0 1 min 1 mth

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; யாக்கோபு. 1:12

அப்போஸ்தலனாகிய யாக்கோபு, ஆதிக்கால ஆவிக்குரிய சபைகளுக்கு எழுதிய அறிவுரைகளில் இதுவும் ஒன்று. ஆதிக்கால கிறிஸ்துவர்களுக்கு மட்டுமின்றி, இன்று வேதம் படிக்கும் நமக்கும் பயன்படும் வகையில் பரிசுத்தாவியானவர் எழுதி வைத்துள்ளார்.

ஏனெனில் உண்மையான கிறிஸ்துவர்களுக்கு என்றுமே சோதனைகள் உண்டு. ஆனால் இந்த சோதனைகளை மேற்கொண்டு ஜெயம் பெறுவது தான் நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் இலக்கு.

உலகில் பிறக்கும் எந்த மனிதனாலும் சோதனைகள் இல்லாமல் வாழ முடியாது. கருப்பையில் இருக்கும் குழந்தை கூட பல சோதனைகளை கடந்த பிறகே வெளியே வர முடிகிறது. வெளியே வந்த பிறகு, மரிக்கும் வரை அதற்கு அடுத்தடுத்த சோதனைகள் காத்திருக்கிறது. ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் சோதனைகளின் அளவும், தன்மையும் மட்டும் மாறுகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை.

கிறிஸ்துவை பின்பற்றும் நாம் விசுவாசிகள் என்று அழைக்கப்படுகிறோம். ஆனால் நமக்குள் அவ்வப்போது ஏற்படும் விசுவாசக் குறைவால், சில சோதனைகளை மேற்கொள்ள முடியாமல் திணறுகிறோம். கிறிஸ்துவை விட்டு பின்மாறி செல்கிறோம்.

சோதனை என்றவுடன் – நமது பண தேவைகள், வியாதிகள், கஷ்டங்கள், குடும்ப பாரம் ஆகியவை தான் நமக்கு நினைவுக்கு வருகிறது. மேலும் வேதத்தில் சோதனை சகித்த மனிதனாக, எல்லாருக்கும் உடனே நினைவுக்கு வரும் நபர் யோபு தான்.

யோபு சோதனையை சகித்து அதில் வெற்றியும் பெற்றார். அவரைப் போல நாமும் சோதனையை மேற்கொள்ள வேண்டும். மேலே பார்த்த சோதனைகளை தவிர, சில மறைமுகமான சோதனைகளும் நம்மை தாக்கி செல்கின்றன. ஆனால் அவற்றை நாம் சில நேரங்களில் அறிவதில்லை.

நாம் வாசித்த வசனத்திற்கு அடுத்த வசனத்தை (யாக்கோபு.1.13) வாசித்தால், தேவன் ஒருவரையும் சோதிப்பதில்லை என்று வாசிக்கிறோம். எனவே, சோதனை என்றவுடன் வழக்கமாக நாம் குற்றப்படுத்தும் நபராகிய பிசாசு தான் அதைக் கொண்டு வருகிறான் என்பது தெளிவாகிறது.

வேதத்தில் சோதனைக்காரன் என்ற பெயரிலும் அழைக்கப்படும் பிசாசு, ஒரு மனிதனை சோதிக்க பல வழிகளை பின்பற்றுகிறான். அதில் யோபின் சோதனை, ஒரு வகை அவ்வளவுதான். இதை தவிர பல சோதனைகளை நாம் வேதத்தில் பார்க்க முடிகிறது.

நாம் பெறும் ஆசீர்வாதங்களே ஒரு சோதனையாக மாறுகின்றன. இன்றைய பெரும்பாலான கிறிஸ்துவ விசுவாசிகளுக்கு, இந்த பிசாசின் தந்திரம் பற்றி தெரிவதில்லை. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ஆசீர்வாதங்கள் எல்லாமே தேவனால் அளிக்கப்படுவது என்ற தவறான எண்ணம் கொண்டிருக்கிறார்கள்.

எனவே எது தேவனால் அளிக்கப்படும் உண்மையான ஆசீர்வாதம், எவை பிசாசினால் சோதனைக்காக அளிக்கப்படும் ஆசீர்வாதம் என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம்.

எனவே ஆசீர்வாதம் என்ற போர்வையில், நம் வாழ்க்கையில் எப்படியெல்லாம் பிசாசு போராட்டத்தை கொண்டு வருகிறான் என்பதை குறித்து வேத வசன அடிப்படையில் ஆராய்வோம்.

(பாகம் 2 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *