1 1 min 2 mths

இயேசு மண்ணுலகில் வாழ்ந்த போது, நடந்த பல சம்பவங்களும் 4 சுவிசேஷங்களிலும் எழுதப்படாமல் உள்ளன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, சிறு வயதில் தேவாலயத்தில் காணாமல் போகும் சம்பவத்திற்கும், இயேசு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெறுவதற்கும் இடைப்பட்ட காரியங்களை வேதத்தில் காண முடியவதில்லை.

இதேபோல, இயேசுவின் ஊழிய நாட்களிலும் அவர் செய்த பல கிரியைகள், அற்புதங்கள், வெளிச்சத்துக்கு வராமல் போயுள்ளன. இப்படி நான் கூறியவுடன், இவர் வேதத்திற்கு புறம்பாக ஏதோ கூறுகிறாரே என்று நீங்கள் யோசிக்க கூடும். இது என் சொந்த கருத்து அல்ல. இயேசுவின் அன்பான சீஷனான யோவான் எழுதிய சுவிசேஷத்தின் கடைசி வசனம் இப்படி தான் முடிகிறது.

இந்நிலையில், இயேசுவுக்கும் பேதுருக்கும் இடையே சில நெருக்கமான உரையாடல்கள் நிகழ்ந்ததாக வேதம் குறிப்பிடுகிறது. ஆனால் சில காரியங்கள் பேதுருவின் மனதிற்குள்ளேயே கேட்கப்படாமல், அப்படியே மறைந்து போயிருக்கலாம் என்ற எண்ணத்தில் தோன்றிய ஒரு சிந்தனையை இந்த மாத்தி யோசி பகுதியில் காண்போம்.

மாத்தி யோசி:

தனது சிலுவை மரணத்திற்கு முன்பே, பேதுரு தன்னை மறுதலிப்பார் என்று எச்சரிக்கை கொடுத்தார் இயேசு (மத்தேயு.26.34). இதேபோல மூன்று முறை இயேசுவை மறுதலிக்கிறார் பேதுரு. இயேசு கூறியது போல சேவல் கூவிய போது, தன் தவறை எண்ணி, பேதுரு வெளியே போய் மனம் கசந்து அழுதான் என்று மத்தேயு.26.75ல் காண்கிறோம்.

அப்போது பேதுருவின் மனதில், என்னை இயேசு எச்சரித்தும் நான் அதில் தோல்வி அடைந்துவிட்டேனே என்று அழுகிறார். அதே நேரத்தில் என் மேல் உமக்கு எந்த அளவுக்கு அன்பு இருக்கிறது? என்று யோசிக்க, பேதுருவின் முன்னால் இயேசு சிலுவையை சுமக்க இழுத்து செல்லப்படுகிறார்.

தான் சுமந்து கொண்டு சென்ற சிலுவையிலேயே இயேசு அறையப்படுகிறார். அந்த காட்சியை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த பேதுருவுக்கு, தான் மனதில் இயேசுவிடம் கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது.

ரபீ, நீர் பார்த்த ஒரு பார்வையில் என்னுடைய தவறை உணர வைத்தீர். அப்படியென்றால் என் மீது எவ்வளவு அன்பாய் இருக்கிறீர்? என்பதே அந்த கேள்வி. இந்நிலையில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை பார்த்த போது, இரு கைகளையும் விரித்து கொண்டு, இவ்வளவாக உன்னை நேசிக்கிறேன் சீமோன் பேதுரு என்று கூறுவது போல இருந்தது.

இன்றும் நாம் செய்யும் ஒவ்வொரு தவறுகளையும் உணர்த்தும் இயேசு, நீ ஒவ்வொரு முறை பாவம் செய்யும் போதும், என்னை சிலுவையில் அடிக்கிறாய். ஆனால் அப்போதும் உன்னை நான் நேசிக்கிறேன் என்பதை இரு கைகளையும் விரித்து காட்டுகிறார்.

சிலுவையில் அறையப்பட்டு மரித்த இயேசு, மூன்றாம் உயிர்ந்தெழுந்து, இந்த உலகில் தனக்கு அன்பானவர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது சீமோன் பேதுருவிடம் இவர்களிலும் அதிகமான என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்று 3 முறை கேட்கிறார். இதை நாம் யோவான்.21.15-17 வரையிலான வசனங்களில் காணலாம்.

இயேசுவே என் மீது எவ்வளவு அன்பாயிருக்கிறீர்? என்ற பேதுருவின் மனதில் ஒலித்த கேள்வியை, இயேசு நேரடியாக அவரிடம் திருப்பி கேட்டிருக்கலாம். அப்படியென்றால், அதை 3 முறை கேட்டது எதற்கு? என்ற சந்தேகம் ஏற்படலாம்.

ஆம், 3 முறை இயேசுவை யார் என்றே தெரியாது என்று கூறிய பேதுருவிடம், 3 முறை நேசிக்கிறேன் என்று கேட்டு உறுதி செய்திருக்கலாம். அந்த 3 முறையின் முடிவிலும் என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று மட்டுமே இயேசு கூறுகிறார். சபையில் உள்ள ஆடுகளை மேய்க்க வேண்டிய நீ, எந்த வகையிலும் சந்தேகத்தோடும், குறைவுடனும், குற்ற உணர்வு கொண்டவனாகவும் இருக்க கூடாது என்று இயேசு நினைத்து இருக்கலாம்.

பேதுருவை போல நம் மனதிலும் இயேசு என்னை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்ற கேள்விக்கு அவர் சிலுவையில் கைகளை விரித்து பதில் கூறிவிட்டார். ஆனால், இயேசு நேரில் வந்து இவர்களில் அதிகமாக என்னை நேசிக்கிறாயா? என்று கேட்டால், நம்மில் எவ்வளவு பேர் உண்மையாக மனதின் ஆழத்தில் இருந்து நேசிக்கிறேன் ஆண்டவரே என்று சொல்ல முடியும்?

அப்படி உண்மையாக அவரை நேசித்தால் மட்டுமே, நமக்கு அளிக்கப்பட்டுள்ள குடும்பத்தை, குழந்தைகளை, சபையை, ஊழியத்தை உண்மையாக செய்ய முடியும்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

One thought on “பேதுருவின் மனதில் எழுந்த ஒரு கேள்வி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *