
குதிரை யுத்த நாளுக்கு ஆயுத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும். நீதிமொழிகள்: 21.31
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பது எல்லா மனிதர்களுக்கும் உள்ள ஒரு தவிர்க்க முடியாத ஆசை. அதற்காக சிலர் போராடுகிறார்கள், சிலர் நம்மால் முடியாது என்று ஒதுங்கி கொள்கிறார்கள். இந்நிலையில் வெற்றி பெறுவதற்கு பரிசுத்த வேதாகமம் கூறும் வழியை மையமாக கொண்டதே இன்றைய தியான வசனம்.
மிருகங்களில் வேகமாக ஓடும் ஆற்றல் கொண்டது குதிரை. முன் காலங்களில் ஒரு போர் களத்தில் படைவீரர்கள் வேகமாக பயணித்து சென்று போர் புரிய, படைத்தளபதிகள் முன்னே சென்று படையை வழி நடத்த, போர் குறித்த செய்திகளை தூதர்கள் மூலம் மன்னருக்கு அனுப்ப, பக்கத்து நாட்டின் நிலை குறித்து ஒற்றர்கள் செய்தி கொண்டு வர என பல வகைகளில் குதிரைகள் பயன்பட்டன.
இந்நிலையில் இன்று நமது வாழ்க்கையே ஒரு போர் களமாக மாறியுள்ளது. தினமும் குதிரைகளை போல வெற்றியை தேடி வேகமாக ஓடி கொண்டே இருக்கிறோம். இந்த பயணத்தில் எவ்வளவோ பிரச்சனைகள், துன்பங்கள், நெருக்கங்களை சிந்திக்கிறோம்.
அந்த நேரங்களில் சுயமாகவோ அல்லது நமது நண்பர்கள், உறவினர்கள் என்று மற்றவர்களையோ நம்பி போராடுகிறோம்.
ஆனாலும் நாம் எதிர்பார்க்கும் வெற்றியை அடைய முடிவதில்லை. சில நேரங்களில் வெற்றி கிடைத்தாலும், அதனோடு கூட தேவையற்ற விளைவுகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. இதில் மனம் உடைந்து போகும் சிலர், தேவன் மீது கோபம் கொண்டு, அவரை விட்டு விலகி சென்று விடுகிறார்கள்.
இந்நிலையில் நாம் வெற்றி பெற வேதம் ஒரு வழியை காட்டுகிறது. அதுவே கர்த்தர் தரும் வெற்றி அல்லது ஜெயம். நமக்கு வரும் போராட்டங்களில், நாம் கர்த்தரை சார்ந்து வாழ பழகி கொள்ள வேண்டும். அப்போது அவர் சகலத்தையும் நமக்கு ஜெயமாக மாற்றி தருகிறார்.
தேவனை மறந்துவிட்டு, சுயமாக முயற்சி செய்வதும், மற்றவர்களின் மீது நம்பிக்கை வைப்பதுமே நமது தோல்விகளுக்கான ஒரு காரணம். நமக்கு தன்னம்பிக்கை தேவைதான். ஆனால், அதுவே தேவன் மீதான நமது நம்பிக்கையை கெடுத்து விடுவதாக அமைந்து விடக்கூடாது.
எனவே தேவன் மீதான நமது நம்பிக்கையை ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொள்ள வேண்டும். மேலும் தேவன் நமக்கு சகலத்தையும் நன்மைக்காகவே செய்கிறார் என்ற விசுவாசத்தையும் தளர விடக் கூடாது.
தேவன் மீது விசுவாசத்தை வைத்து கொண்டு நாம் செய்யும் எந்த கிரியைகளும் தோல்வியை சந்திக்காது. அது வெற்றியை மட்டுமே பெற்று தரும் என்பதில் சந்தேகம் இல்லை. மரணத்தையே வென்ற இயேசுவை போல நாமும் எல்லாவற்றிலும் பூர்ண ஜெயம் கொண்டவர்களாக மாறுவோமாக.
ஜெபம்:
எங்களை நேசிக்கிற அன்பான தெய்வமே, எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எங்கள் வாழ்க்கையில் வந்த போராட்டங்களில் பலர் மீதும் நம்பிக்கை வைத்து தோல்விகளை சந்தித்தோம். சகலத்தையும் ஜெயம் கொண்ட உம் மீது நம்பிக்கை வைத்து இனி வரும் நாட்களில் ஜெயமெடுக்க கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் பிதாவே, ஆமென்.