0 1 min 4 mths

நீதிமான் ஏழு தரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள். நீதிமொழிகள்: 24.16

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டவர்களின் பாவங்கள் கழுவப்பட்டு, நீதிமான்களாக மாற்றப்படுகின்றனர். இரட்சிக்கப்பட்ட துவக்க நாட்களில் தேவ அன்பினால் நிறைந்து காணப்படும் பலருக்கும், குறிப்பிட்ட காலங்களை கடக்கும் போது பழைய சில பாவங்களின் எண்ணங்களும், சிந்தைகளும் வந்து தொல்லை கொடுக்கின்றன.

இதில் பெரும்பாலானோர் பழைய பாவத்தில் தவறி விழுகின்றனர். ஆனாலும் இரக்கமுள்ள தேவன், அந்த பாவங்களை குறித்து உணர்த்தி, புதுப்பிக்க வாஞ்சிக்கிறார். ஆனால் அந்த தெய்வீகமான சத்தத்தை எத்தனை பேர் புரிந்துக் கொள்கிறார்கள் என்பது தான் கேள்வி.

ஏனெனில் சமீபகாலமாக எங்களுக்கு வரும் பல ஜெபக் குறிப்புகளில், தாங்கள் பெரும் பாவக் கட்டில் சிக்கி தவிப்பதாகவும், தற்போது பின்மாற்றத்தில் இருப்பதால் பாவ சிந்தைகள், எண்ணங்களை மேற்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் அது போன்ற எண்ணங்கள், சிந்தைகள் தங்களுக்கு வரக் கூடாது என்றும் ஜெபிக்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.

ஒரு காரியத்தை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நம்மை பாவத்தில் இருந்து மீட்டு, நீதிமான்களாக மாற்றியவர் தேவன். ஆனால் நாம் இந்த உலகில் உயிரோடு இருக்கும் காலம் வரை, நமது பழைய பாவ மனிதன் நம்மோடு போராடிக் கொண்டே தான் இருப்பான்.

இதனால் சில நேரங்களில் ஆவிக்குரிய வாழ்க்கையில் நமக்கு வீழ்ச்சிகள், தோல்விகள் ஆகியவை நேரிடலாம். அதற்காக தேவன் அளித்த இரட்சிப்பை முழுவதுமாக இழந்து, பின்மாற்றத்திற்குள் தள்ளப்பட்டதாக எண்ணம் கொள்ளக் கூடாது.

நீங்கள் பாவத்தில் சிக்கி, விழுந்திருப்பதாக உணர்த்துவதே தேவன் தான். எனவே அந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்பதை சிந்திக்க வேண்டும். நாம் சாலையில் செல்லும் போது கால் தவறி கீழே விழுகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். உடனே, “நான் விழுந்துவிட்டேன், அதனால் இங்கேயே படுத்துக் கொள்கிறேன் என்று கூற முடியுமா?” இல்லை. உடனே எழுந்து நிற்கிறோம் அல்லவா.

அதுபோல தான் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் நீங்கள், ஏதாவது ஒரு பாவத்தில் விழுந்துவிட்டால், என்னை யாராவது தூக்கி விடுங்கள் என்று மற்றவர்களின் ஜெபத்தையும் உதவியையும் எதிர்பார்க்கக் கூடாது. அந்த பாவத்தில் இருந்து எழுந்து, நம் வீழ்ச்சிக்கான காரணத்தை ஆராய வேண்டும். இதன்மூலம் அடுத்த முறை அந்த ஆவிக்குரிய வீழ்ச்சியை தவிர்க்க முடியும்.

மேலும் நம் தியான வசனத்தில், ஏழு தரம் விழுந்தாலும் எழுந்து நிற்பவன் தான் நீதிமான் என்றும், அங்கேயே கிடப்பவன் துன்மார்க்கன் என்றும் கூறுவதை கவனியுங்கள். எனவே நாம் பாவத்தில் இருப்பதாக உணர்த்தப்பட்டால், உடனே அதை உதறிவிட்டு எழுந்திருப்போம். தேவனிடம் மன்னிப்புக் கேட்டு, இரட்சிப்பின் அனுபவத்தை புதுப்பித்து கொள்வோம். பாவத்திலேயே தொடர்ந்து விழுந்து கிடக்கும் அனுபவத்தை தவிர்ப்போம்.

நாம் விழுந்த பாவத்திலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே, பிசாசு நமது விழுகையை பெரிய காரியமாக காட்டுகிறான். மேலும் நீ விழுந்துவிட்டாய், அவ்வளவு தான். இப்படிப்பட்ட நீ போய் ஜெபிக்க போகிறாயா? தேவனிடம் எந்த முகத்தை வைத்து கொண்டு மன்னிப்பு கேட்க போகிறாய்? என்றெல்லாம் பிசாசு ஆலோசனைகளை தருவான்.

ஆனால் அந்த விழுகையில் இருந்து எழுந்து திரும்பவும் தேவனுக்காக எழும்பி பிரகாசிக்கவே, தேவன் விரும்புகிறார். எனவே, நாம் பாவ சுபாவங்களில் இருந்து திருந்த, மற்றவர்களின் ஜெபத்தை எதிர்பார்க்காமல், நாம் தேவனிடம் நேரடியாக கேட்டு, இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற்று கொள்வோம்.

பாவ வல்லமைகளோடு போராட, தேவையான தேவ பலத்தை நாமே ஜெபித்து பெற்று, பாவத்தோடு நாமே போராடுவோம். பிசாசு அளிக்கும் பின்மாற்றத்திற்கு நேராக நடத்தி, சோர்ந்து போக செய்யும் ஆலோசனைகளைக் கேட்பதை தவிர்த்து, தேவனிடம் திரும்புவோம். அப்போது தேவனும் நம்மிடம் திரும்பி, விழுந்து போன நம்மை மீண்டும் எடுத்து நாம் இருக்க வேண்டிய இடத்தில் நிலைநிறுத்துவார்.

மேலும் ஊழியர்கள், விசுவாசிகள் என்று மற்றவர்கள், நமக்காக ஜெபத்தில் போராடி பெற்று தரும் ஆவிக்குரிய வெற்றிகளும் ஆசீர்வாதங்களும் நீண்டகாலத்திற்கு நீடிக்காது என்பதை நினைவில் வைத்து கொள்வோம். அதை நம்பி கிறிஸ்துவ வாழ்க்கையில் பயணிப்பது சிக்கலை மட்டுமே தரும்.

ஜெபம்:

அன்புள்ள தேவனே, எங்களுக்கு அளித்த விலையேறப்பட்ட இரட்சிப்பிற்காக ஸ்தோத்திரம். ஆனால் சில சந்தர்ப்பங்களில் பாவங்களில் தவறி விழுந்து, மற்றவர்களின் உதவியை நாடினோம். தேவ சமூகத்தில் எழுந்து நின்று காத்திருக்க வேண்டும் என்று எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எனவே இன்று முதல் ஆவிக்குரிய புதிய பலத்தை பெற்று, பாவத்தை எதிர்த்து போராட உதவி செய்யும், அதற்கான ஆலோசனைகள் தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *