0 1 min 8 mths

…புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்து வைப்பார்கள்; அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார். மத்தேயு.9.17

யோர்தான் நதியில் ஞானஸ்நானம் கொடுத்து கொண்டிருந்த யோவான் ஸ்நானன் மூலம் உலகின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி என்று இயேசு அறிமுகம் செய்யப்படுகிறார்.

இதன்பிறகு மக்கள் இடையே பிரபலமாகும் இயேசு விறுவிறுப்பாக ஊழியம் செய்து வருகிறார். அப்போது அவரை சந்திக்கும் யோவானின் சீஷர்கள், நாங்களும், பரிசேயரும் உபவாசிக்கிறோம். ஆனால் இயேசுவோடு உள்ள சீஷர்கள் உபவாசம் இருப்பதில்லை ஏன்? என்று கேள்வி கேட்கிறார்கள்.

இதற்கு இயேசு பதில் கூறும் போது, எடுத்துக்காட்டாக திராட்சை ரசம் மற்றும் துணிகளைக் குறித்து குறிப்பிடுகிறார். இதில் திராட்சை ரசம் மற்றும் அதை சேமித்து வைக்க பயன்படும் துருத்திகளைக் குறித்து சிந்திப்போம்.

திராட்சை ரசம் என்பது வேதத்தில் பரிசுத்தாவியின் அபிஷேகம் உட்பட பல அனுபவங்களுக்கு உவமையாக காட்டப்பட்டுள்ளது. துருத்தி என்பது நம்மையும் குறிக்கிறது.

இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனின் அனுபவமும், ஆவிக்குரிய வாழ்க்கையும் வேறுப்பட்டிருக்கும். ஒரு சில அனுபவங்கள் மட்டுமே ஒத்துப் போகலாம். இதனால் ஒருவரின் அனுபவத்தை வைத்து, மற்றொருவரை மதிப்பிட முடியாது.

ஏனெனில் பழைய துருத்திகளில் பழைய திராட்சை ரசத்தை மட்டுமே ஊற்ற வேண்டும். புதிய திராட்சை ரசம் என்ற புதுமையான அனுபவத்தை பழைய துருத்தியில் ஊற்றினால், அது கிழிந்து போகும் என்கிறது வசனம்.

எடுத்துக்காட்டாக, புதிதாக இரட்சிக்கப்பட்ட ஒருவருக்குள், தான் அனுபவிக்கும் ஆவிக்குரிய புதுமையான அனுபவத்தை பிறருக்கு கூற வேண்டும் என்ற எண்ணமும், அதற்கான வேகமும் அதிகமாக இருக்கும். ஆனால் வருடங்கள் செல்ல செல்ல அந்த அனுபவம் புதுப்பிக்கப்படாமல் விடுவதால், அதன் மீதான தாகம் குறைந்து விடுகிறது.

இதனால் தான் இரட்சிக்கப்பட்ட ஒரு புதிய விசுவாசி, சுவிசேஷம் கூற ஆர்வமாக இருக்கும் போது, அதை பழைய விசுவாசிகள் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. மேலும் இதெல்லாம் நாங்க பார்க்காதா? என்று சாதாரணமாக பேசுபவர்களும் உள்ளார்கள்.

ஆனால் ஆவிக்குரிய உலகில் இப்படி ஒரு பழமையான துருத்தியாக இருப்பது நல்லது அல்ல. நம் வாழ்க்கை, ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்பட்டு கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் பரிசுத்தாவியின் புதிய வல்லமையை நாம் பெற முடியும்.

பழைய அனுபவத்தோடு, புதுமையான தேவ ஆலோசனையையும், வல்லமையையும் பெற முயற்சிக்கும் போது, அது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக, நம்மில் உள்ள குற்றங்களை உணர்த்தும் போது, அதற்கு எதிர்த்து பேச தோன்றும். சிலரால் விசுவாசத்தில் நிலைத்து கூட நிற்க முடியாது.

இன்று பலரும் மற்றவர்களிடம், தாங்கள் இரட்சிக்கப்பட்ட காலத்தில் இருந்த ஜெப ஜீவியத்தையும், சுவிசேஷத்திற்காக பட்ட கஷ்டங்களை பெருமையாக கூறி கொள்வார்கள். இன்னும் சிலர், தங்களுக்கு என்று எந்த சிறப்பான ஆவிக்குரிய அனுபவமும் இல்லாததால், தங்கள் பெற்றோரின் ஜீவியத்தை பற்றியும், கண்களால் கூட காணாத முன்னோடியான சில ஊழியர்கள் பட்ட கஷ்டங்களையும் பெருமையாக கூறி கொள்வார்கள்.

இதனால் யாருக்கும் எந்த ஆவிக்குரிய வளர்ச்சியும் ஏற்பட போவதில்லை. இது போன்ற பழைய திராட்சை ரசமாகிய முன்னோர்களின் அனுபவங்களை, புதிய விசுவாசிகளாகிய துருத்திகளில் ஊற்றினால், தேவையில்லாத இடறல்கள் தான் ஏற்படும். ஆவிக்குரிய வாழ்க்கையில் உயிரோடு இருக்கும் ஒருவரின் ஜீவனுள்ள சாட்சியான நடத்தை மட்டுமே பிறருக்கு பயன்படும்.

யோவான் சீஷர்கள் மற்றும் பரிசேயரின் அனுபவங்கள் இது போன்ற பழைய திரட்சை ரசமாக உள்ளன. இதை இயேசுவின் சீஷர்கள் போன்ற புதுமையான துருத்திகளில் ஊற்றினால் இடறல் ஏற்படும் என இயேசு குறிப்பிடுகிறார்.

எனவே ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்படுவோம். எந்த பிரயோஜனமும் இல்லாத சுயபுகழை பறைசாற்றும் பழைய ஆவிக்குரிய அனுபவங்களை கூறி, மற்றவர்களுக்கு சலிப்பை உண்டாக்குவதை தவிர்ப்போம். நம் வாழ்க்கையின் புதுமையான அனுபவங்களை பிறர் கண்களுக்கு முன்பாக காட்டி, தேவனுக்காக எழும்பி பிரகாசிப்போம்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள ஆண்டவரே, எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எங்களுக்குள் இருக்கும் பயனில்லாத பழமையான அனுபவங்களை களைந்த போட்டு, புதுப்பிக்கப்பட உதவி செய்யும். உமக்காக எழும்பி பிரகாசிக்க செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *