0 2 weeks

…நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். மத்தேயு.21:22

இன்றைய அவசர உலகில், எந்த காரியமானாலும் நினைத்தவுடன் கையில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது. இதனால் ஏதாவது ஒரு காரியத்தை மனதில் நினைத்து கொண்டு ஜெபிக்கின்றனர். ஆனால் நம் ஜெபத்தில் சில காரியங்களை தேவன் எதிர்பார்க்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

சில நேரங்களில் நம் ஜெபத்தில் தேவன் விரும்பும் காரியங்கள் இல்லாததால், பதில் கிடைப்பதில்லை. இதை புரிந்து கொள்ள முடியாமல், தேவனை கேள்வி கேட்கும் நிலையும் பலரிடம் உண்டு. நாம் எப்படி ஜெபிக்க வேண்டும்? என்று இன்றைய தியான வசனத்தில் காண்கிறோம்.

தியான வசனத்தில் விசுவாசம், ஜெபம் என்ற இரு காரியங்களை காண்கிறோம். இந்த இரண்டு காரியங்களையும் ஒரு ரயில் தண்டவாளத்திற்கு ஒப்பிடலாம். அந்த தண்டவாளத்தின் நீளம் நீண்டுக் கொண்டே சென்று பரலோகத்தை எட்டி சேரும் போது, அதன் மீது ரயில் போல, தேவன் அளிக்கும் பதில் வருகிறது.

இன்று நம்மில் பலரும் ஜெபிக்கிறோம். ஆனால் அந்த ஜெபத்தில் விசுவாசம் இருப்பதில்லை. சில நேரங்களில் தேவனுடைய கிரியைகளின் மேல் அதிக விசுவாசம் இருந்தாலும், ஜெபம் செய்வதில்லை. ஆனால் தேவன் இந்த இரண்டு காரியங்களும் நம்மில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

அதேபோல நாம் தேவ சித்தத்தை அறிந்து ஜெபிக்க வேண்டியுள்ளது. தேவ சித்தமில்லாத காரியங்களை ஜெபித்துவிட்டு, எனக்கு கிடைக்கவில்லை என்று புலம்ப கூடாது. இயேசு கிறிஸ்து கூட சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக் கொடுக்க தயங்கி, பிதாவிடம் ஜெபித்தார். ஆனால் கடைசியில் என் சித்தமில்லை, உம் சித்தம் நடக்கட்டும் என்று ஒப்புக் கொடுத்தார்.

இயேசுவின் அந்த ஜெபத்திற்கு பதில் கிடைக்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர் சிலுவையில் அறையப்பட ஒப்புக் கொடுக்காமல் இருந்திருந்தால், இன்று உலக இரட்சகராக அவர் மாறி இருக்க முடியாது.

எனவே நாம் என்ன காரியத்தை ஜெபித்தாலும், இயேசுவை போல தேவ சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து ஜெபிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இனி வரும் நாட்களில் ஜெபிக்கும் போது, விசுவாசத்தோடு, தேவ சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து ஜெபித்து, தேவ ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வோம்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள ஆண்டவரே, எப்படி ஜெபிக்க வேண்டும் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்த உமது கிருபைக்காக ஸ்தோத்திரம். எவ்வளவோ சந்தர்ப்பங்களில் நாங்கள் விசுவாசமில்லாமல் ஜெபித்து, நேரத்தை வீணாக்கினோம். பதிலை பெற முடியாமல் தவித்தோம். அதன் காரணத்தை எங்களுக்கு வெளிப்படுத்திய கிருபைக்காக ஸ்தோத்திரம். இனி வரும் நாட்களில் தேவ சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து, விசுவாசத்தோடு ஜெபித்து, இயேசுவைப் போல மாற எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *