0 1 min 7 mths

நாங்கள் எல்லாம் கிறிஸ்துவர்கள் என்று மார்தட்டி கொள்ளும் பலருக்குள்ளும் இன்று இயேசு கிறிஸ்துவின் சாயலை காண முடிவதில்லை. கிறிஸ்துவை ஒத்தவராக இருந்தால் தானே, கிறிஸ்தவன் என்று அழைக்க முடியும்.

அது தெரியாமல், பெயர் கிறிஸ்தவராக வாழும் பலரும், அவருக்கு ஊழியம் கூட செய்கிறார்கள் என்பது தான் வேதனையான விஷயம்.

பார்த்தது:

கோவையில் தெரிந்த ஒருவரின் வீட்டிற்கு செல்ல பஸ்சில் ஒரு ஊழியருடன் பயணித்தேன். முற்றிலும் அறிமுகம் இல்லாத கோவை நகரத்தில் இறங்க வேண்டிய ஸ்டாப் பெயரை சொல்லி விட்டு, அமர்ந்தோம். பஸ் நடத்துனரிடம் இடம் வந்தால் கூறவும் என சொல்லவில்லை. இந்நிலையில் நீண்டதூரம் பயணித்துவிட்ட எங்களுக்கு, இடத்தை கடந்திருப்போமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

நடத்துனரிடம் கேட்ட போது, நாங்கள் இறங்க வேண்டிய இடம் கடந்துவிட்டதாக கூறினார். மேலும் இடம் தெரியாவிட்டால், நீங்கள் கேட்க கூடாதா? என்று கேட்டுவிட்டார். நம் பெயரில் தப்பு இருக்கிறது மேற்கொண்டு என்ன சொல்வது என்று நினைத்துவிட்டு, சாரி சார் என்று கூறிவிட்டு, அடுத்த ஸ்டாப்பில் இறங்கி கொள்கிறேன் என்றேன்.

ஆனால் கூட இருந்த ஊழியருக்கு வந்தது கோபம். நீங்க எதுக்கு சாரி சொல்றீங்க. இவன் இடத்த கரெக்ட்டா சொல்லியிருந்தா இறங்கியிருக்கமாட்டோமா? என்று நடத்துனரிடம் சண்டை போட ஆரம்பித்தார். அதுவரை பொறுமையாக பேசிக் கொண்டிருந்த அவரும் கோபமடைந்தார்.

பிறகு இருவரும் மாறி மாறி பேசி கொண்டே செல்ல, கடுப்பான நடத்துனர், நடுவழியில் பஸ்சை நிறுத்தி இறக்கிவிட்டார். அப்போதும் கோபம் குறையாத ஊழியர், வசைப் பாடுவதை விட்ட பாடு இல்லை. பஸ்சில் இருந்த எல்லாரும் எங்களையே பார்க்க, இறங்கிய பிறகும், செருப்பை கழற்றி பஸ் மீது வீசி பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தினார்.

வெள்ளை சட்டை, கையில் பைபிள் என்று பார்ப்பதற்கு கிறிஸ்தவ போதகர் என்று தெளிவாக தெரியும் வகையில் வந்திருந்த எங்களை, பஸ்சில் இருந்தவர்கள் மட்டுமின்றி, அந்த சாலையில் சென்ற அனைவரும் ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பித்தனர். எனக்கு அவமானம் தாங்க முடியாமல், தலைகுனிந்தவாறு நடந்தேன்.

ஆனால் உடன் வந்த ஊழியரோ, நாங்கள் செல்ல வேண்டிய வீடு வரும் வரை, பஸ் நடத்துனரை சபித்து கொண்டே வந்தார். அப்படியொரு கோபம் அந்த கிறிஸ்துவ போதகர் என்பவருக்கு…

கேட்டது:

இது இப்படி என்றால், எனது நண்பர் ஒருவர் தந்தையுடன் ஞாயிறு ஆராதனை முடித்து கொண்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது டூவீலரில் சாலை ஒன்றை கடக்க முயற்சித்துள்ளார். அந்த நேரத்தில் அசுர வேகத்தில் வந்த ஒரு பைக், அவர்களின் வாகனத்தில் மோதி, சாலையோரத்தில் சென்று விழுந்துள்ளது.

