0 1 min 2 mths

அப்பொழுது மனோவா: …அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும், அதை எப்படி நடத்த வேண்டும் என்று கேட்டான். நியாயாதிபதிகள்:13.12

இஸ்ரவேல் மக்களை பெலிஸ்தரின் கையில் இருந்து விடுவிக்க இரட்சகராக தேவனால் எழுப்பப்பட்டவர் சிம்சோன். இந்த சிம்சோனின் பிறப்புக்கு முன்னமே, அவரை குறித்த காரியங்கள் தேவனால் அறிவிக்கப்படுகிறது.

மலடியாக இருந்த சிம்சோனின் தாய்க்கு, கர்ப்பம் உண்டாக போவது குறித்து தேவ தூதன் அறிவிக்கிறார். அதில் மகிழ்ச்சி அடைந்து திருப்திப்பட்டு கொள்ளாத சிம்சோனின் தந்தை, அந்த குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொள்கிறார்.

நம் வாழ்க்கையில் கூட, சில காரியங்கள் நடக்க வாய்ப்பே இல்லை என்று நாம் கருதி இருந்தவை, விரைவில் நடக்கும் என தேவனால் அறிவிக்கப்படும் போது, அதில் திருப்திப்பட்டு கொள்ளக் கூடாது.

என் நீண்டநாள் ஜெபத்தை தேவன் கேட்டார் என்று திருப்திப்பட்டு கொள்ளாமல், அதை நாம் எப்படி செய்ய வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். அப்போது அதன் முறைகளை தேவன் நமக்கு தெளிவாக வெளிப்படுத்தி தருவார்.

எடுத்துக்காட்டாக, தகுந்த வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நமக்கு, தேவன் ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைக்க செய்கிறார் என்று வைத்து கொள்வோம். உடனே தேவனுக்கு நன்றி செலுத்திவிட்டு, எழுந்து போக கூடாது.

நம் ஜெபத்தை கேட்டு தேவன் தந்த வேலையை செய்ய தேவையான கிருபையையும் ஞானத்தையும் தேவனிடம் கேட்டு பெற்று கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தேவனை விட்டு விலகி போகாமல், நம் ஆவிக்குரிய வாழ்க்கையை பாதுகாத்து கொள்ள பரிசுத்தாவின் அபிஷேகத்தை பெற்று கொள்ள வேண்டும்.

அப்போது நாம் செய்யும் பணிகளில் செழிப்பும் உயர்வும் காண முடியும். மேலும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியும் பாதிக்கப்படாது. இதன்மூலம் அலுவலகத்தில் உள்ள வேலைப் பளுவால், தேவனை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.

இன்றைய பல கிறிஸ்தவ வீடுகளிலும் பிள்ளைகளை தேவனுக்குள் நடத்த முடியவில்லை என்று புலம்புகிறார்கள். மேலும் விசுவாசிகளிடமும், தேவ ஊழியர்களிடமும் பிள்ளைகள் செய்யும் காரியங்களைப் பற்றி கூறி, அதற்காக ஜெபிக்குமாறு கூறுகிறார்கள். சிலர் பிள்ளைகளின் மீது உள்ள கோபத்தை அடித்தும் உதைத்தும் தீர்த்து கொள்கிறார்கள்.

ஆனால் பெரும்பாலான பெற்றோர், மனோவாவை போல பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும்? என்று தேவனிடம் ஜெபத்தில் கேட்பதில்லை. மேலும் எங்களின் ஆவிக்குரிய வாழ்க்கை, பிள்ளைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறதா? என்று யோசிப்பதும் இல்லை.

குழந்தைகளுக்காக தேவ சமூகத்தில் காத்திருந்து ஜெபித்தால், அவர்களை சரியான பாதையில் நடத்த தேவ ஆலோசனைகளைப் பெற முடியும். பிள்ளைகளை தேவ கரங்களில் ஒப்புக் கொடுத்து ஜெபித்தால், அவர்கள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்.

தேவன் வெளிப்படுத்திய காரியங்களில் கவனமாக இருந்த சிம்சோனின் பெற்றோர், சரியான பாதையில் குழந்தையை வளர்த்தார்கள். அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த வரை, சிம்சோன் வழி விலகி போகவில்லை. அவன் வளர்ந்த பிறகு, சொந்தமாக செயல்பட ஆரம்பித்த போது தான், கொஞ்சம் கொஞ்சமாக தேவனை விட்டு விலகினான்.

எனவே மனிதர்களிடம் ஆலோசனையைக் கேட்டு, தேவையில்லாத விபரீதமான முடிவுகளைப் பெறுவதை விட, தேவ சமூகத்தில் காத்திருந்து தகுந்த ஆலோசனையும் கிருபையும் பெற்றுக் கொள்வோம். அப்போது தேசத்திற்கே ஆசீர்வாதமாக நாமும் நம் குடும்பமும் மாறும் என்பதில் சந்தேகமில்லை.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற பரலோக பிதாவே, மனோவாவை போல எங்களின் நீண்டநாள் ஜெபங்களுக்கான பதில்களின் பின்னால் உள்ள உம்முடைய திட்டத்தையும் நோக்கத்தையும் ஜெபத்தில் கேட்டு அறிந்து கொள்ள கிருபை தாரும். உம் சித்தத்தை முழுமையாக செய்து, ஆசீர்வாதமாக வாழ உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *