
மனுஷனுக்கு செம்மையாய் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள். நீதிமொழிகள்:16.25
ஒவ்வொரு மனிதனுக்கும் எண்ணங்களில், சிந்தைகளில் வேறுபாடுகள் இருப்பதை தவிர்க்க முடியாது. ஆனால் நமக்கு இருக்கும் சொந்த விருப்பங்களுக்கு ஏற்ப, வேத வசனங்களின் அர்த்தங்களை மாற்ற முயற்சி செய்யக் கூடாது. தேவனுடைய வசனங்களுக்கு ஏற்ப நாம் தான் மாற வேண்டும்.
ஏனெனில் இன்று தேவனுடைய வசனத்தை பலரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எடுத்துக் கொண்டு போதிக்கிறார்கள். இதனால் சத்தியம் கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்படுகிறது.
சமீபத்தில் ஒரு போதகரோடு பேசினேன். அவர் கூறிய ஒரு காரியம் என்னை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்தது. அதாவது பரலோகம், நரகம் என்பதெல்லாம் எதுவும் கிடையாது. கடவுள் மனிதனை பயப்படுத்தவே, பைபிளில் அப்படி குறிப்பிட்டுள்ளார் என்று கூறினார்.
அவர் கூறியதில் 100% உண்மையில்லை. ஏனெனில் பைபிளின் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை வாசித்தால், அதிகமாக காணப்படுவது பரலோகம் மற்றும் நரகத்தை குறித்த செய்திகள் தான். தேவன் தன்னோடு மனிதனை வைத்துக் கொள்ள விரும்பி துவங்கும் பைபிள், அது நிறைவேறியதாக முடிகிறது. தியான வசனத்தில் இதற்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மனிதனுக்கு நல்லதாக தோன்றும் வழிகள், அவனுக்கு மட்டுமே நல்லதாக இருக்கும். ஆனால் உண்மையில் அவை மரண வழிகளாக இருப்பது தேவனுக்கு மட்டுமே தெரியும். எனவே வேத வசனம் காட்டும் வழிகளை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும்.
அதற்காக தேவ ஊழியர்கள் கூறுவது எல்லாமே தவறு என்று நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் கூறும் காரியங்களில் நமக்கு சந்தேகம் எழுந்தால், அதற்கான விளக்கத்தை கேட்டு, வேத வசன அடிப்படையில் சரியாக இருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் வேத வசனம் குறிப்பிடுவது போன்ற கள்ள உபதேசங்களும், கள்ள போதகர்களும், இந்த கடைசி காலத்தில் அதிகமாக உலவி வருகிறார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை, தங்கள் சவுகரியத்திற்கு ஏற்ப திருத்தியும் மாற்றியும் கூறுகிறார்கள். ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.
இது குறித்து யோவான்.5.39 வசனத்தில் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே என்று இயேசுவே கூறுகிறார். அதாவது, நாம் கேட்கும் வசனங்களை குறித்து நாம் ஆராய்ந்து அறிந்தால், அதில் நித்திய ஜீவன் கிடைக்கும்.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டை, அப்போஸ்தலர்.17.11 வசனத்தில் குறிப்பிட்ட பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக் கொண்டு, வேத வாக்கியங்களை தினந்தோறும் ஆராய்ந்து பார்த்தார்கள் என்று பவுல் குறிப்பிடுகிறார். இதனால் அவர்கள் நற்குணசாலிகளாக மாறினார்கள் என்கிறார்.
பரிசுத்த வேதாகமத்தில் அதிக புத்தகங்களை எழுதியவர் என்ற பெருமையை பெற்றவர் பரிசுத்த பவுல். அவர் பேசிய வாக்கியங்களையே ஆராய்ந்து பார்த்துள்ளார்கள்.
அப்படியென்றால், இந்த காலத்தில் வாழும் எந்த பெரிய தேவ ஊழியர்களின் வார்த்தைகளையும் வேத வசனத்தின்படி எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்ப்பதில் எந்த தவறுமில்லை என்று நினைக்கிறேன். இதன்மூலம் நம் ஆவிக்குரிய வளர்ச்சி அதிகரிக்குமே தவிர, குறைய வாய்ப்பில்லை.
எனவே நாம் கேட்கும் வேத வசனங்களை, யார் பேசுகிறார்? அவரது எந்த சபை, அணிந்துள்ள உடை, செய்யும் பாவனை ஆகியவற்றை கவனிப்பதை தவிர்த்து, என்ன பேசுகிறார் என்பதை மனோவாஞ்சையோடு கேட்போம். கேட்ட வார்த்தைகளை, வேத வசனங்களோடு ஒப்பிட்டு பார்த்து, நற்குணசாலிகளாக மாறுவோம்.
வேத வசனத்தை ஆராய்ந்து பார்க்காமல், கேட்கும் காரியங்களை அப்படியே ஏற்றுக் கொண்டால், சில நேரங்களில் தவறான அல்லது கள்ள உபதேசங்களை நம்மால் கண்டறிய முடியாமல் போகலாம். மேலும் பெயரளவில் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து, தேவ சித்தத்தை விட்டு விலகி செல்லவும் வாய்ப்புள்ளது.
இதனால் தேவன் நமக்கு காட்டும் ஜீவனுக்கான வழியில் இருந்து விலகி, பெயரளவில் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து, மனிதர்களுக்கு செம்மையாக தோன்றும் மரண வழியில் பயணிக்க நேரிடும்.
ஜெபம்:
எங்களை நேசிக்கும் அன்பான தெய்வமே, எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். தேவ வசனத்தை எங்கள் சொந்த இஷ்டத்திற்கு ஏற்ப புரிந்து கொள்ளாமல், கேட்கும் வசனங்களை ஆராய்ந்து பார்த்து, அதற்கு ஏற்ப நாங்கள் மாற, எங்களுக்கு உதவி செய்யும். உமது வசனம் காட்டும் மெய்யான கட்டளைகளை சரியாக பின்பற்றி, ஜீவனுக்கு போகும் வழியில் தொடர்ந்து பயணிக்க கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், நல்ல பிதாவே, ஆமென்.