0 1 min 1 yr

ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் பிசாசின் போராட்டம் கட்டாயம் இருக்கிறது. அதை எதிர்த்து போராடினால், நாம் வெற்றி பெறலாம். போராட்டங்களில் சோர்ந்து தளர்ந்து போனால், இழப்பு நமக்கு தான்.

படித்தது:

இது குறித்து கூறும் போது, பள்ளி பருவத்தில் படித்த ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. வாசகர்களான உங்களுக்கும் இந்த கதை தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இருந்தாலும், அதில் எனக்கு தேவன் உணர்த்திய காரியங்களை கூறும் வகையில், இதை உங்களுக்கு கூறுகிறேன்.

அந்த கதை இப்படி தான் துவங்குகிறது… ஒரு நாட்டை வீரமிக்க மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். அவன் போரில் ஈடுபட்டு யாரிடமும் தோல்வி அடைய கூடாது என்று ஆசைப்பட்டான். இதற்காக தனது போர் கருவிகள் மற்றும் போர் உடைகளை மிகவும் பாதுகாப்பு மிகுந்ததாக மாற்ற விரும்பினான்.

இந்நிலையில் மன்னனின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், ஒரு போர் உடை வடிவமைப்பாளர் அரண்மனைக்கு வந்தார். மன்னனின் விருப்பத்தை பூர்த்தி செய்ய தனக்கு 1 மாதம் தேவை என்று கால அவகாசம் கேட்டான். எப்படியோ தனது ஆசை நிறைவேறினால் சரி என்று மன்னன் அதற்கு ஒத்துக் கொண்டான்.

ஒரு மாதத்திற்கு பிறகு, மன்னனை மீண்டும் சந்தித்த அந்த மனிதன், தான் தயாரித்த போர் சட்டையை அளித்தான். அதை சோதிக்க விரும்பிய மன்னன், ஒரு சிலையை கொண்டு வர செய்து, அதற்கு போர் சட்டையை அணிவித்தான். பின்னர் அந்த சிலையை தாக்குமாறு 10 போர் வீரர்களுக்கு கட்டளையிட்டான். வீரர்களின் சரமாரி வாள் தாக்குதலில், ஒரு மணிநேரம் தாக்குபிடித்த அந்த போர் சட்டை துண்டுத் துண்டானது.

போர் சட்டையின் நிலையை கண்டு ஆத்திரமடைந்த மன்னன், இந்த சட்டையை அணிந்து கொண்டு நான் போருக்கு போயிருந்தால் என்னவாயிருப்பேன்? என்று ஆடை வடிவமைப்பாளரிடம் கேட்டான்.

தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்ட அவன், தனக்கு மீண்டும் ஒரு மாதம் கால அவகாசம் தருமாறு கேட்டான். மனமிரங்கிய மன்னன், காலஅவகாசம் அளித்தான். ஒரு மாதத்திற்கு பிறகு, வேறொரு போர் சட்டையுடன் வந்த அவன், அதை மன்னனிடம் தந்தான்.

வழக்கம் போல மன்னன், சிலையை கொண்டு வர செய்து, அதை வாளால் தாக்குமாறு வீரர்களுக்கு கூறினான். அதற்குள் இடையே குறுக்கிட்ட ஆடை வடிவமைப்பாளர், மன்னனின் உயிரை காக்கும் இந்த சட்டையை பரிசோதிக்க, சிலைக்கு பதிலாக தன்னையே பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டான். மன்னனும் ஒத்துக் கொண்டார்.

போர் சட்டையை அணிந்துக் கொண்ட ஆடை வடிவமைப்பாளர், போர் வீரர்களின் தாக்குதலுக்கு, பதில் தாக்குதல் நடத்தி சமாளித்தான். மணி நேரங்கள் கடந்தன. ஆனால் போர் சட்டையில் ஒரு கீறல் கூட விழவில்லை. போர் சட்டையின் சிறப்பை அறிந்த மன்னன், இதை நீ முதல் முறையே தயாரித்து அளித்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும், என்று ஆடை வடிவமைப்பாளரிடம் கேட்டார்.

அதைக் கேட்டு சிரித்த வடிவமைப்பாளர், நான் முதல் முறை எப்படி போர் சட்டையை தயாரித்தேனோ? அதேபோல தான் இந்த முறையும் தயாரித்தேன். ஆனால் முதல் முறை நீங்கள் அசையாத சிலைக்கு அணிவித்து சோதித்தீர்கள். இதனால் அது உபயோகமற்றது போல தோன்றியது. ஆனால் 2வது முறை உயிருள்ள என்னை கொண்டு சோதித்த போது, என் உயிரும் தப்பியது, உடையின் சிறப்பும் தெரியவந்தது.

போர் களத்தில் மன்னர், சிலை போல நிற்க முடியுமா? அது தான் காரணம் என்று விளக்கம் அளித்தான். அப்போது அவனது அறிவு கூர்மையை கண்டு மன்னன் வெகுவாக பாராட்டினான்.

சிந்தித்தது:

இந்த கதையில் அந்த ஆடை வடிவமைப்பாளர் கூறுவது போல, நம் ஆவிக்குரிய போர் களத்தில் சிலை போல நிற்க கூடாது. பிசாசின் சோதனையும், போராட்டங்களை வெற்றிப் பெற, நமக்கு சர்வாயுதவர்க்கத்தை தேவன் அளித்துள்ளார் (எபேசியர்:6.11-17). அதை பயன்படுத்தினால், நமக்கு வெற்றி உண்டு. அதை பயன்படுத்தாமல் இருந்துவிட்டு, தேவன் என்னை பாதுகாக்கவில்லை, கைவிட்டார் என்று கூறுவதில் எந்த நியாயமும் இல்லை. என்ன நான் கூறுவது சரி தானே?

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *