
பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். மத்தேயு: 14.28
சீஷர்களை அக்கரைக்கு அனுப்பிவிட்டு, தனிமையில் மலையில் ஜெபம் செய்கிறார் இயேசு. அதன்பிறகு நடுகடலில் ஏற்பட்ட அலைகளில் சிக்கி தவிக்கும் சீஷர்களை நோக்கி, நாலாம் ஜாமத்தில் கடலின் மீது இயேசு நடந்து வருகிறார்.
இந்த காட்சியை பார்த்து, கடலில் பல காலமாக மீன் பிடித்து பழக்கமுள்ள சில சீஷர்கள், பயத்தில் இயேசுவை பார்த்து அடையாளம் தெரியாமல், ஆவி, பேய், பூதம் என்று அலறுகிறார்கள். ஏனெனில் அவர்களால் இயேசு கடலின் நடக்க வல்லமையுள்ளவர் என்று நம்ப முடியவில்லை.
இயேசுவை நம்பும் நமக்கு கூட சில சந்தர்ப்பங்களில், சீஷர்களின் நிலை ஏற்படுகிறது. எளிய காரியங்களை ஜெபத்தில் வைக்கும் நாம், கஷ்டமான அல்லது நடக்க வாய்ப்பே இல்லை என்ற காரியங்களை ஜெபிக்க தயங்குகிறோம். அப்படியே அரை மனதோடு ஜெபித்தாலும், அந்த காரியத்திற்கான மாற்று வழியை யோசித்து, அதை செய்து வைத்து கொள்கிறோம்.
இந்நிலையில் நாம் ஜெபிக்கும் காரியங்களுக்கு தேவன் பதில் தந்துவிட்டால், அதை ஏற்க கூட யோசிக்கிறோம். அதாவது பேதுரு இயேசுவிடம் கடலின் மீது நடக்க அனுமதி கேட்பது போல.
இப்படி காற்றையும் கடலையும் உண்டாக்கிய தேவனையே நாம் சில நேரங்களில் சந்தேகப்படுகிறோம் என்பது தான் உண்மை. அவரால் செய்யக்கூடாத அதிசயமான காரியங்கள் எதுவும் இல்லை என்று வாயில் சொல்கிறோம். ஆனால் நம் மனம் அதை சில நேரங்களில் நம்ப மறுக்கிறது.
கடலின் மீது நடக்க பேதுருவுக்கு அனுமதி அளிக்கும் இயேசு, படகில் இருந்து கூட்டிக் கொண்டு போக பக்கத்தில் வரவில்லை. மாறாக, அதே இடத்தில் இருக்கிறார். நம் கஷ்டங்களிலும் நெருக்கங்களிலும் இருந்து விடுதலை பெற, நாம் இயேசுவை நோக்கி செல்ல வேண்டியுள்ளது.
நான் ஒரு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவன், எனக்கு ஏன் இந்த சோதனை வருது? என்று கஷ்டத்தில் தொடரக் கூடாது. அதில் இருந்து வெளியே வர, இயேசு நோக்கி நாம் செல்ல வேண்டும். நம் வருகைக்காக இயேசு காத்திருக்கிறார். இப்படி, மனிதர்களின் கண்களுக்கு நடக்காது என்ற காரியத்தை நம்மை கொண்டே செய்ய வைக்கிறார் நம் ஆண்டவர்.
இயேசுவை பார்த்து கொண்டே படகில் இருந்து இறங்கி கடலின் மீது நடக்கும் பேதுரு, சில அடிகள் நடந்த பிறகு, தன்னை சுற்றிலும் உள்ள சூழ்நிலையை பற்றி யோசித்து, இயேசுவின் மீதான பார்வையை மாற்றுகிறார். இதனால் கடலில் மூழ்க ஆரம்பிக்கிறார்.
பல ஆண்டுகளாக கடலில் மீன் பிடித்து பழக்கமுள்ள பேதுருவுக்கு நீச்சல் தெரியாதா? நீந்தி வர வேண்டியது தானே, எதற்காக அலறுகிறார்? அங்கு தான் மனிதனின் எல்லையை நாம் அறிந்து கொள்கிறோம்.
என்ன தான் நமக்கு அனுபவம் மிகுந்த காரியங்களாக இருந்தாலும், சில சிக்கல்களில் இருந்து தப்ப தேவனின் உதவி நமக்கு தேவைப்படும். அந்த நேரத்தில் நாம் இயேசுவை நோக்கி பார்த்து முறையிட வேண்டியது அவசியம்.
சில பாவங்கள் நம்மை அடிமையாக்கி வைத்திருக்கலாம். மேலும் வியாதிகள், பலவீனங்கள், தீராத பகை உணர்வு போன்றவை நம் தூக்கத்தை கெடுக்கலாம். நம் நிலையை நாம் உணர்ந்தாலும், அதில் இருந்து வெளி்யே வர முடியாமல் சிக்கி தவிக்கலாம்.
இயேசுவிடம் அனுமதி கேட்டு கடலில் இறங்கிய பேதுருவின் பதற்றத்தை போல, இரட்சிக்கப்பட்டு தேவனுடைய வார்த்தையை கேட்டு வாழும் எனக்கு ஏன் இந்த நிலை? என்ற யோசனை எழலாம். இதற்கான ஒரே தீர்வு இயேசுவை நோக்கி பார்ப்பது மட்டுமே.
பேதுரு, இயேசுவை நோக்கி கூப்பிட்ட போது, அவர் கை நீட்டி தூக்கி விட்டார். மேலும் இருவரும் படகில் ஏறிய போது, காற்று சாந்தமானது. அதேபோல நம் தத்தளிப்பின் நடுவே இயேசுவை நோக்கி கூப்பிடும் போது, கஷ்டத்தின் நடுவே நாம் மூழ்கி போகாதபடி, கை நீட்டி நம்மை காப்பாற்றுகிறார்.
ஜெபம்:
எங்களை நேசிக்கிற அன்புள்ள ஆண்டவரே, எல்லா கஷ்டமான நேரங்களிலும் நீர் எங்களுக்கு உதவ தயாராக இருக்கிறீர் என்று பேசிய உம் வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எந்த சூழ்நிலையிலும், உம்மை நோக்கி பார்த்து, மனிதர்களின் பார்வையில் அதிசயமங்களையும் அற்புதங்களையும் செய்து முடிக்க எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.