0 1 min 7 mths

தேவனுக்காக சிறிய அளவிலான ஊழியங்களை பலரும் செய்து வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் யாருடைய கண்களுக்கும் பெரிய விஷயமாக தெரிவதில்லை. இதனால் அவர்களை யாரும் கண்டுகொள்வதும் இல்லை.

இதனால் சிறிய ஊழியங்களை செய்யும் பலரும் வருத்தமும் துக்கமும் அடைகிறார்கள். தங்கள் ஊழியங்களால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை என்ற முடிவோடு, அதில் இருந்து பின்வாங்கி விடுகிறார்கள். இதே போன்ற ஒரு சந்தர்ப்பம் எனக்கும் ஏற்பட்டது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அனுபவித்தது:

சில ஆண்டுகளுக்கு முன் VBS நடத்துவதற்காக ஒரு ஊருக்கு சென்றிருந்தேன். 5 நாட்கள் தொடர்ந்து நடத்த வேண்டிய இருந்ததால், அறிமுகமான ஒருவரின் வீட்டில் தங்கி, தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, பல நிகழ்ச்சிகளை நடத்தினோம்.

ஒவ்வொரு நாள் கூட்டத்திற்கு செல்லும் முன்னும் தேவ சமூகத்தில் ஒப்புக் கொடுத்த நான், ஆண்டவரே இன்று எனக்கு ஏதாவது கற்றுத் தாரும். என்னை மறைத்து, நீர் செய்ய வேண்டியவற்றை பிள்ளைகள் வாழ்க்கையில் செய்யும் என்ற ஜெபத்தோடு சென்றேன்.

நீண்டநேரம் நின்று பல ஊழியங்களை செய்ததால், அதிக உடல் சோர்வு ஏற்பட்டாலும், அது எனக்குள் அதிக உற்சாகத்தை அளித்தது. ஒரு கட்டத்தில் தேவ அன்பினால் என் இருதயம் நிரம்பியதை உணர்ந்தேன்.

கடைசி நாளின் இறுதிக் கூட்டத்தை முடித்து, இறுதி ஜெபம் நடந்து கொண்டிருந்தது. அப்போது என்னோடு சேர்ந்து அந்த ஊழியத்தில் பங்கேற்ற பலரும், முன்னே வந்து நிற்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

அது குறித்து விசாரித்த போது, இந்த ஊழியத்தில் பங்கேற்ற அனைவரையும் முன்னுக்கு வருமாறு அழைத்துள்ளதாக கூறினார்கள். மேலும் ஒவ்வொருவரையும் பெயரை அழைத்து, நாம் செல்ல நேரமாகும் அல்லவா? என்றார்கள்.

அப்போது என் மனதிற்குள் இப்போது இங்கே இருந்து வெளியே போ. இல்லாவிட்டால், உன் ஊழியத்திற்கான பிரதிபலன் உனக்கு கிடைக்காது என்ற ஒரு சத்தம் கேட்டது. அப்போது நான் தூரத்தில் இருந்த ஒரு அறையை நோக்கி நடந்தேன். அதை யாருக்கும் நான் கூறவும் இல்லை.

சில நிமிடங்களுக்கு பிறகு, VBS கூட்டத்தில் பங்கேற்ற எல்லாருக்கும் பரிசுகளும், மரியாதையும் செய்யப்பட்டன. எந்த ஊழியத்திலும் பங்கேற்காத பலருக்கும் மரியாதை செய்யப்பட்டது. ஆனால் என் பெயரை யாரும் கூறி அழைக்கவும் இல்லை. என்னை யாரும் தேடவும் இல்லை.

அந்த அறையில் நின்றவாறு, மனதில் சிறிய அளவில் வருத்தம் ஏற்பட்டது. இவ்வளவு கஷ்டப்பட்ட என்னை அவர்கள் நினைக்கக்கூட இல்லையே என்று தோன்றியது. உடனே எனக்குள் ஒலித்த குரல் மீண்டும் என்னிடம் மீண்டும் பேசியது.

நீ யாருக்காக ஊழியம் செய்தாய்? எதற்காக உன் உழைப்பை செலுத்தினாய்? ஆண்டவருக்காக நீ செய்திருந்தால், அதன் பலனை மனிதர்களிடம் எதிர்பார்ப்பது ஏன்? என்று பேசியது.

உண்மைத்தான். நான் தேவனுக்காக ஊழியம் செய்துவிட்டு, மனிதர்களிடம் எப்படி அதற்கான மரியாதையும், வெகுமதியையும் எதிர்பார்க்கலாம்? என்னையும் நான் செய்த ஊழியத்தையும் அறிந்த தேவன் அதற்கான பலனை அளிப்பார் என்று நினைத்து கொண்டேன்.

இந்த முடிவுக்கு வந்தவுடன் எனக்குள் மிகப்பெரிய சமாதானம் உண்டானது. கடைசியாக, கிளம்பும் முன் குழந்தைகள் சிற்றுண்டி சாப்பிட்டு கொண்டிருந்த இடத்திற்கு சென்று, அவர்களிடம் பேசினேன். அப்போது, குழந்தைகள் பலரும் நான் கூறிய கதைகளையும், கருத்துக்களையும் குறித்து பேசி கொண்டிருந்தார்கள்.

அதை கேட்ட போது, என் மனதில் கேட்ட அந்த சத்தத்தின் அர்த்தத்தை புரிந்து கொண்டேன். நான் செய்த ஊழியத்திற்கான பலனை, என்னை அழைத்தவர்கள் தரவில்லை. அப்படி அவர்கள் எனக்கு தருவதால் எந்த பயனும் இல்லை. ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிள்ளைகளின் மனதில் அதன் தாக்கத்தை காண முடிந்தது. அதுதான் முக்கியம் என மகிழ்ச்சி அடைந்தேன்.

சிந்தித்தது:

நம்மை அழைத்த தேவனுக்காக நாம் செய்யும் ஊழியத்தின் அளவு மாறுபடலாம். அவை மற்றவர்களுக்கு சாதாரணமாக தெரியலாம். சிலர் அதை கண்டுகொள்ளாமலும் போகலாம். ஆனால் அந்த ஊழியத்தின் மூலம் எத்தனை பேர் தேவனிடம் திரும்புகிறார்கள் என்பது தான் முக்கியம்.

எனவே யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. மதிக்கவில்லை. என்னை அழைத்து கூட்டத்தில் பாராட்டவில்லை என்று வருத்தப்பட தேவையில்லை. மேலும் ஊழியத்தில் எதுவும் செய்தவர்களை எல்லாம் மேன்மையாக புகழ்ந்தும் பேசுகிறார்களே என்று வருத்தப்படவும் வேண்டாம். தேவனுக்காக செய்யப்பட்ட ஊழியங்கள் சிறிதோ, பெரிதோ அதற்கான பலனை, அவர் நிச்சயம் நமக்கு பலன் தருவார்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *