0 1 min 6 mths

இன்றைய கிறிஸ்தவர்கள் இடையே பரிசுத்தாவியை குறித்த பல தவறான எண்ணங்கள் உலா வருகின்றன. இதில் சில காரியங்கள் பாரம்பரியமான பழக்கமாகவே மாறிவிட்டன எனலாம்.

இவற்றை பைபிள் அடிப்படையில் வைத்து பார்க்கும் போது, நாம் செல்லும் பாதை சரியானதா? என்பதை அறிந்து கொள்ளலாம். யாரையும் குற்றப்படுத்தி வருத்தத்தை ஏற்படுத்துவது எங்கள் நோக்கமல்ல, சரியான வழியை காட்ட விரும்புகிறோம்.

பார்த்தது:

இன்றைய கிறிஸ்தவ சபைகளிலும், கூட்டங்களிலும் பரிசுத்தாவியின் அபிஷேகம் குறித்து பொதுவாக போதிக்கப்படுவதை காண முடிகிறது. ஆனால் பரிசுத்தாவியின் வல்லமையை விசுவாசிகளின் மீது இறங்க செய்ய, இசை கருவிகளுடன் கூடிய பாடல் பாடப்படுகிறது.

இதிலும் சிலர் பாடல்கள் தொடர்ந்து வேகமாக பாடி, இசைக் கருவிகளை வேகமாக இசைக்கும் போது தான், பலருக்குள்ளும் பரிசுத்தாவியின் வல்லமை இறங்கி அந்நியப் பாஷை பேசுவதை காண முடிகிறது. ஆனால், இதே சம்பவத்தை நீங்கள் விக்கிர கோயில்களில் குறிச் சொல்லும் ஆட்கள் இடையேயும் காண முடிகிறது.

இதற்காக சபையில் இசைக் கேட்டு பரிசுத்தாவியில் நிரம்பும் மக்கள் அனைவரும் அசுத்தாவி பிடித்தவர்கள் என்று நாங்கள் குறிப்பிடவில்லை. ஆனால், இரட்சிக்கப்படுவதற்கு முன் இருந்த அதே பழக்கம் இப்போதும் பின்பற்றப்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறோம்.

இது குறித்து வேத வசனங்களை ஆராய்ந்தால், சங்கீதம்:39.3-ல் தாவீது, “….நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது;…” என்று குறிப்பிடுகிறார். இங்கே அக்கினி என்பது பரிசுத்தாவியை குறிக்கிறது. பைபிளில் எவ்வளவோ சங்கீதங்களை பாடியுள்ள தாவீது, ஒரு சிறந்த பாடகர், இசை வாசிப்பாளர்.

ஆனால் அவர் நான் பாடும் போது அல்லது இசைக் கருவிகளை வாசித்த போது எனக்குள் அக்கினி மூண்டது என்று எங்கேயும் கூறவில்லை. அப்படியென்றால், இன்று சபைகளில் நாம் காணும் பரிசுத்தாவியின் அபிஷேகம் பொய்யானதா என்ற சந்தேகம் நமக்குள் எழும்பலாம்.

உண்மையைக் கூறினால், அந்த வேகமான பாடல் மற்றும் இசையின் கலவையில், நமக்குள் எழுச்சியினால் ஏற்படும் ஒரு உடல் சலனமே தவிர, அது பரிசுத்தாவியில் நிரம்புவது அல்ல. பரிசுத்தாவினால் முழுமையாக நிரம்பினால், அவர்களில் பெரிய ஒரு மாற்றத்தை நிச்சயம் காண முடியும்.

இதை அறியாத பல ஊழியர்களும், இன்று மக்களை உற்சாகப்படுத்துகிறோம் என்ற பெயரில் இதோ வலதுபுறத்தில் ஆவியானவர் இறங்குகிறார், இடதுபுறத்தில் இறங்குகிறார், புறா பறக்கிறது என்றெல்லாம் கூறுகிறார்.

இதனால் எழுச்சியின் மிகுதியில் தங்களின் மீது பரிசுத்தாவி இறங்கிவிட்டதாக நினைக்கும் மக்கள், கை கால்களை பயங்கரமாக அசைத்து வித்தியாசமான சைகைகளை செய்கிறார்கள். இதனால் அவர்களுக்கு சரியான பரிசுத்தாவியின் வல்லமை கிடைக்காமல், பழைய பாவங்களில் இருந்து விடுதலை பெற முடியாமல் போகிறது. மேலும் ஆதி காலத்தில் நடந்த பலத்த கிரியைகளை இன்றைய சபைகளில் காணவும் முடிவதில்லை.

இதேபோல இன்றைய சபைகளில் பெரும்பாலான விசுவாசிகள், பிசாசினால் ஏமாற்றப்படும் மற்றொரு காரியம் உள்ளது. இரட்சிக்கப்பட்ட துவக்கத்தில் ஒரு வல்லமையான பரிசுத்தாவியின் அபிஷேகத்தை பெறும் பல விசுவாசிகளும் காலப்போக்கில் அதை புதுப்பிப்பது இல்லை. ஆனால் மற்றவர்களின் முன், இதை ஒத்துக் கொள்ள வெட்கப்படுகிறார்கள்.

எனவே ஆதி நாட்களில் கிடைத்த ஒரு சில அந்நியப் பாஷைகளையே திரும்ப திரும்ப கூறி, தங்களுக்குள் தொடர்ந்து பரிசுத்தாவியின் வல்லமை இருப்பதாக நடிக்கிறார்கள். சிலருக்குள் நோய்களை குணமாக்குவது, தீர்க்கதரிசனம், பகுத்தறிவது போன்ற ஆவிக்குரிய வரங்கள், ஆதி நாட்களில் கிடைத்திருக்கும். அதையும் மேற்கூறியது போலவே இருப்பதாக நடித்து வருகிறார்கள்.