இதில் என் நண்பரின் தந்தைக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. ஆனால் சாலையோரத்தில் சிராய்த்து கொண்டே சென்ற பைக்கில் வந்த இருவருக்கும், ஆங்காங்கே காயம் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் தப்பு இருந்தது. இதை பைக்கை ஓட்டி வந்தவர் ஒத்து கொண்டார். இதனால் என் நண்பரும் மன்னிப்பு கேட்டார்.

ஆனால் பைக்கில் பின்புறம் அமர்ந்த வந்தவர், ஒத்து கொள்ளவில்லை. நண்பரும் அவரது தந்தையும் தான் இதற்கு காரணம், எனவே மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஆகும் செலவை ஏற்க வேண்டும் என்று சாலையில் நின்று கத்தி கூச்சலிட ஆரம்பித்தார்.

மேலும் பைக்கில் வந்த இருவருக்கும் புதிய உடைகளை வாங்கி தர வேண்டும் கேட்டார். எவ்வளவு எடுத்து கூறியும் ஏற்காத அவரை, வேறு வழியில்லாமல், மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவசர சிகிச்சையில் சேர்த்து, மருத்துவ செலவுகளை ஏற்று கொண்டதோடு, புதிய உடைகளையும் வாங்கி கொடுத்தார் நண்பர்.

இத்தனைக்கும் அவர்களுக்கு 10 நிமிடம் கூட சிகிச்சை அளிக்கப்படவில்லை. லேசான காயத்திற்கு மருந்து மட்டுமே அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு பைக்கில் வந்தவர்களிடம் விசாரித்த போது, பைக் ஓட்டி கொண்டு வந்தவர் ஒரு சபை விசுவாசி என்றும், பின்னால் உட்கார்ந்து வந்தவர், அந்த சபையின் ஊழியர் என்றும், வேறொரு இடத்தில் ஊழியத்திற்கு அவசரமாக சென்ற போது, இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் கூறியுள்ளார்.

சிந்தித்தது:

மேற்கூறிய இரு சம்பவங்களையும் கூறியதன் நோக்கம் யாரையும் குற்றப்படுத்த வேண்டும் என்ற எண்ணதோடு அல்ல. மாறாக, தேவனுடைய ஊழியத்தை செய்கிறோம் என்று கூறி கொண்டு, பொது இடங்களில் நமக்கு நிகழும் சில பிரச்சனைகளுக்கு, பெரும் கூச்சலும் ரகளையிலும் ஈடுபட்டால், அது தேவனுடைய நாமத்திற்கு அவகீர்த்தியை ஏற்படுத்தும் என்பதை கூற விரும்புகிறேன்.

முதல் சம்பவத்தில், அந்த பஸ்சில் வந்த பயணிகளும் சரி, சாலையில் சென்றவர்களும் சரி, போதகரின் நடவடிக்கையை கண்டு தேவனை தூஷிக்கமாட்டார்களா? 2வது சம்பவத்தில் ஊழியரை அழைத்து வந்த அந்த விசுவாசிக்கு எப்படிப்பட்ட எடுத்துக்காட்டை அவர் காட்டியுள்ளார்? அல்லது மருத்துவமனையில் இருந்தவர்கள் கிறிஸ்தவர்களை என்னவென்று நினைப்பார்கள்?

இதுபோல பல சம்பவங்கள் அன்றாடம் நடந்து வருகின்றன. எனவே நாம் வாயில் கிறிஸ்தவர்கள் என்று சொல்வதை விட, நடமாடும் கிறிஸ்துவாக மாறினால் மட்டுமே, அதனால் பயனுள்ளது. நமது ஒவ்வொரு நடவடிக்கையின் இடையிலும், நாம் நம்மிடமே கேட்க வேண்டிய ஒரு கேள்வி “நான் ஒரு கிறிஸ்தவனா?

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *