
அவைகளை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார். மத்தேயு: 14.18
இயேசு உலகத்தில் இருந்த போது செய்த அற்புதங்களில் ஒன்று – 5 அப்பத்தையும், 2 மீன்களையும் கொண்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை போஷித்தது. இந்த அற்புதத்தில் வரும் மேற்கண்ட வார்த்தைகளை பல முறை வாசித்தும், கேட்டும் நமக்கு அந்த அற்புதம் ஒரு சாதாரண சம்பவமாக மாறி இருக்கலாம்.
இந்த உலகத்தில் சாதாரண மனிதனாக சுற்றி திரிந்து ஊழியம் செய்த இயேசுவிற்கு, களைப்பு ஏற்படுவது இயற்கை. இந்நிலையில் இயேசுவின் முன்னோடியான யோவான் ஸ்நானன் கொல்லப்பட்ட செய்தியை கேட்டு இயேசு மனதளவில் சோர்ந்து போன நிலையில் வனாந்தரமான இடத்திற்கு தனித்து இருக்கும்படி செல்கிறார்.
ஆனால் அங்கே இயேசுவை நோக்கி திரளான மக்கள் வருகின்றனர். உடனே தனது கோபத்தை காட்டாத இயேசு, அவர்களுக்கு போதிக்க துவங்குகிறார். இன்று தேவனுக்காக ஊழியம் செய்யும் நமக்கு இது ஒரு சிறந்த மாதிரி. தேவனுக்காக எந்த சூழ்நிலையிலும் நாம் ஊழியம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்பதை இயேசு செய்து காட்டியுள்ளார்.
இயேசுவின் வார்த்தைகளை கேட்ட மக்களுக்கு, பசி, தூக்கம், களைப்பு ஆகியவை மறந்தே போனது. இயேசுவை போல நாமும் கிடைக்கும் சந்தர்ப்பங்களை வீணாகாமல் தேவனுக்காக ஊழியம் செய்யும் போது, அது அநேக மக்களுக்கு ஆசீர்வாதமாக மாறும்.
தன்னிடத்திற்கு வந்த மக்களுக்கு செவிக்கு மட்டும் உணவு அளித்துவிட்டு திரும்ப அனுப்ப மனமில்லாத இயேசு, வயிற்றுக்கும் உணவு அளிக்கும்படி சீஷர்களுக்கு கூறுகிறார். அதில் அதிர்ச்சி அடையும் சீஷர்கள், தங்களிடம் உள்ளதை இயேசுவிடம் எடுத்து கூறுகிறார்கள். அப்போது இயேசு, அங்கே இருந்த குறைகளை நிறைவாக்குகிறார்.
சீஷர்களை போல, நமக்கு இருக்கும் குறைகளை தேவனிடம் கூற என்றும் தயங்க கூடாது. நம்மிடம் உள்ளதை தேவனிடத்தில் ஒப்புக் கொடுக்கும் போது, நமது குறைகளை மாற்றி சம்பூரணமாக்குகிறார். மனிதர்களின் மீது நம்பிக்கை வைத்து நமது குறைகளை கூறினால், கிண்டல், கேலி மட்டுமே செய்வார்கள்.
இன்று பலரும் பெரிய ஊழியங்களை செய்ய விரும்புகிறார்கள். ஆனால் தங்களிடம் உள்ளதை இயேசுவிற்கு கொடுக்க விரும்புவதில்லை. இது குறித்து கேட்டால், எனக்கு தேவன் எந்த வரத்தையும் தரவில்லை என்கிறார்கள். முதலில் நம்மிடம் உள்ளதை தேவனுக்காக கொடுக்க வேண்டும். அப்போது அவர் நம்மை பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு பிரயோஜனமுள்ள பாத்திரமாக மாற்றுவார்.
எனவே இன்று முதல் இயேசுவை போல, நம் வாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் தேவனுக்காக ஊழியம் செய்ய ஆயத்தப்படுவோம். நமக்கு உள்ளவற்றை தேவனுடைய கரங்களில் ஒப்புக் கொடுத்து அவருக்காக கிரியை செய்வோம். தேவன் தாமே நமக்கு அதற்கு ஏற்ற கிருபையை அளிப்பாராக.
ஜெபம்:
எங்களை நேசிக்கும் பரலோக பிதாவே, இந்த உலகத்தில் நாங்கள் எப்படி வாழ வேண்டும்? என்பதற்கு சிறந்த மாதிரியாக நீர் உள்ளதை எண்ணி துதிக்கிறோம். எங்களிடம் உள்ளவற்றை எல்லா சூழ்நிலையிலும் உமது நாமத்தின் மகிமைக்காக பிரயோஜனப்படுத்தி, உமக்காக ஊழியங்களைச் செய்ய உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.