
இந்த உலகமே பாவத்தில் மூழ்கி இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலம் பாவத்தில் இருந்து மீட்கப்பட்ட நாம், இந்த உலகில் தான் தொடர்ந்து வாழ வேண்டியுள்ளது.
இந்நிலையில் இந்த உலகில் பாவம் இல்லாமல் எப்படி வாழ முடியும்? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் ஏற்படலாம். அது தொடர்பாக தேவன் உணர்த்திய ஒரு காரியத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பார்த்தது:
சமீபத்தில் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு பேசிக் கொண்டிருக்கும் போதே, பலா பழம் ஒன்றை வெட்ட வேண்டும் என்று எடுத்து கொண்டு வந்தார்கள். அதை கண்ட வீட்டில் இருந்த குழந்தைகளும் ஆர்வம் ஆனார்கள்.
சமையலறையில் இருந்து கத்தி ஒன்றை எடுத்து வந்த ஒருவர், அதை இரண்டாக வெட்ட முயன்றார். அவருக்கு பலா பழத்தை வெட்டி பழக்கம் இல்லாததால், அதை முழுமையாக வெட்ட முடியவில்லை. பழத்தின் நடுவே கத்தி சிக்கி கொண்டது.
அப்போது வேறொருவர் எப்படியோ அந்த கத்தி பழத்தில் இருந்து எடுத்து விட்டு, வேறொரு கத்தியை எடுத்து அதில் எண்ணெய்யை தேய்த்தார். எண்ணெய் தேய்த்த கத்தி மூலம் பழத்தை எளிதாக வெட்டினார். வெட்டிய பிறகு, அப்படியே வைத்து விட்டு, பேப்பர்களை எடுக்க வேறொரு அறைக்கு சென்றார்.
அந்த நேரத்தில் இதை பார்த்து கொண்டிருந்த வீட்டில் இருந்த குழந்தைகள், பழத்தை சாப்பிடும் ஆர்வத்தில், வெட்டிய பழத்தில் இருந்த சுளையை எடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களின் கைகளில் பலா பழத்தின் வழவழப்பான பால் ஒட்டிக் கொண்டது.
அதற்குள் பேப்பர் எடுக்க போன நண்பரும் வந்துவிட, அவர்களை கைகளை கழுமாறு திட்டி அனுப்பினார். பின்னர் எடுத்து வந்த பேப்பர் மூலம் பலா பழத்தில் இருந்த பாலை துடைத்து விட்டு, தனது கைகளில் சிறிது எண்ணெய் தேய்த்து, பலா பழத்தின் சுளைகளை எடுத்தார். அப்போது அவர் கைகளில் பால் ஒட்டவில்லை.
கைகளை கழுவி விட்டு பிள்ளைகளிடம், பலா பழத்தின் சுளைகளை சாப்பிட கொடுத்த நண்பர், அதில் இருந்த பால் ஏன் கைகளில் ஒட்டியது என்பதை விளக்கினார். மேலும் முதலில் பலா பழத்தை வெட்டிய நண்பருக்கும் வெட்ட முடியாமல் போனதன் பின்னணியில் இருந்த பலா பழத்தின் பாலை பற்றி கூறினார்.
நாங்கள் பலா பழத்தை ருசியாக சாப்பிட்டு கொண்டிருந்த சில நிமிடங்களில், அதன் வாசனையை நுகர்ந்து கொண்டு ஈக்கள், பலா பழத்தை மொய்க்க துவங்கின. அதில் சில பலா பழத்தின் பாலில் சிக்கி, மேற்கொண்டு பறக்க முடியாமல் அப்படியே செத்தன.
சிந்தித்தது:
பலா பழத்தை சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே, தேவன் ஒரு காரியத்தை உணர்த்தினார். இந்த உலக வாழ்க்கையும் அந்த பலா பழத்தை போன்று இனியான பல அனுபவங்களைக் கொண்டதாகும். ஆனால் அதை வெறுமையான கைகளில் எடுக்க சென்றால், மேற்புற தோலி் உள்ள பாவம் என்ற பால் நம் கைகளில் ஒட்டிக் கொள்ளும்.
அதை உடனே கழுவாவிட்டால், அவை அடிமையாக்கி ஆவிக்குரிய மரணத்தை அளிக்கும். அதற்காக இந்த உலக வாழ்க்கையே வேண்டாம் என்று கூறுவது, எனக்கு சுவையான பலா பழமே வேண்டாம் என்று சொல்வதற்கு சமம்.
பலா பழத்தை வெட்ட வெறும் கத்தி பயன்படுத்த கூடாது. அதேபோல எனக்கும் வேத வசனங்கள் தெரியும் என்று கண்ட இடங்களில் எல்லாம் பயன்படுத்தக் கூடாது. பரிசுத்தாவின் உதவி என்ற எண்ணெயோடு பயன்படுத்தினால் தான், அது பயன் நிறைவாக இருக்கும்.
மேலும் நாம் பரிசுத்தாவியில் நிரம்பி செயல்படும் போது, இந்த உலகில் உள்ள அசுத்தங்கள், நம் கைகளில் ஒட்டாது. அதே நேரத்தில் உலகில் தேவன் வைத்திருக்கும் இனிமையான அனுபவங்களைப் பெறவும் முடியும்.
ஆவிக்குரிய வாழ்க்கையில் ஈக்களை போல வளர்ச்சி குறைந்தவர்களாக இருந்தால், அவை அந்த பலா பழத்தின் பாலில் சிக்கி கொண்டது போல, நம்மால் பாவங்களில் இருந்து எழும்பி மீண்டு வர முடியாது. எனவே அனுதினமும் நாம் ஆவியில் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.
எனவே பாவம் நிறைந்த இந்த உலகில் நம்மால் பாவம் இல்லாமல் வாழ முடியும். அதற்கு முக்கியமாக பரிசுத்த வேதாகமம் காட்டும் வழியும், அதற்கு நேராக நம்மை நடத்தும் பரிசுத்தாவியின் ஆலோசனையும், அவரது சக்தியும் இருந்தால் போதுமானது என்று தேவன் எனக்கு உணர்த்தினார்.
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.