பரிசுத்தாவி என்பது அனுபவத்தில் வருவது அல்ல என்பதை நாம் முதலில் உணர வேண்டும். ஆனால் பலருக்கும், தங்களுக்குள் பரிசுத்தாவியின் புதுப்பிக்கப்பட்ட வல்லமை இல்லை என்பதே தெரியாமல் இருப்பது மற்றொரு பரிதாபமான காரியம் ஆகும்.

நாம் உண்மையில் பரிசுத்தாவியினால் நிரம்புகிறோமா அல்லது அனுபவத்தில் நிரம்புகிறோமா என்பதை எப்படி அறிவது? அனுபவத்தில் ஆவியில் நிரம்பும் நபருக்கு, அதனால் எந்த வகையிலும் ஆவியில் கிடைக்கும் பரம சந்தோஷம் கிடைக்காது. தங்களின் பாவம், தவறான பேச்சு ஆகியவை குறித்த எந்த குற்ற உணர்வும் உண்டாகாது.

சொந்த பலத்தை பயன்படுத்தி ஆவியில் நிரம்புவதால், குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு, களைத்து போய் விடுவார்கள். நாம் ஆவியில் நிரம்பும் போது, இது போன்ற அடையாளங்கள் ஏற்பட்டால், அது பரிசுத்தாவியின் நிறைவு அல்ல என்பதை அறியலாம். உண்மையாக பரிசுத்தாவியின் வல்லமையில் நிரம்பும் ஒரு நபருக்குள், மேற்கூறிய எல்லா காரியங்களின் எதிரிடையான அடையாளங்களை காண முடியும்.

மற்ற சிலருக்கு குறிப்பிட்ட பாடல், ஊழியக்காரர், இடம் என்று வந்தால் மட்டுமே பரிசுத்தாவியின் வல்லமை, அவர்களுக்குள் வரும். அந்த கூட்டத்திற்கு சென்றாலே, ஒரு வல்லமையான அபிஷேகம் கிடைக்கிறது, வேறெங்கும் கிடைப்பதில்லை என்று பலர் கூறுவதை கேட்டிருப்பீர்கள்.

இது கூட, ஒரு வகையான தவறான பழக்கம் என்பதை விட, அறியாமை என்று கூறலாம். முதலில் நாம் கண்ட எழுச்சியினால் ஆவியில் நிரம்புபவர்களில் இவர்களும் உட்படுகின்றனர்.

ஆனால் இது குறித்து வேதத்தில் ஆராய்ந்தால், யோவான்:4.21-23 வசனங்களை வாசிக்கும் போது, குறிப்பிட்ட இடத்தில் மட்டுமன்றி நாம் எங்கே பரிசுத்தாவிக்காக காத்திருந்து ஜெபித்தாலும், அவர் வந்து நம்மை நிரப்பி, தேவனை ஆவியில் தொழுது கொள்ள உதவுகிறார் என்பதை இயேசு கூறியுள்ளார். எனவே நாம் பரிசுத்தாவியில் நிரம்ப, எதையும், எவரையும் சார்ந்திருக்க தேவையில்லை.

இதுவரை பரிசுத்தாவியில் நிரம்புவதாக எண்ணி, சுயமாக திருப்திப்பட்டு கொண்ட அறியாமையான காரியங்களை குறித்து பார்த்தோம். இந்நிலையில் பரிசுத்தாவியின் வல்லமையை பெற்ற சிலரே, மற்றவர்கள் ஆவியில் நிரம்புவதை கேலி, கிண்டல் செய்யும் பழக்கத்தையும் இன்று ஏகமாக காண முடிகிறது.

இதை சிலர் விளையாட்டாக செய்தாலும், அதற்கு தேவ சமூகத்தில் மன்னிப்பு கிடையாது என்பதை பலரும் நினைவில் கொள்வதில்லை. இந்த காரியத்தை கர்த்தராகிய இயேசுவே, மத்தேயு:12.31,32-ல் கூறுகிறார்.

சிந்தித்தது:

இதுபோல பல காரியங்களை நாம் இன்றைய கிறிஸ்தவர்கள் இடையே காணக் கிடைத்தாலும், மேற்கண்ட காரியங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதோடு அதிகமாக காண முடிகிறது என்பதால் இவற்றை குறிப்பிட்டோம்.

இந்த செய்தி மூலம் நீங்கள் தேவனால் உணர்த்தப்பட்டால், அதற்கு ஒப்புக் கொடுங்கள். அப்போது, ஒரு சரியான பரிசுத்தாவியின் எழுப்புதலை அடைய முடியும். அந்த எழுப்புதலின் தன்மை அவ்வப்போது வந்து செல்லும் திடீர் அனுபவமாக இல்லாமல், உங்களில் நிலையாக இருந்து மற்றவர்களுக்கும் பரிசுத்தாவியின் எழுப்புதலை பரப்புவதாக அமையும்.

எனவே பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நிரம்ப, தேவ சமூகத்தில் காத்திருப்போம். அப்போது தேவன் நமக்குள் உணர்த்தும் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்டு பரிசுத்தம் அடைவோம்.

அப்போது இயேசு கூறியது போல, காத்திருந்த 120 பேரை நிரப்பின அதே பரிசுத்தாவியின் வல்லமை, நம்மையும் நிரப்பும். அதன்பிறகு அக்னி ஜூவாலையாக தேவனுக்காக எழும்பி பிரகாசிக்க முடியும். அதை தான் தேவனும் நம்மிடம் விரும்புகிறார்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *