக பேசினார்கள்.

கிறிஸ்தவர்களுக்கு ஆதரவானது என்று நினைக்கப்படும் கட்சியினர் தான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று சில சபையினர் உபவாச ஜெபம் கூட நடத்தினார்கள். இதனிடையே நீங்கள் யாருக்கும் ஓட்டு போட்டீர்கள் என்று என்னை தனிப்பட்ட முறையில் கேட்டவர்களும் உண்டு.

ஆதரவான கட்சியின் தலைவர் தினமும் பரிசுத்த வேதாகமம் படிப்பதாகவும், அவர் ஒரு மறைமுக கிறிஸ்தவர் என்று சிலர் பேசினார்கள். சிலர் அதை கூறி அவருக்கு பிரச்சாரம் செய்தவர்களும் இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட அந்த கட்சி வெற்றி பெற்றதும், தேவன் தன் ஜனத்தை விடுவித்தார் என்று பிரசங்கம் செய்த ஊழியர்கள் இருக்கிறார்கள். சிலர் சபையில் இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள்.

இன்றைய இரட்சிக்கப்பட்ட பெரும்பாலான கிறிஸ்தவர்களின், சபைகளின் நிலை இப்படி இருக்க, இந்த காரியங்கள் குறித்து பரிசுத்த வேதாகமம் மூலம் தேவன் என்ன நினைக்கிறார் என்ற சிந்தனை எனக்குள் எழுந்தது.

சிந்தித்தது:

ஒவ்வொரு நாட்டின் ராஜாக்களையும் யார் நியமிக்கிறார் என்று தானியேல்:2.21ல் காணலாம். அங்கு, ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர் தேவன் என்று வாசிக்கிறோம். அப்படி என்றால், இந்த தேசத்திற்கு யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை தேவனுக்கு நாம் ஜெபத்தில் சொல்ல வேண்டுமா?

குறிப்பிட்ட கட்சியும், கட்சியினரும் தான் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவானவர்கள் என்று நாம் கூறும் நிலையில், 1சாமுவேல்:16.7ல் மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்று தேவன், தீர்க்கத்தரிசி சாமுவேலுக்கு கூறுகிறார். அது நமக்கும் சேர்த்து தானே?

இந்த கட்சி சரியில்லை, அதன் தலைவர் சரியில்லை என்று நாம் விமர்சிக்கும் போது, உபாகமம்:17.15ல் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக் கடவாய் என்று எழுதப்பட்டுள்ளது. அப்படியென்றால், நம் சொந்த இஷ்டத்திற்கு ஒரு நபர் தான் வேண்டும் என்று எப்படி கேட்க முடியும்?

குறிப்பிட்ட மனிதன் அல்லது கட்சியினர் குறித்து தவறான காரியங்களை விமர்சிக்கும் போது, அது உண்மையா என்று கூட பலருக்கும் தெரியாது. இந்நிலையில் பிரசங்கி:10.20ல் ராஜாவை உன் மனதிலும் நிந்தியாதே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின்னணியில், அப்படி செய்தால், அதனால் வரும் சிக்கல்கள் குறித்தும் உள்ளது.
மேலும் தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி? என்று எண்ணாகமம்:23.8ல் வாசிக்கிறோம். அப்படியென்றால், நாட்டை ஆளுகிறவர்களைக் குறித்து, நாம் தப்பாக பேசலாமா?

நாட்டில் உள்ள தேவ ஊழியர்களையும், ஊழியங்களையும் அழிக்க குறிப்பிட்ட கட்சியினர் பூஜை செய்கிறார்கள் என்ற பேச்சு கூட வந்தது. அசுத்தாவியில் நிரம்பி, நாட்டை ஆளுகிறார்கள் என்று கூறியவர்களும் உண்டு.

தேவனுடைய ஊழியத்தை எந்தொரு மனிதனாலும் அழிக்க முடியாது. ரோமர்கள் முதல் இன்று வரை எத்தனையோ மனிதர்கள் முதல் ராஜ்ஜியங்கள் வரை அந்த முயற்சியில் தோற்றவர்கள் என்று வரலாறு கூறுகிறது.

மேலும், அசுத்தாவியில் ஆட்சி செய்வது குறித்த கேள்விக்கு, வேதத்தில் பதில் உண்டு. அசுத்தாவியுடன் இஸ்ரவேலை ஆண்டு வந்த சவுலை கொலை செய்ய, தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தாமல் விட்ட தாவீதை வேதம் சுட்டிக் காட்டுகிறது. அந்த தாவீது தான் தேவனுடைய இதயத்திற்கு ஏற்றவராக மாறுகிறார். ஆளுகிறவர்களை குற்றப்படுத்தும் நாம் தேவனுக்கு முன்பாக எப்படி இருப்போம்?

அப்படியென்றால், இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களாகிய நாங்கள் எதுவும் செய்யக்கூடாதா? என்று இதை படிக்கும் பலரின் இதயத்தில் கேள்வி எழும்பலாம். அதற்கு பதில் சொல்கிறேன்.

தேவன் நமக்கு வாழ கொடுத்துள்ள நாட்டின் தலைவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று ஜெபிப்போம். நாட்டை சீராகவும், சிறப்பாகவும் ஆட்சி செய்ய தலைவர்களுக்கு தகுந்த ஞானத்தை தாரும் என்று ஜெபிப்போம்.

நாட்டு தலைவர்கள் மூலம் எந்த பிசாசின் வல்லமையும் கிரியை செய்யக் கூடாது என்று திறப்பின் வாசலில் நின்று மன்றாடுவோம். நம்மால் முடிந்த உதவிகளை கண்முன் கஷ்டப்படும் மக்களுக்கு செய்வோம். இதை தான் வேதத்தில் உள்ள பரிசுத்தவான்களும் நமக்கு செய்து காட்டியுள்ளார்கள்.

அரசியல்வாதிகளை குற்றப்படுத்தி நாம் பேசுவதால், அவர்கள் திருந்த வாய்ப்பில்லை. ஆனால் அவர்களை தேவ கரத்தில் ஒப்புக் கொடுத்து ஜெபித்தால், அவரால் செய்யக்கூடாதா அதிசயமான காரியங்கள் உண்டோ?

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *