0 1 min 2 mths

கிறிஸ்தவர்கள் இடையே தேவ அன்பை பற்றி அறியாத ஊழியர்களோ, விசுவாசிகளோ கிடையாது எனலாம். எவ்வளவோ செய்திகளில் தேவ அன்பின் அருமை, மேன்மைகளை பற்றி கேட்டு இருக்கிறோம்.

ஆனால் அதை நம் வாழ்க்கையில் எந்த அளவுக்கு நடைமுறையில் கொண்டு வந்திருக்கிறோம் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. அன்பு சகலத்தையும் தாங்கும், சகிக்கும் என்று பெரிய பட்டியலையே தெரிந்து வைத்துள்ள நமக்குள் தேவன் அன்பு நடைமுறையில் இருந்தால், அதன் தாக்கம் நம் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தையே தரும்.

அனுபவித்தது:

தேவ அன்பை பற்றி பேசும் போது, கல்லூரி நாட்களில் நான் அனுபவித்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. என் சொந்த ஊரில் இருந்து ஏறக்குறைய 250 கிமீ தூரத்தில் உள்ள கல்லூரியில் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஹாஸ்டல் கட்டணம் செலுத்த வசதி இல்லாததால், அந்த ஊரில் உடன் படித்த மாணவர்களுடன் ரூம் எடுத்து தங்கியிருந்தேன். ஆனால் சில மாதங்களில் அந்த ஊரில் நிலவிய காலநிலைக்கு என் உடல் ஒத்துப் போகாமல், பலவீனம் அடைந்தேன்.
உடல் வெப்பம் அதிகரித்து, வாந்தி, மயக்கம் ஏற்படுவது வழக்கமாக இருந்தது. அதற்கான மருந்துகள் சாப்பிட்டாலும், அதிக காரம், உப்பு சேர்க்காமல் சாப்பிட டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள்.

அந்த ஊரில் ஒரு சிறிய வாடகை வீட்டில் ஏறக்குறைய 10 பேருடன் சபை நடத்தி கொண்டிருந்த ஒரு ஊழியரின் அறிமுகம் கிடைத்தது. நான் நன்றாக இருக்கும் போதே அந்த சபைக்கு தான் சென்று கொண்டிருந்தேன். நான் பலவீனப்பட்ட நிலையில் இருப்பதை பார்த்து, அவர்களின் வீட்டிலேயே என்னை தங்குமாறு சொன்னார்கள்.

அவர்களின் அன்பான கோரிக்கையை என்னால் மறுக்க முடியவில்லை. எனக்கு உடம்பு சரியில்லை என்பதால், அதிக காரம், புளிப்பு உடன் சாப்பிட்டு பழக்கம் கொண்ட அவர்கள், அவற்றை குறைத்து கொண்டார்கள்.

கர்த்தரை மட்டுமே சார்ந்து வாழும் ஒரு தேவ ஊழியரின் வீட்டில் எந்த மாதிரியான கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும் என்பதை அங்கு கண்கூடாக பார்த்து, நானும் அவர்களுடன் அவற்றை அனுபவிக்க முடிந்தது.

ஒரு நாள் நான் கல்லூரி முடித்து பசியாக வீட்டிற்கு வந்தேன். வழக்கமாக பாஸ்டர் அம்மா, நான் வந்தவுடன் எனக்கு சாப்பாடு போட்டு விடுவார்கள். ஆனால் அன்று எனக்கு உணவு தரவில்லை. மாறாக, என்னை உட்கார வைத்து விட்டு, அவர்களின் 2 மகன்களுக்கும் சாப்பாடு போட்டார்கள்.

என் வயிற்று பசியையும், மனதில் ஏற்பட்ட துக்கத்தையும் சகிக்க முடியவில்லை. மௌனமாக அவர்களுடன் உட்கார்ந்து கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் இருவரும் சாப்பிட்டு விட்டு வெளியே புறப்பட்டு சென்றார்கள்.

அவ்வளவு நேரம் என்னை கண்டுகொள்ளாமல் இருந்த பாஸ்டர் அம்மா, திடீரென சமையல் அறைக்கு ஓடி சென்று சாப்பாடு போட்டு கொண்டு வந்தார்கள். சாப்பாட்டிற்கு நான் ஜெபித்து முடிப்பதற்குள், கையில் ஒரு முட்டையை எடுத்து கொண்டு வந்து, என்னைய மன்னிச்சிடுப்பா என்று கூறி என் தட்டில் வைத்தார்கள்.

வீட்டுல ஒரு முட்டை மட்டும் தான் இருந்துச்சு. அவனுங்க முன்னாடி உனக்கு தந்தா, உங்கிட்ட பங்கு போட்டு எடுத்துக்குவாங்க. நீங்களும் குடுத்துடுவீங்க. அதுதான், அவங்க 2 பேருக்கும் முதல்ல சாப்பாடு போட்டு அனுப்பிட்டு, உங்களுக்கு சாப்பாடு போட்டேன் என்று சோகமாக கூறினார்.

இதை கேட்டவுடன் ஒரு நிமிடம் என் இருதயமே நின்றுவிட்டது. கண்களில் கண்ணீர் நிரம்பியது. என்னால் சரியாக சாப்பிடக் கூட முடியவில்லை. வீட்டில் இருந்த ஒரு முட்டையை சொந்த மகன்களுக்கு, நான் வருவதற்கு முன்பே கொடுத்திருக்கலாம். அதை செய்யாமல், அவர்கள் வீட்டில் தங்கி இருந்த எனக்காக, மறைத்து வைத்து தந்ததை என்னால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.

சிந்தித்தது:

நமக்குள் தேவ அன்பு நிரம்பி இருந்தால், மேற்கூறியது போல அது வெளிப்படும். இந்த அன்பை காட்ட பெரிய பணக்காரனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, இயேசு காட்டியது போன்ற அன்பை நானும் மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும்.

நான் தங்கியிருந்த அந்த ஊழியரின் வீட்டில் ஒரு நாளும் தேவ அன்பை பற்றி எனக்கு சொல்லி தரவில்லை. பிரசங்கத்தில் தேவ அன்பை பற்றிய பல வசனங்களை சுட்டிக்காட்டி போதிக்கவில்லை. ஆனால் அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.

இன்றும் என்னால் அந்த அளவுக்கு தேவ அன்பை மற்றவர்களின் மீது காட்ட முடியவதில்லையே என்ற ஏக்கம் அவ்வப்போது ஏற்படுவது உண்டு. வாய்ப்பு கிடைக்கும் போது, பிறருக்கு தேவ அன்புடன் கூடிய செயல்களை செய்ய முயற்சி செய்கிறேன்.

என் இருதயம் தேவ அன்பினால் நிரம்பி வழிகிறது என்று கூறுவதோடு நிற்காமல், இந்த செய்தியை படித்து அல்லது கேட்டு கொண்டிருக்கிற உங்களுக்கும் தேவ அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் ஏற்படுகிறதா? அப்ப இன்னிக்கே செயல்படுங்க.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *