0 1 min 2 mths

உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்ப விசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். மத்தேயு: 14.31

இயேசுவோடு பல சந்தர்ப்பங்களில் இருந்துள்ள பேதுருவிற்கு, தானும் இயேசுவை போல மாற வேண்டும் என்ற விருப்பம் அவ்வப்போது ஏற்பட்டுள்ளதை வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அவரது நடவடிக்கைகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இயேசுவை போல தானும் கடல் மீது நடக்க வேண்டும் என்ற பேதுருவின் விருப்பம் இதில் ஒன்றாகும். நாலாம் ஜாமத்தில், தனது சீஷர்கள் நடுகடலில் அலைகளில் சிக்கி கஷ்டப்படுவதை உணர்ந்த இயேசு, கடல் மீது நடப்பவராக அவர்களிடம் வருகிறார்.

ஆனால் பயத்தில் இயேசுவை அடையாளம் காண முடியாத சீஷர்கள், அவரை ஆவேசம் அல்லது ஆவி என்கிறார்கள். இயேசு அவர்களை தைரியப்படுத்திய போது, பேதுருவிற்கும் கடல் மீது நடக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது.

இயேசுவிடம் அனுமதி பெற்று கொண்டு, அவரையே நோக்கிக் கொண்டு நடந்த சீமோன் பேதுருவின் கவனத்தை, அவரை சுற்றிலும் வீசிக் கொண்டிருந்த அலைகள் திசைத் திருப்பின. இதனால் மேற்கொண்டு கடல் மீது நடக்க முடியாமல், கடல்நீரில் பேதுரு மூழ்க ஆரம்பித்தார். அதன்பிறகு பேதுருவின் கையை பிடித்து தூக்கும் இயேசு, அவரது அவிசுவாசத்தை களையுமாறு கூறுகிறார்.

இந்த உலகம் என்ற கடலில் இரட்சிப்பு என்ற படகில் விசுவாசம் என்ற துடுப்பை பயன்படுத்தி நாம் பயணிக்கிறோம். இந்த பயணத்தில் இயேசு நம்மோடு இருக்க வேண்டியது அவசியம். அவர் இல்லாமல் நாம் பயணிக்கும் போது, நம் விசுவாசத்தை சேதப்படுத்தி, இரட்சிப்பை கவிழ்த்து போட, ஆவிக்குரிய போராட்டங்கள் என்ற அலைகள் நம் படகு மீது மோதுகின்றன.

இந்த போராட்டங்களின் இடையே சிக்கித் தவிக்கும் நம்மை மீட்கும்படி, உலக வல்லமைகளை மேற்கொண்டவராக, கடல் மீது நடந்து நம்மிடம் இயேசு வருகிறார். அவரை போல நாமும் உலகப் பிரச்சனைகளை மேற்கொள்ள விரும்பினால், அவரை மட்டுமே நாம் நோக்கி பார்க்க வேண்டும்.

இயேசுவின் மீதான நமது கவனத்தை திசைத் திருப்ப இந்த உலக வல்லமைகள் போராடும். அவைகளை கண்டுக் கொள்ளாமல், நம்மை மீட்க வல்லவரான இயேசுவை மட்டுமே நாம் நோக்கி பார்க்கும் போது, இந்த உலகில் ஒரு ஜெயம் கொண்ட ஆவிக்குரிய வாழ்க்கையை நம்மால் வாழ முடியும்.

நமக்கு எதிராக வரும் போராட்டங்களின் மீதோ, சுய யோசனையின் மீதோ நமது கவனத்தை செலுத்தினால், இந்த உலகின் பிடிப்பில் அமிழ்ந்து போக நேரிடும். நமக்குள் அவிசுவாசம் என்ற தேவன் விரும்பாத மூழ்கும் நிலை ஏற்படும்.

சீஷர்கள் பயணித்த படகில், இயேசு பேதுருவுடன் ஏறிய பிறகு தான் காற்று அமர்ந்து சாந்தமாகிறது. அதேபோல நமது விசுவாச பயணத்தில் இயேசுவை எப்போது நம்முடன் வைத்துக் கொள்வோம். அப்போது நாம் சந்திக்கும் எந்த போராட்டத்திற்கும் எளிதில் தீர்வு உண்டாகும்.

ஜெபம்:

எங்களை நேசிக்கும் அன்பான தெய்வமே, ஆவிக்குரிய வாழ்க்கையில் நாங்கள் அனுதினமும் இந்த உலகம் என்ற கடலில் பயணித்து, பல போராட்டங்களை சந்திக்கிறோம். இந்நிலையில் அனுதினமும் உம்மையே நோக்கி பார்த்து வாழ்ந்து, எங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டுள்ள பரலோக ராஜ்ஜியம் என்கிற அக்கரைக்கு வந்து சேர உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *