
… அவன் நித்திரை விட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும் போல உதறிப் போட்டு வெளியே போவேன் என்றான். நியாயாதிபதிகள்:16.20
உலகிலேயே பலசாலியான மனிதன் என்று பெயர் பெற்றவன் சிம்சோன். அவனது வீழ்ச்சியை குறிக்கும் வசனத்தையே இன்று தியானிக்க உள்ளோம். ஏனெனில் இன்று நம்மில் பலருக்கும், சிம்சோனுக்கு அளிக்கப்பட்டது போன்ற பெரிய ஊழியத்திற்கான அழைப்பு கிடைத்துள்ளது. ஆனால் அதை சரியான முறையில் நம்மால் செய்ய முடியாமல் தவிக்கிறோம்.
இஸ்ரவேல் மக்களை பெலிஸ்தரின் கைகளில் இருந்து இரட்சிக்கும்படி தேவனால் நியமிக்கப்பட்டவன் இந்த சிம்சோன். இதற்காக அவனது பிறப்பில் இருந்தே, தேவனின் சிறப்பான பார்வை அவன் மீது இருந்தது. நம்மையும், தாயின் கருவிலேயே தேவன் கண்டு முன்குறித்து இருந்தார் என வேதம் கூறுகிறது.
சிம்சோனை வளர்ப்பதற்கு என சில சிறப்பான முறைகளை தேவன் கட்டளையிட்டு இருந்தார். அதேபோல நம்மையும் தேவன், ஏற்ற சமயத்தில் அழைத்து, நமக்கு விலையேறப்பட்ட இரட்சிப்பை அளித்தார். நமக்கு மாதிரியாக இயேசு உலகில் வாழ்ந்து காட்டி சென்றுள்ளார்.
சிம்சோனுக்கு அளிக்கப்பட்டிருந்த தேவ கட்டளையை மீறாத வரை, அவனை எதிரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இஸ்ரவேல் மக்களுக்கு பெரிய இரட்சிப்பிற்கான வழியாக அவன் விளங்கினான்.
நம்மை அழைத்த தேவன், உலகில் நல்லவர்களாக வாழ்ந்து, நாம் மட்டும் பரலோகத்திற்கு செல்ல வேண்டும் என்று அழைக்கவில்லை. நம்மால் நம்மை சுற்றிலும் உள்ள ஒரு பெரிய மக்கள் கூட்டமே, இரட்சிக்கப்பட வேண்டும், ஆவிக்குரிய வளர்ச்சியை அடைய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
தேவ கட்டளைகளை நாம் சரியான முறையில் பின்பற்றினால், அது நமக்கு மட்டுமின்றி, நம்மை சுற்றிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதத்தையும், விடுதலையையும் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதை தடுக்கும் எந்த பிசாசின் வல்லமையினாலும், நம்மை ஜெயிக்க முடியாது.
ஆனால் சிம்சோனை போல, தேவனையும் அவரது வார்த்தையையும் விட்டு விலகும் போது, கொஞ்சம் கொஞ்சமாக நாம் ஆவிக்குரிய பலத்தை இழக்கிறோம். சிம்சோன் ஒரே நாளில் முழுமையாக விழுந்ததாக நாம் கருதலாம்.
ஆனால் அவன் முழுமையாக விழும் முன்னமே, கொஞ்சம் கொஞ்சமாக தேவன் அளித்த கட்டளைகளை மீற ஆரம்பித்தான். சிம்சோனை குறித்த வேத பகுதிகளை நாம் ஆராய்ந்து படித்தால் விளங்கி கொள்ள முடியும்.
அவன் தவறான இடத்திற்கு சென்று, தவறான நபரிடம் சொல்லக் கூடாத காரியங்களை கூறி, தனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய ஊழியத்தையும், தனது பலத்தையும் இழந்தான்.
ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவனின் நடத்துதல் இல்லாமல், சுயசித்தம் செய்து வாழும் போது, சிம்சோன் செய்த அதே தவறை நாமும் செய்கிறோம். இதன்மூலம் நமது ஆவிக்குரிய பலத்தை இழந்து, ஊழியத்தையும் இழந்து, பிசாசிற்கு அடிமையாக மாறி விடுகிறோம்.
தவறான சேர்க்கையின் மூலம் சிம்சோனுக்கு ஏற்பட்ட உறக்கத்தின் விளைவாக, தேவன் தன்னை விட்டு விலகியது கூட தெரியவில்லை. அதேபோல நாம் உலக காரியங்களில் மதிமயங்கி வாழும் போது, தேவன் நம்மை விட்டு விலகுவது கூட, நம்மால் எளிதில் விளங்கி கொள்ள முடியாது. எதிரியான பிசாசு வந்து நம்மை பிடித்து அடிமையாக்கிய பிறகே, அதை உணர முடியும்.
எனவே சிம்சோனை போல, தேவனால் அளிக்கப்பட்டுள்ள இரட்சிப்பை சாதாரணமாக நாம் நினைக்க வேண்டாம். அவரது சித்தத்திற்கும், கட்டளைகளுக்கும் எப்போதும் கட்டுப்பட்டு, நமக்கு ஆவிக்குரிய தோல்வியை ஏற்படுத்தும் தவறான இடங்களையும், சந்தர்ப்பங்களை தவிர்ப்போம். தேவனுக்கு பயந்து, அவர் விரும்பும் ஊழியத்தை ஜெயமாக முடிப்போம்.
ஜெபம்:
எங்களை அளவில்லாமல் நேசிக்கும் தெய்வமே, சிம்சோனின் வாழ்க்கையின் மூலம் எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எங்களுக்கு அளிக்கப்பட்ட மேன்மையான ஊழியத்தை குறித்து எப்போது உணர்வு உள்ளவர்களாக வாழ்ந்து, எங்களை கொண்டு நீர் செய்ய நினைக்கும் காரியங்களை செய்து உமது ராஜ்ஜியத்தில் வந்து சேர உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், நல்ல பிதாவே ஆமென்.