0 1 yr

கோவையைச் சேர்ந்த சகோதரர் ஜோசப் கூறுகிறார்…

பாரம்பரிய கிறிஸ்துவக் குடும்பத்தைச் சேர்ந்த நான், இரட்சிக்கப்பட்டு இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவன். ஆனால் இரட்சிக்கப்பட்ட பிறகும், குறிப்பிட்ட பாவங்களை நான் தொடர்ந்து செய்துக் கொண்டே தான் இருந்தேன்.

என் பாவ பழக்கங்களை விட்டு விடுமாறு, தேவ ஊழியர்கள், விசுவாசிகள் என பலரும் எனக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால் அதை நான் கண்டு கொள்ளவில்லை. ஏனெனில் எனக்கு பிடித்தது போல, நான் வாழ்கிறேன். அதில் இவர்களுக்கு பொறாமை என்ற எண்ணம் எனக்குள் மேலோங்கி இருந்தது.

புகை பிடிக்கும் பழக்கம் உட்பட சில தேவ சித்தமில்லாத காரியங்களை செய்து வந்தேன். ஆனால் சபைக்கு செல்லுதல், தினமும் வேதம் வாசிப்பது, போதகர்களுடன் ஐக்கியம் ஆகியவற்றில் ஒழுக்கமான கிறிஸ்தவனாக வாழ்ந்து வந்தேன்.

சுருக்கமாக கூறினால், என்னை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு, பக்தியுள்ளவனாக காட்சி அளிப்பேன். ஆனால் எனக்குள் எந்த மாதிரியான பாவங்கள் நிறைந்திருந்தன என்பது எனக்கே தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் நான் இரட்சிக்கப்பட்டு பல வருடங்கள் கடந்தன. ஒரு முறை சிறிய காய்ச்சல் மற்றும் உடல் வலி காரணமாக, வீட்டில் ஓய்வெடுத்தேன். டாக்டர்கள் அளித்த மருந்துகளை சாப்பிட்டும், என் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஊழியர்கள் வந்து ஜெபித்து விட்டு, ஆறுதல் சொல்லி சென்றார்கள். ஆனாலும் எனக்கு எந்த விடுதலையும் கிடைக்கவில்லை.

மேற்கூறிய காரியங்களால் எனக்கு சுகம் கிடைப்பதற்கு பதிலாக, சுகவீனம் அதிகமானது. நாட்கள் செல்ல செல்ல, என்னால் தாங்க முடியாத பலவீனமாக மாறியது. ஒரு கட்டத்தில் இனி நான் பிழைப்பது கடினம் என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.

மரண படுக்கையாக எனக்கு தெரிந்த அந்த சூழ்நிலையில், எனது மனைவி, பிள்ளைகளை அழைத்து, அவர்களிடம் காரியங்களை ஒப்படைத்து விடலாமா? என்று கூட யோசித்துவிட்டேன். அப்போது தான் தேவனை நோக்கி ஜெபிக்க ஆரம்பித்தேன்.

ஆண்டவரே, என் குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ளும். அவர்களுக்கு என் இழப்பு எந்த வகையிலும் துன்பமாக அமைய கூடாது என்று ஜெபித்துவிட்டு, அப்படியே உறங்கிவிட்டேன்.

அப்போது எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் நான் சிறு வயது முதல் செய்த பாவங்கள் அனைத்தும் ஒரு திரைப்படம் போல வந்தது. அதுவரை அவற்றை நான் பாவமாகவே நினைக்கவில்லை. அந்த கனவை கண்டு திடுக்கிட்டு எழுந்த எனக்கு, தாங்க முடியாத பயம் ஏற்பட்டது. ஆண்டவரே என்று கதறி அழுத நான், இப்போது எனக்கு சாவு வந்தால், நிச்சயம் நரகத்திற்கு தான் செல்வேன் என்றேன்.

அப்போது என்னை கவனித்துக் கொண்டிருந்த மனைவியும், பிள்ளைகளும் பதட்டத்துடன் விசாரித்தார்கள். அவர்களுக்கு நான் கண்ட கனவை விவரித்து கூறினேன். அதை கேட்ட மனைவி, தேவனிடம் மன்னிப்பு கேட்டு, அந்த பாவங்களை விட்டு விடுவதாக கூறுங்கள். உங்களின் பலவீனம் அதனால் கூட ஏற்பட்டிருக்கலாம் என்றாள்.

அதை கேட்டு தெளிவடைந்த நான், கண்ணீரோடு தேவனிடம் என்னை ஒப்புக் கொடுத்து மன்னிப்பு கேட்டேன். அப்போது எனக்குள் இருந்த பாவத்தை குறித்த பயம் மாறி, தேவ சமாதானம் பொங்குவதை உணர்ந்தேன். அதே நேரத்தில் பலவீனத்தோடு காணப்பட்ட என் உடலில், ஒரு புதிய வல்லமை இறங்குவதை அறிந்தேன்.

என்னிடம் இருந்த பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்து விட்ட போது, அதுவரை நான் பெற்றிராத பெரிய சமாதானம் எனக்கு கிடைத்தது. இத்தனை நாட்களாக எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்துவிட்டேனே? என்று எண்ணிக் கொண்டேன். அந்த நோய் படுக்கை எனது ஆவிக்குரிய வாழ்க்கையின் ஒரு திருப்பு முனையாக மாறியது.

மரண படுக்கை என்று நினைத்த அந்த தருணத்தில் இருந்து மீட்ட தேவன், இன்றும் என்னை ஜீவனுள்ள சாட்சியாக வைத்திருப்பதை எண்ணி நன்றியுள்ள இருதயத்தோடு கர்த்தரை துதிக்கிறேன்.

இந்த சாட்சியை வாசிக்கும் சகோதரா, சகோதரி, உங்களுக்கு பலவீனமா? சமாதானம் இல்லையா? போராட்டமா? என்னை போல உங்களுக்குள் இருக்கும் பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு விட்டு விடுங்கள். அப்போது எனக்கு சமாதானத்தையும், உடல் சுகத்தையும் அளித்த அதே தேவன், உங்கள் வாழ்க்கையிலும் நிச்சயம் கிரியை செய்வார். தேவ நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *