
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. பிலிப்பியர்.4.13
கிறிஸ்துவர்கள் இடையே அதிக பயன்பாட்டில் இருப்பதும், மனதில் தைரியமாக எடுத்துக் கொள்வதுமான இந்த வசனம் மிகவும் பிரபலமானது. உண்மையில் இந்த வசனத்தை கூறும் போதே, நமக்குள் பெரிய அளவில் உற்சாகம் ஏற்படுகிறது.
கஷ்டமான, நெருக்கடியான சூழ்நிலைகளில் நாம் தேவனை நோக்கி ஜெபிக்கிறோம். அந்த நேரத்தில் அவருடைய பெலனை பெற்று கொள்ள முடிகிறது. இப்படி ஆவிக்குரிய, சரீரத்திற்குரிய வாழ்வில் நாம் தளர்ந்து போகும் போது, தேவன் வார்த்தையை அனுப்பி நம்மை பெலப்படுத்துகிறார்.
ஆனால் அந்த பெலனை குறுகிய காலத்திலேயே இழந்து போகிறோம். இதனால் மீண்டும் கடினமான பாதையில் செல்லும் போது, தளர்ந்து போகிறோம். அதே நேரத்தில் நாம் பெற்று கொண்ட தேவ பெலனை நீண்டகாலத்திற்கு காத்து கொள்ள முடிந்தால், இந்தப் பிரச்சனை இருக்காது.
இதற்கு ஏசாயா தீர்க்கத்தரிசி நமக்கு ஆலோசனையை தருகிறார். ஏசாயா.40.31ல் வாசிக்கும் போது, கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து… ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள் என்று வாசிக்கிறோம். அப்படியென்றால், கர்த்தருக்கு காத்திருந்து கிடைக்கும் பெலன், எவ்வளவு நெருக்கடியிலும் கரைந்து போகாது.
இன்றைய அவசர உலகில், தேவனுக்கு காத்திருப்பது என்பது அநேகருக்கு இயலாத ஒன்றாகவே மாறிவிட்டது. தேவ சித்தத்தை அறிந்து கொள்ள காத்திருப்பதை விட்டுவிட்டு, மனித மூளையை பயன்படுத்தி குறுக்கு வழிகளை செயல்படுத்தி வெற்றி பெற முயற்சிக்கிறார்கள். இதில் பெரும்பாலான நேரங்களில் வெற்றியும் கிடைக்கிறது. ஆனால் அந்த வெற்றி நீண்டகாலத்திற்கு நிலை நிற்பதில்லை.
இதனால் மீண்டும் ஒரு நெருக்கடியான சூழ்நிலை வரும் போது, பதட்டம் அடைய வேண்டியுள்ளது. இப்படி, தொடர்ந்து பல முறை குறுக்கு வழிகளைப் பின்பற்றும் போது, பிற்காலத்தில் வேத வசனங்களை மீறி செயல்பட நமக்கு தைரியத்தையும் வந்து விடுகிறது.
தேவ சமூகத்தில் காத்திருக்கும் போது, அவர் விரும்பும் சில காரியங்களை நமக்கு உணர்த்துவார். அதை நாம் சரிசெய்து அவருடைய வழிக்கு வந்துவிட்டால், அவரது பெலனை எளிதாக பெற்று கொள்ளலாம். தேவனுக்கு காத்திருந்து பழகிவிட்டால், உலகமே நமக்கு எதிராக நின்றாலும், மனதில் ஒரு துளியும் பயம் ஏற்படாது.
எந்த மாதிரியான கடினமான சூழ்நிலையிலும், பயமின்றி தியான வசனத்தை தைரியமாக கூறி, அதில் இருக்கும் ஆசீர்வாதத்தையும் கிருபையையும் பெற்று கொள்ள முடியும்.
ஜெபம்:
எங்களை நேசிக்கிற அன்புள்ள ஆண்டவரே, நெருக்கடியான நேரங்களில் நீர் பெலனை தருக்கிற தேவனாக இருப்பதால் நன்றி. உமக்கு காத்திருந்து பெறும் பெலனை இழந்துவிடாமல், தொடர்ந்து பாதுகாத்து கொள்ள எங்களுக்கு உதவி செய்யும். அதன்மூலம் உமக்கு சாட்சியாக நிலைநிற்க உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.