0 1 min 3 weeks

பைபிளில் எண்ணற்ற வசனங்களை, தேவனின் வாக்குறுதிகள் அல்லது வாக்குத்தத்தங்களாக எடுத்து கொள்கிறோம். அதுவும் புத்தாண்டு கூட்டங்களில், இது போன்ற வசனங்களுக்கு தனி மவுசு உண்டு. இந்நிலையில், நாம் ஆசையாக கூறும் பல வாக்குத்தத்தங்கள், நம் வாழ்க்கையில் ஆசீர்வாதத்தையும், செழிப்பையும் உண்மையில் கொண்டு வருகிறதா? என்று கேட்டால், பலரும் ‘இல்லை’ என்று தான் கூறுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, உபாகமம்: 28 ஆம் அதிகாரத்தின் முதல் 14 வசனங்களை பெரும்பாலான கிறிஸ்துவர்கள் பல இடங்களில் பயன்படுத்துகிறார்கள். அதிலும் உபாகமம்: 28.14-ல் வரும், “கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்” என்ற வசனம், பெரும்பாலான போதகர்களின் வாக்குத்தத்த அட்டைகள், காலண்டர்களில் காணப்படுகிறது. ஆனால் உண்மையில் நாம், எல்லா இடங்களிலும் தலையாக இருக்கிறோமா? என்றால், இல்லை. பல இடங்களில் நாம் இன்னும் வாலாக தான் இருக்கிறோம்.

சிந்தித்தது:

அப்படியென்றால் அந்த வாக்குத்தத்தம், நம் வாழ்க்கையில் ஆசீர்வாதங்களை கொண்டு வர, ஏதோ ஒரு தடை காணப்படுவதை அறியலாம். அதை குறித்து சற்று ஆராய்வோம்.

பைபிளில் காணப்படும் ஆசீர்வாத வாக்குறுதிகளை பெரும்பாலும், நாம் முழுமையாக படிப்பதில்லை. அதுவே அவை நம் வாழ்க்கையில் பலிக்காமல் போவதற்கான முதல் காரணமாகும். மேலே எடுத்துக்காட்டிற்கு எடுத்துக் கொண்ட உபாகமம்:28.14 வசனத்தை முழுமையாக படித்தால், அந்த வசனத்தின் துவக்கத்தில் ஒரு நிபந்தனை தேவனால் விதிக்கப்படுவதை காணலாம்.

என்னவென்றால், மோசேக்கு தேவனால் அளிக்கப்பட்டிருக்கிற எல்லா கட்டளைகளையும் கைகொண்டு, அதன்படி நடந்தால் தான், தேவன் நம்மை வாலாக்காமல் தலையாக்குவார். அவருக்கு நாம் எந்த விதத்திலும் கீழ்படியாத நிலையில், நாம் எப்படி அவரிடம் ஆசீர்வாதத்தை எதிர்பார்க்க முடியும்?

நாம் இருக்கும் சூழ்நிலைகளை அறிந்து தேவன் உதவ வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அதற்கு தேவன் நம்மிடம் சில காரியங்களை எதிர்பார்க்கிறார் என்பதை மறந்து விடுகிறோம். இதனால் வாக்குத்தத்தம் மூலம் நமக்கு அளிக்கப்பட்டுள்ள முழுமையான ஆசீர்வாதங்கள் நம்மிடம் வந்து சேருவதில்லை.

இது மேற்கூறிய வாக்குத்தத்த வசனத்தில் மட்டுமல்ல, வேதத்தில் நமக்கு ஆசீர்வாதமாக தேவனால் அளிக்கப்பட்டிருக்கிற எல்லா வசனங்களின் முன்புறத்திலோ அல்லது பின்புறத்திலோ அதற்கான நிபந்தனை அளிக்கப்பட்டிருப்பதை காணலாம்.

இதில் இன்னொரு காரியத்தையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. நமக்கு ஆசீர்வாதம் கிடைக்க, சில நிபந்தனைகளோடு அளிக்கப்பட்டுள்ள இந்த வாக்குத்தத்தங்களை செய்யாமல் விட்டால், ஆசீர்வாதம் பெற முடியாது என்பதோடு நிற்காமல், சில தேவையற்ற சாபங்களையும் வாங்கி கட்டி கொள்ள வேண்டியுள்ளது.

மேலே கூறியது போல உபாகமம்:28 ஆம் அதிகாரத்தின் முதல் 14 வசனங்களை படிக்கும் பல கிறிஸ்தவர்களும், அதற்கு பிறகு வரும் சாபத்திற்கான வசனங்களை படிப்பதில்லை. அதை கண்டுகொள்வதும் இல்லை. அந்த அதிகாரத்தில் ‘ஆசீர்வாதம்’ அளிக்கும் வாக்குத்தத்தங்களாக, 14 காரியங்களை மட்டுமே வாசிக்க முடிகிறது.

ஆனால் தேவன் நம்மிடம் விரும்பும் நிபந்தனைகளை செய்யாமல் விட்டால், 28 சாபங்கள் நமக்கு கிடைக்கும் என்பதை 15-வது வசனத்திற்கு பிறகு வரும் வசனங்களை படித்தால் அறியலாம். இதில் இருந்து தேவ ஆசீர்வாதத்தை பெற நாம் தயாராக இல்லாவிட்டால், அதற்கு இரட்டிப்பான சாபத்தை பெறுவோம் என்பது விளங்கும்.

அதேபோல சில ஆசீர்வாத வாக்குத்தத்தங்களில், எந்த நிபந்தனையும் இல்லாதது போல தனியாக இருப்பதையும், வேதத்தில் காணலாம். எடுத்துக்காட்டாக, எண்ணாகமம்: 23.23 வசனத்தை எடுத்து கொண்டால், “யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை. இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை” என்று மட்டுமே இருக்கும். அதனால் இதற்கு எந்த நிபந்தனையும் இல்லை என்று நாம் நினைக்க முடியாது. ஏனெனில் அந்த வசனத்தில் நிபந்தனை மறைவாக வைக்கப்பட்டுள்ளது.

நமக்கு எதிராக செய்யப்படும் மந்திரவாதம், பில்லிசூனியம் போன்ற பிசாசின் சக்திகள் செயல்படாமல் இருக்க வேண்டுமானால், நாம் யாக்கோபு (தேவனிடம் தன் நிலையை ஒப்புக் கொண்டவன்), இஸ்ரவேல் (தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்தவன்) போல இருக்க வேண்டும்.

இதேபோல ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் போன்ற தீர்க்கத்தரிசன புத்தகங்களில் கூட பல இடங்களில், வாக்குத்தத்த வசனங்களில் தேவனுடைய நிபந்தனைகள் மறைவாக வைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

எனவே நம் வாழ்க்கையில் ஒரு சில ஆசீர்வாத வாக்குத்தத்தங்களை வாயில் கூறுவதோடு மட்டும் நில்லாமல், அதை பெறுவதற்கு தேவன் அளித்துள்ள நிபந்தனைகளையும் பின்பற்றுவோம். தமது பிள்ளைகளால் செய்ய முடியாத கடினமான காரியங்களை நம் தேவன் கேட்பதில்லை. எனவே எளிமையான அவரது வசனத்திற்கு ஒப்புக் கொடுத்து, ஆசீர்வாத வாக்குத்தத்தங்களின் நிறைவேறுதலை நம் வாழ்க்கையில் காண்போம்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *